விருதுகளும் எதிர்ப்புகளும் -சந்திரா
அன்புள்ள ஜெ,
யுவபுரஸ்கார் விருது பற்றிய பொதுவெளிச் சர்ச்சைகளில் ஒன்றைக் கவனிக்கிறேன். ‘கருத்துச் சொல்ல இவர் யார்?’, ‘ நல்ல படைப்பு என்று அல்ல என்று சொல்ல இவருக்கு யார் உரிமை கொடுத்தது?’ ‘காலம் தீர்மானிக்கட்டும்’ ‘வாசகர்கள் முடிவுசெய்யட்டும்’ என்றவகையிலே கொதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பேராசிரியர் என அறியப்படும் சிலர் அப்படி எழுதுகிறார்கள். எழுத்தாளர் என சொல்லிக் கொள்பவர்கள்கூட அப்படி கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். அதையெல்லாம் கருத்து என்று சில இதழ்களில் வெளியிடுகிறார்கள்.
நவீன இலக்கியவிமர்சனம் என்னும் அறிவுத்துறை தொடங்கி முந்நூறாண்டுகள் ஆகின்றது. அதில் பல்வேறு சிந்தனைப்போக்குகளும் கொள்கைகளும் உள்ளன. இலக்கிய விமர்சனம் இங்கே கல்லூரிகளில் கற்பிக்கவும் படுகிறது. இவர்களெல்லாம் அதையெல்லாம் கேள்விப்பட்டதுகூட இல்லையா? இந்தப் பாமரப்புத்திக்கு தமிழில் அழிவே இல்லையா? அப்படி ஒரு பெரும் சோர்வு ஏற்பட்டது.
எம்.பாஸ்கர்
***
அன்புள்ள பாஸ்கர்,
உண்மையில் அவர்கள் பாமரர்களேதான். அவர்கள் தங்களைப்போன்ற இன்னொரு பாமரரையே படிப்பார்கள். ஆகவே அந்த அறியாமையின் இரும்புச்சுவரை எந்தச் சிறு செய்தியும் கடந்து அவர்களை எட்டுவதே இல்லை.
இலக்கிய விமர்சனம் என்பதன் கடமையே உரிய காலத்தில் தன் அளவீட்டை முன்வைப்பதுதான். உலகமெங்கும் அப்படித்தான். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அப்படித்தான்.
அவர்கள் கொதிப்பதே தங்களில் ஒருவர் விமர்சிக்கப்படுகிறார் என்பதனால்தான். அவர்கள் அஞ்சுவது விமர்சனத்தை மட்டுமே. அவர்கள் தங்களுக்குள் மாறிமாறி வரைமுறையே இல்லாமல் பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கவனியுங்கள், தமிழில் மிக அதிகமான பாராட்டுக்களும், விருதுகளும் பெறுபவர்கள் இந்த சுயஉதவிக் கும்பல்தான். அதை கொஞ்சம் கொஞ்சமாக சாகித்ய அக்காதமி போன்ற அமைப்புகளுக்குள்ளும் நுழைக்கிறார்கள்.
இது எவரோ எவருக்கோ அளிக்கும் விருது அல்ல. அப்படி அளிக்கப்படும் பலநூறு விருதுகள் இங்குள்ளன. அவற்றை பொருட்படுத்தவேண்டிய தேவை இல்லை. இதற்கு சாகித்ய அக்காதமியின் பெயர் இருப்பதனால்தான் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது.
இதை ஏன் கண்டிக்கவேண்டும்? இந்தப் போக்கு தொடரும் என்றால் தீவிரமாக எழுதுபவர்களிடம் ஆழமான சோர்வு உருவாகும். இங்கே ஏற்கனவே கல்வியமைப்புகள் முழுக்க இதேபோல கூட்டமாகச் செயல்படும் தன்ன்னலக் கும்பலால் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கே உள்ள அரசியலும், ஊழலும், சீரழிவும் நாமறிந்ததே. அவர்கள் அதே ஒருங்கிணைவின் ஆற்றலுடன் இலக்கிய அமைப்புகளையும் கைப்பற்றத் துடிக்கிறார்கள்
இதைக் கண்டிக்காமல் விட்டால் கேந்திர சாகித்ய அக்காதமி விருதுகளிலும் இப்போக்கு எதிரொலிக்கும். ஏற்கனவே நாம் நெடுங்காலமாக நாலாந்தர எழுத்துக்களை சாகித்ய அக்காதமி விருது கொடுத்து இந்திய அளவில் அறிமுகம் செய்து தமிழிலக்கியத்தின் கௌரவத்தைச் சீரழித்துள்ளோம். தமிழகத்துக்கு வெளியே எந்த இடத்திலும் நம் இலக்கியச் சூழலுக்கு எந்த மதிப்பும் இல்லாத நிலையே இருந்தது. தமிழில் நவீன இலக்கியம் இல்லை என்று இந்திய இலக்கிய அறிஞர்கள் இருபதாண்டுகளுக்கு முன்புகூட எழுதிக்கொண்டிருந்தார்கள். பல அரங்குகளில் நான் தலைகுனிவை அடைந்துள்ளேன். மிக ஆவேசமாக வாதிட்டிருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாகவே அந்த நிலைமை மாறிவருகிறது. மீண்டும் அந்த நிலைமை நோக்கி கொண்டுசெல்ல முயல்கிறார்கள். ஒரு பண்பாடு தன்னுடைய மிகச்சிறந்ததை மட்டுமே முன்வைக்கவேண்டும். அதன்வழியாகவே அதன் மாண்பும் அடையாளமும் நிலைநிறுத்தப்படும். சில்லறை அரசியலுக்காக தன்னலக்குழுக்களை ஆதரித்து நாலாந்தர எழுத்தை, பண்படா எழுத்தை முன்வைத்தோமென்றில் நம்மை நாமே இழிவுசெய்கிறோம். நம் முன்னோடிகளை இழிவு செய்கிறோம்
எண்ணிப்பாருங்கள், இந்த காளிமுத்து எழுதிய பத்து கவிதைகளை நாம் இந்திய கவிதையரங்கில் கொண்டுசென்று வைத்தால் நம்மைப்பற்றி என்ன சித்திரம் உருவாகும்? நமக்கு ந.பிச்சமூர்த்தி முதல் இன்று எழுதும் மதார் வரை ஒரு மிகநவீனக் கவிதை மரபு உண்டு. இந்திய மொழிகளிலேயே தமிழ்க்கவிதை அளவுக்கு நவீனமான கவிதை எந்த மொழியிலும் இல்லை. பிரமிளும் தேவதேவனும் தேவதச்சனும் அபியும் எழுதிய மொழி இது, நாம் எதை முன்வைக்கவேண்டும்?
மற்றமொழிகள் தங்கள் படைப்புகளில் மிகச்சிறந்தவற்றையே தேசிய அளவில் முன்வைக்கின்றன. விருதுகள் அளிக்கின்றன. ஆகவே நம்மைவிட பலமடங்கு தரம் குறைவான மொழிகளின் இலக்கியங்களுக்கெல்லாம்கூட நம்மைவிட பலமடங்கு மதிப்பு தேசிய அரங்கில் உள்ளது. நாம் நம்மை இழிவுசெய்துகொள்கிறோம். ஆகவே இதில் ‘அய்யோ பாவம். இளைஞர்’ என்பதுபோன்ற கரிசனங்களுக்கே இடம் இல்லை. இலக்கியத்துடன் சம்பந்தப்படாத அரசியலாளர்களின் கூச்சல்களுக்கு இடமில்லை.
குறைந்தது நம் தரப்பையாவது நாம் முன்வைக்கவேண்டும். நவீனத்தமிழிலக்கியத்தின் தரப்பு அது. இந்தியாவின் தலைசிறந்த நவீன இலக்கிய ஆக்கங்கள் உருவான ஒரு மொழியில் இருந்துகொண்டு இதைக்கூட நாம் செய்யாமலிருக்கக் கூடாது. கொஞ்சமாவது வாசிப்பவர்கள், கொஞ்சமாவது ரசனையும் தமிழ் நவீன இலக்கியத்தின்மேல் பற்றும் கொண்டவர்கள் செய்தாகவேண்டியது இது.
வெறுமே எனக்கெதிரான தனிநபர் காழ்ப்புகளினால் இந்தச் சிறுமையை தமிழ்மேல் ஏற்றிவைக்கலாகாது என்பதே நான் கோருவது.
ஜெ