சேலம் ஜெயலட்சுமி எழுதிய ‘சிலப்பதிகாரத்தில் இசைச்செய்திகள்’ என்ற நூல் எனக்கு ஆழமான ஓர் அதிர்ச்சியை அளித்தது. நெடுங்காலம் பல கோணங்களில் நான் ஆராய்ந்து படித்த ஒரு நூல் சிலப்பதிகாரம். கண்ணகியைப்பற்றி ஒரு விரிவான காப்பியநாவலை எழுத வேண்டும் என்ற கனவு கால்நூற்றாண்டாக என்னைத் தொடர்ந்தது. விளைவாகவே நான் கொற்றவையை எழுதினேன். ஆனால் நான் அறிந்த சிலப்பதிகாரம் என்பது ஒரு பகுதிமட்டும்தானோ என்ற எண்ணத்தை உருவாக்கியது ஜெயலட்சுமியின் நூல்.
சிலம்பின் முக்கியத்துவமே அதுதான். அது ஒரு முழுமையான காப்பியம். முழுமையான காப்பியம் என்பதன் அடையாளம் அது நான்கு வகையில் முழுமை கொண்டதாக இருக்கும் என்பதே. ஒன்று அது அது உருவான சமூகத்தின் வரலாறாகவும் இருக்கும். இரண்டு, அது ஒரு பண்பாட்டுக்களஞ்சியமாக இருக்கும் . மூன்று அது ஒரு உணர்ச்சிச்செறிவான மானுடக் கதையாக இருக்கும். நான்காவதாக ஏதோ ஒருவகையில் அது ஒரு மெய்ஞானநூலாகவும் இருக்கும். சிலப்பதிகாரத்துக்கு இந்தக்குணங்கள் அனைத்தும் உண்டு.
சிலம்பின் கதையின் உணர்ச்சிகரமும் அதில் உள்ள தரிசனமும் இன்றும் பெரிதும் விவாதிக்கபப்டுவது. தமிழ்ப்பண்பாட்டின் ஆழமான உள்ளுறையாக நூற்றாண்டுகள் வழியாக ஊறிப்போன ஒன்று அதன் மெய்ஞானம். அதன் வரலாற்று உட்குறிப்புகளும் பண்பாட்டு நுட்பங்களும்தான் மேலும் விரிவாகப்பேசப்படவேண்டியவையாக இருக்கின்றன. ஒரு கட்டத்துக்குப் பின்னர் தமிழில் அத்தகைய ஆழமான ஆய்வுகள் ஏதும் உருவாகாமல் ஆகிவிட்டன.
சிலப்பதிகாரத்தின் ஆசிரியருக்கு கலைகளில் இருந்த பெரும்பயிற்சியை ஆய்வாளர்கள் மீண்டும் மீண்டும் தொட்டுக்காட்டியிருக்கிறார்கள். யாழ் குறித்தும் இசை குறித்தும் அதில் வரும் தகவல்கள் தொன்மையான தமிழிசையை ஊகித்தறிவதற்கான பெரும்தகவல்களஞ்சியங்கள். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சிலப்பதிகாரத்தை தன் ஆய்வுமூலங்களில் முதன்மையானதாகக் கொண்டார். அந்த ஆய்வு சேலம் ஜெயலட்சுமி வரை நீள்கிறது.
மேலும் மேலும் அத்தகைய ஆய்வுகளுக்கு சிலம்பில் இடமிருக்கிறது. இன்று நாட்டாரியல் ஆய்வுகளும் மானுடவியல் ஆய்வுகளும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் ஆய்வுமுறைமைகளும் கருத்துருவங்களும் சிலப்பதிகாரத்தை பலகோணங்களில் ஆராய்வதற்கு நமக்கு உதவக்கூடும். அத்தகைய ஆய்வுக்கு இன்று மேலும் துல்லியமாக பதிப்பிக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் பிரதி தேவைப்படுகிறது. கடந்த கால்நூற்றாண்டில் அத்தகைய முயற்சிகள் செய்யப்படவில்லை. பழைய பிரதியை மறு அச்சு செய்வதே நடந்திருக்கிறது.
முனைவர் ப.சரவணன் சந்தியா பதிப்பக வெளியிடாக கொண்டுவந்திருக்கும் சிலப்பதிகாரம் பதிப்பு அத்தகைய ஒரு சிறந்த பதிப்பு என்று சொல்லலாம். ஆய்வுப்பதிப்புக்குரிய கவனத்துடன் எல்லாருக்குமான எளிய உரையுடன் வெளிவந்திருக்கிறது இந்நூல். ஏற்கனவே தமிழினி வெளியீடாக வந்த ‘அருட்பா மருட்பா விவாதம்’ என்ற முக்கியமான நூலை எழுதிய ஆய்வாளர் ப.சரவணன். அதில் அவர் ஆறுமுகநாவலருக்கும் வடலூர் வள்ளலாருக்கும் இடையே நடந்த அருட்பா மருட்பா விவகாரத்தை விரிவான ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார்.
மாணவப்பருவத்தில் வெ.சுப்ரமணிய ஆசாரி என்ப்வரின் ‘சிலப்பதிகார ஆராய்ச்சி’ என்ற நூலை தற்செயலாக வாசிக்க நேர்ந்ததும் அதன் விளைவாக சிலம்பில் ஈடுபாடு வந்து பாவலர் ஆ.பழநி அவர்களின் உதவியுடன் சிலப்பதிகார உரைகள் வழியாக பயணித்ததும் ஆசிரியரின் முன்னுரை வழியாகக் காணக்கிடைக்கிறது. பல உரைகளை நானே பரிசீலனைசெய்திருந்தாலும் ப.சரவணன் குறிப்பிடும் பெருமழைப்புலவர் உரையை நான் கண்டதில்லை. அத்தனை விரிவான உழைப்பு இந்நூலுக்குப் பின்னால் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு உரையை அமைத்ததன் நுட்பத்தை முன்னுரையில் ஆசிரியர் சொல்கிறார்.
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடியரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை
என்னும் வரிகளுக்கு அனைவரும் சுட்ட ஓடுகளால் வேயாமல் பொன் தகடுகளால் வேயப்பட்ட , குற்றம் நீங்கிய சிறப்புடைய. முடிசூடிய அரசரும் பிறர் அறியாமல் தங்கியிருப்பதற்கு ஏற்ற காவல் மனை’ என்று உரை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரைகள் பொருத்தமற்றவை என்று சரவணன் எண்ணுகிறார்.
பெருமழைப்புலவரது உரையில் ‘சுடுமண் சுமப்பதற்கு உரிய குற்றங்களைச் செய்யாத சிறப்புடைய நாடகக் கணிகையரின் மன்னர்களே வந்து தங்கும் வீட்டில் ..’ என்று பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. கணிகையர் தவறிழைத்தால் செங்கல் சுமக்கும் தண்டனைக்கு ஆளாவார் என்று மணிமேகலையில் சொல்ல்ப்பட்டிருக்கிறது. அத்தகைய குற்றமேதும் செய்யாத கணிகையர் என்று அவ்வரிகளுக்கு பொருள் என்கிறார் சரவணன்.
”மற்றவன் தன்னால் மணிமேகலைதன்
பொற்றேர் கொண்டு போவேனாகில்
சுடுமண் ஏந்தி அரங்குசூழ் போகி
வடுவோடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேனாகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகாஅ மரபினன் அன்றே”
என்று சித்ராபதி வஞ்சினம் சொல்லும் இடத்தை பெருமழைப்புலவர் சுட்டிக்காட்டுகிறார் என்கிறார் சரவணன். ஆகவே அந்த பொருளை தான் கொண்டதாகச் சொல்கிறார். இத்தகைய விரிவான ஆராய்ச்சியும் கவனமும் இந்நூலை முக்கியமான ஒன்றாக ஆக்குகிறது.
இன்னும் அவிழ்க்கமுடியாத பல நுண்ணிய வரலாற்றுத்தளங்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து
கான வாரணம் கதிர் வரவு இயம்ப
வரி நவில் கொள்கை மறை நூல் வழுக்கத்து
புரிநூல் மார்பர் உறைபதி சேர்ந்து…
[ சிலம்பு : மதுரைக்காண்டம். புறஞ்சேரி இறுத்த காதை]
என்னும் வரிகளி உதாரணமாகச் சொல்லலாம். வேனில் எங்கும் பரந்த, மூங்கிலும் அருகி நின்ற பொட்டல் காட்டில் காட்டுக்கோழி உதயத்தை அறிவிக்கும் நேரத்தில் [கோவலனும் கண்ணகியும் கவுந்தியும்] வேதநூல்களின் நெறியிலிருந்து வழுவி வரிப்பாடல்களைப் பாடும் கொள்கை கொண்டவர்களான முப்புரிநூல் அணிந்த பிராமணர்கள் வாழும் ஊரை அடைந்தார்கள்.
இங்கே குறிப்பிடப்படுபவர்கள் யார்? வரிப்பாடல் என்பது காதலையும் காமத்தையும் பாடும் பாடல். வேதத்தைத் துறந்து காமத்தைக் கொள்கையாக்கிய இந்த மறையவர்கள் யார்? கோவலன் அங்கே இருந்தவர்களுடன் யாழில் இசைப்பாடல்களை வாசித்து மகிழ்ந்து களிக்கிறான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
தன் மனைவியையும் கவுந்தியடிகளையும் அங்கேவிட்டுவிட்டு நீர் கொண்டுவரச்செல்கிறான். அங்கே கௌசிகனைக் கண்டுவிட்டு திரும்பிவந்து அந்த ஊருக்குள் நுழைகிறான். அங்கே இருந்தவர்கள் கொற்றவையின் கோலத்தை வருணித்துப் பாடிக்கொண்டிருந்தார்கள். ‘ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரில் பாங்குறச் சேர்ந்து’ என்று இளங்கோ சொல்கிறார்.
இங்கே கொற்றவை ‘ஆடு இயல் கொள்கை’ கொண்டவள் என்று சொல்லபப்டுவதை போர்க்கோலம் என்றுதான் எல்லா உரைகளிலும் பொருள்கொள்கிறார்கள். ஆனால் நர்த்தனமாடும் கொற்றவை குறித்த பல குறிப்புகளை நாம் சாக்தேய மரபுகளில் காணலாம் என்னும்போது இங்கே குறிப்பிடப்படுவது கொற்றவையின் வெறிநடனமாக இருக்கலாம் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது
அதன்பின் அவன் பாடிய முறையையும் பண்ணையும் விரிவான தகவல்களுடன் இளங்fகோ விவரிக்கிறார்.
செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழில்
தந்திரிகரத்தோடு திவவு உறுத்து யாத்து
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி
வரன்முறை வந்த மூவகைதானத்து
பாய்கலைபபவை பாடல் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக்கேட்டு
பாடல் பாணி அளையி…
என்று வரும் வரிகளை தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் முதல் சேலம் ஜெயலட்சுமி வரை விரிவாக விளக்கியிருக்கிறார்கள். சரவணன் நேரடியாக இச்சொற்கள் எதைக்குறிக்கின்றனவோ அதைமட்டும் சொல்லி முன் செல்கிறார்.
ஆனால் அந்த பிராமணர்கள் யார், அவர்கள் ஏன் பாலையில் தனித்து வாழ்ந்தார்கள் என்ற வினாவுக்கு பதில் இல்லாமல் இந்த இசைநுட்பங்களை முழுக்க புரிந்துகொள்ள முடியாது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் மதுரைக்கு வழி கேட்கிறான் கோவலன். அவர்கள் சொல்லும் வழிவருணனையில் பொதுவாக இத்தகைய வழிசுட்டல்களில் இருக்கும் கோயில்கள் மற்றும் தெய்வங்கள் பற்றிய குறிப்பே இல்லை. மாடல மறையவன் முன்பு மதுரைக்குச் சொன்ன வழியை இங்கே ஒப்பிடு நோக்கலாம். இவர்களின் வழிவிவரிப்பில் உணவு, மது, மலர்கள், நறுமணங்கள் போன்ற வருணனைகள் மட்டுமே உள்ளன.
ஆகவே இவர்களை சார்வாகமதம் போன்ற அன்றைய உலகாயதவாத மதத்தைப் பின்பற்றிய பிராமணர்கள் என்று நான் என் கொற்றவை புதுக்காப்பியத்தில் விவரித்துக்கொண்டேன். காமம் மட்டுமே புருஷார்த்தம் என்று நம்பியவர்கள் அவர்கள். வியப்பளிப்பது என்னவென்றால் நூல் நெறி வழுவாத மறையவரால்தான் மழைபெய்யும் என்னும் குறிப்புகளை சங்க இலக்கியத்தில் மீளமீளக் காண்கிறோம். இங்கே நூல் நெறி வழுவிய மறையவரக்ளின் ஊரே இருக்கிறது. அவர்கள் மன்னனை புகழ்ந்தும் பேசுகிறார்கள். ஆக, மன்னன் அவர்களையும் காத்திருக்கிறான்
இக்கேள்விக்கு நான் கொற்றவையில் ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறேன். வேதநூல் வழுவிய வைதிகரே பண்டைய மருத்துவம், ரசவாதம் போன்ற பயன்தரு கலைகளின் அதிபர்களாக இருந்தார்கள் என்று. அது ஒர் இலக்கிய ஊகம் மட்டுமே. ஆய்வுக்கு மேலும் நெடுந்தூரம் செல்லவேண்டும். இந்த இசைவிவரணையில் அதற்கான குறிப்பு இருக்கிறதா, ஆடும் கொற்றவையில் குறிப்பிருக்கிறதா என்று ஆராயலாம்.
இந்நூலின் விரிவான பின்னிணைப்புகளும் ஆய்வுக்கு மிக உதவியானவை. சிலப்பதிகாரப் பதிப்புகள் குறித்த தகவல்கள், சிலப்பதிகார மொழிபெயர்ப்புகளின் தகவல்கள் , சிலப்பதிகாரத்தில் பேசப்படும் இசைச்செய்திகளைப் பற்றிய அறிமுகம் என விரிவான தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சிலப்பதிகாரம் இன்னும் கண்டடையப்படாத எத்தனையோ பண்பாட்டு ஆழங்கள் கொண்ட ஒரு மூல நூல். அத்தகைய ஆய்வுகளை மரபான தமிழறிஞர்களிடம் இருந்து இனிமேல் எதிர்பார்க்க இயலாது. அவர்களின் வழக்கமான தமிழாய்வுக்கு வெளியே புதிய நோக்குகள் நிகழ வேண்டும். அதற்கு சமகாலத் தமிழ் நடையில் அமைந்த,மிகையான பாண்டித்திய பிரகடனங்கள் இல்லாத, இனப்பெருமை மொழிவெறி என்றெல்லாம் வழிவிட்ட தாவல்கள் இல்லாத, நேர்மையான சிலப்பதிகாரப் பிரதி அவசியம். அந்தத் தேவையை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார் சரவணன்.
[சிலப்பதிகாரம்- எல்லோர்க்குமான எளிய உரையுடன். ஆசிரியர் ப.சரவணன். சந்தியா பதிப்பகம் சென்னை]
தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்
தமிழின் நல்லூழ்:இரா. சோமசுந்தரம்
இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா
ஜெயமோகனின் கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து”:அ.ராமசாமி