நண்பர் ராம்குமார் வடகிழக்கு மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிகிறார். அங்கே முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் என் அறம் கதைகளின் மொழியாக்கமான Stories of the True வை சந்திப்புப் பரிசாக அளித்ததை படமாக அனுப்பியிருந்தார்.
ஒரு சிறந்த தொடக்கச் செயல் அது. இத்தகைய சந்திப்புகளில் தமிழ்ப்பண்பாட்டை அறிமுகம் செய்யும்பொருட்டு திரும்பத் திரும்ப பழைய செவ்வியல்நூல்கள் அல்லது அரசியல்வாதிகளின் எழுத்துக்களை அளிப்பதே வழக்கம். அவை பெரும்பாலும் எவராலும் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் நவீனமொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு சமகாலப் படைப்பு பெரும்பாலும் வாசிக்கப்படும். மிக எளிதாகச் சென்றடையும்.
சமகாலத் தமிழிலக்கியத்திற்கு எதையேனும் செய்யவேண்டுமென எண்ணம் கொண்டவர் செய்யக்கூடிய ஒரு நற்செயல். அப்படி ஒரு புதியநூலை அளிப்பவரின் மதிப்பும் உயரும். அறம் வரிசைக் கதைகள் நல்லெண்ணத்தை, உயர்விழுமியங்களை முன்வைப்பவை. நம் அலுவல்சந்திப்புகளில், நட்புச்சந்திப்புகளில் பரிசாக அறம் வரிசைக் கதைகள் அளிக்கப்படுமென்றால் அது தமிழிலக்கியம் அறிமுகமாவதற்கான சிறந்த வழியாக அமையும்
(உண்மையில் தமிழரல்லாதவர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே அந்நூல் வழங்கப்படலாம். பலர் ஆங்கிலத்திலேயே நன்றாக வாசிக்கும் திறன் பெற்றவர்கள்)