ரிச்சர்ட் டைலர் – ஓர் இனிய சந்திப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நான் சினிமா பிரமோக்களில் பங்கெடுப்பதில்லை என்னும் நெறி கொண்டிருந்தேன். அதில் ஒருவகையான ‘சம்மல்’ உள்ளது. அது நம்மை நாமே முன்வைப்பது போல. என்னுடைய நூல்களுக்கு புத்தகவெளியீடுகளை தமிழினி பதிப்பகமும் பின்னர் உயிர்மையும் ஒருங்கிணைத்துள்ளன, இருபதாண்டுகளுக்கு முன்பு. அதன்பின் அவற்றையும் தவிர்த்துவிட்டேன்.
ஆனால் இன்று பொன்னியின்செல்வன் மேடையில் ஏறியே ஆகவேண்டிய நிலை. சூப்பர் ஸ்டார்களே பிரமோக்களுக்குச் சென்றாகவேண்டுமென்பது கட்டாயம். (நான் சின்ன ஆணியாக இருந்துகொள்வதனால் இப்போதும் பெரும்பாலும் தவிர்க்கமுடிகிறது).
ஆங்கிலநூல்களைப் பொறுத்தவரை அவை சினிமாக்கள் போலத்தான். இயல்பாக இலக்கிய உரையாடல்கள் நிகழ்வது, அவற்றினூடாக மதிப்பீடுகள் உருவாவது அச்சூழலில் இல்லை. ஏனென்றால் பெரும்பாலும் பெரிய ஊடகங்களை நம்பியே அவ்வணிகம் நிகழ்கிறது. நூல்கள் வந்து குவிகின்றன. இந்தியா முழுக்க இருந்து வரும் நூல்கள். ஆகவே பிரமோக்கள் தவிர்க்கவே முடியாதவை.
அத்துடன் ஒன்று உண்டு. வங்க ஆங்கிலப் படைப்புகள் ஏராளமாக வருகின்றன. ஆகவே இந்திய இலக்கியங்களின் ஆங்கில வாசகர்கள் வங்கப் பண்பாட்டுச்சூழலை கொஞ்சம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். மலையாளம், கன்னடம் சார்ந்துகூட அப்படி ஒரு பரிச்சயம் வாசகர்களுக்கு உள்ளது. தமிழிலிருந்து குறைவாகவே நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. குறைவாகவே கவனிக்கவும்பட்டுள்ளன. நாம் இன்றுகூட தென்னிந்திய இலக்கியம் என்னும் ‘லேபில்’ சூடி மலையாள, கன்னட இலக்கிய நிழலில் நிற்கவேண்டியிருக்கிறது. அசோகமித்திரனை சகரியாவும், அரவிந்த் அடிகாவும் அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது.
நம்மவர் தமிழ் நூல்களையும் குறைவாகவே வாங்குகிறார்கள். ஆங்கிலத்தில் வரும் தமிழ் நூல்களை அதைவிடக்குறைவாகவே வாங்குகிறார்கள். தமிழிலோ ஆங்கிலத்திலோ தமிழ் எழுத்துக்களை படிப்பதே ஒரு படி குறைவானது என்னும் மனநிலையும் நிலவுகிறது. ஒரு தமிழ் நூலின் அமேசான் அல்லது குட்ரீட்ஸ் பக்கத்தின் கீழே சென்று பார்த்தாலே தெரியும். மிகமிகக்குறைவாகவே எதிர்வினைகள் இருக்கும். நம்மவர் எவருமே எழுதுவதில்லை.
ஆகவே ரிச்சர்ட் டைலரின் இந்த புகைப்படம் எனக்கு ஒரு பரவசத்தை அளித்தது. அவர் அதை வாசிக்கிறார், எங்கோ ஓர் அயல்பண்பாட்டில் பிறந்தவர். அமெரிக்காவின் ஏதோ நகரில் இருந்து அக்கதைகளை அவருடைய மொழியில் வாசிக்கிறார்.