தத்துவ வகுப்புகள் நடத்துவது என்னும் முடிவு முன்னரே எடுத்தது. அதை அறிவித்து ஓர் பதிவு இரவு 12 மணிக்கு வலையேறியது. காலை 7.30க்கு இடங்கள் நிறைந்துவிட்டன. இடமில்லை என மறு அறிவிப்பும் வெளியிட்டோம்.
ஆனாலும் தொடர்ந்து பலர் இடம்கோரி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது ‘வகுப்பு’ அல்ல. ஆகவே பெருந்திரளாகக் கலந்துகொள்ள முடியாது. ஒவ்வொருவரின் மீதும் ஒரு கவனம் இருக்கவேண்டும்.
ஏனென்றால் இது நம் கல்லூரிகளிலுள்ளதுபோல பாடங்களை ‘சொல்லும்’ முறை அல்ல. அடிப்படையில் தத்துவப்படுத்துதல் (philosophizing) என்பதே முதலில் பயிற்றுவிக்கப்படும். தத்துவரீதியாக சிந்தனை செய்தலை கற்பித்தல். அதிலுள்ள பிழைகளை தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டுதல்.
அதன்பின் தத்துவம் என்றாலென்ன என்பதன் அறிமுகம். அதன்பின்னரே தத்துவத்தின் ஒட்டுமொத்தச் சித்திரம்.
இப்போதைக்கு, இந்து மெய்மரபுகள் சார்ந்த தத்துவம் மட்டுமே கற்பிக்கப்படும். பிற மரபுகள் பிற்பாடு கற்பிக்கப்படலாம். குறிப்பாக பௌத்த, சமண, கிறிஸ்தவ மெய்யியல்கள்.
இந்து தத்துவங்களைப் பொறுத்தவரை அவை வெறுமே கொள்கைகள், தர்க்கமுறைகள் மட்டுமல்ல. அவை ஒட்டுமொத்த வாழ்க்கைப்பார்வைகளும், செயல்முறைகளும்கூட. அவற்றை அப்படித்தான் மரபான அமைப்புகளில் கற்பிக்கிறார்கள்.
இந்த அமர்வுக்கு மேலும் மேலும் நண்பர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அடுத்து இதே அமர்வை மீண்டும் அக்டோபரில் நடத்த எண்ணுகிறோம். இப்போது விண்ணக்க முடியாதவர்கள் அதில் பங்குகொள்ளலாம்.
(ஆனால் இந்த அமர்வுக்கு விண்ணப்பித்தபின் வராமல் அச்சந்திப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி இல்லை. கற்பதன்பொருட்டு சற்றேனும் தயாராக உள்ளவர்கள் மட்டும் வந்தால்போதும் என்பதே எங்கள் நிலைபாடு. மேலும் மாற்றிக்கொண்டே இருப்பதற்குரிய குமாஸ்தா எவரும் இங்கில்லை. அதையும் நானே செய்யவேண்டும்.)
ஜெ