தேவதேவனும் ஏசுவும்

அன்புள்ள ஆசிரியருக்கு ,

கவிஞர் தேவதேவனின் உலகம் கிளை விட்டெழுந்த பறவைகளாலும் அவை அசைத்திட்ட மரக்கிளைகளாகவும் இருக்கிறது. பெருமரக்கிளைகளின் வழி சல்லரிக்கப்ட்ட ஒளி விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் பகலில் பூமியில் சன்னமாய் விழுகிறதாக, ஒளிப்புள்ளிகளின் வழி விண்ணை நோக்கிக்கொண்டே இருக்கிறார்.

பெருவெளியை எழுதித்தீர்க்கும் அந்த மென்மையான கைகள் விசும்பின் துளிக்கரங்களே எனத் தோன்றுவதுண்டு எனக்கு.

ககனப்பெருவெளியை  அள்ளிப்பருகிட வாய்த்திட்ட எளிய உயிரொன்றின்  ஞானப்பித்து அவரின் கவிதைகள்.

எத்துணைப் பேரொளியுடன் 

ஈரத் தரையில் 

ஒரு பழுப்பு இலை 

மரித்த பின்னும் மரணம் என்பதே அறியாது 

காற்றுவெளியில் நடமிட்டபடியே 

தரையிறங்கி..!!

ஒரு பல்லுருக்காட்டியின் வழியே மரக்கிளைகளை அண்ணாந்து பார்த்தவாறே இருக்கிறார் தனது சொற்கள் தோறும்.

மழலை கலைத்திட்ட கோலம், பாதங்களில் ஒட்டி அள்ளி அணைத்திட்ட தந்தையின் சட்டையில் படிவதுபோல, இங்கொன்றும் அங்கொன்றுமாய் இலைகளும் கிளைகளும் பறவைகளும் நம் மனமெங்கும் அப்பிக்கிடக்கிறது.

மரக்கிளைகளிடையே 

துண்டு வானம்.

கிளைகளோ அதனைத் 

தங்கள் இதயத்தில் 

வைத்திருக்கின்றன.

ஒளி ஏற்றிருந்த 

கொத்துக் கொத்தான 

கிளைகளின் உள்ளெல்லாம் 

கண் குளிர்க்கும்  இன்னிருள்.

விண்ணினின்று மண்ணுக்கு தாற்காலிகமாய்க் குடிபெயர்ந்திட்ட கந்தர்வன் தன்னைச் சுற்றியிருக்கும், அடர்ந்திருக்கும் தேவப்பிரசன்னங்களை அவ்வப்போது நேரிடுகின்ற மொழிச்சட்டகமொன்றினில் வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கும் கவிமொழிகள் அவரின் கவிதைகள்.

எந்த நியத்தமும் இல்லாத, எந்த கட்டுக்களுமில்லாத, விண்ணுலாவியொருவன் வேண்டிவிரும்பி இப்பூவுலகில் இறங்கி ஆதர்சிக்கும்

சொற்களையுடையது இக்கவிதைகள்.

அறியாப்பதர் விட்டெறியும் கற்களில் விழுவது கனிகள் மட்டுமல்ல … பூக்களும் இலைகளும், கனியாகவிருப்பவைகளும்தான்.

வேர் அறிந்த இலைகளும், பூக்களும் நீரையறிந்த மீன்களும், வானையறிந்த பறவைகளும் கூடிக்களிக்கும் உன்னதத்தை இயற்கையறியா மனிதன் எட்டிட முடியுமா என்கிறார் கவிஞர்.  இம்மொழிகள் எட்டிடாச் செவிகளையெண்ணி மனம் ஒருகணம் விம்மத்தான் செய்கிறது.

“….கேள் கவனி பார் 

தியான மென்றும் 

பாதை என்றும் 

காதல் என்றும் 

கவிதை என்றும் 

பிறிதேதுமில்லை “

“கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றார் ” —- மத்தேயு 13:9

ஆம்… கவிஞர் தாம் இயேசு என்றதை நான் பேருவப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். இயற்கையின் சுவிசேஷம்.

அன்புடன்,

இ. பிரதீப் ராஜ்குமார் 

முந்தைய கட்டுரைஜெயமோகன் 60
அடுத்த கட்டுரைசாரு, இரு கேள்விகள்