விருதுகளும் எதிர்ப்புகளும் -சந்திரா

தமிழ் இலக்கியச் சூழலில் மிக மோசமான போக்கு தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜெயமோகன் ஒரு விசயத்தை விமர்சனம் செய்துவிட்டால், அவர் மீது இருக்கும் வெறுப்பால் அவருக்கு எதிராக பொங்கும் மனநிலை இங்கு நிலவுகிறது. அதாவது ஜெயமோகன் செய்திருப்பது சரியான விமர்சனம் என்றாலும் அவர் சொல்லிவிட்டார் என்பதற்காகவே, சரியற்ற விசயத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை இங்கே எடுக்கப்படுகிறது. இது மிகப்பெரும் கருத்துக் கொலை அல்லது உண்மையை, அறத்தை அழித்தல் ஆகும்.

இப்போது யுவபுரஸ்கார் விருது பற்றி ஜெயமோகன் விமர்சனம் செய்ததால் அவருக்கு எதிராக நிற்கிறோம் என்ற பெயரில், தகுதியற்ற படைப்புக்கு ஆதரவாக கருத்துகள் எழுவது, நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிய முட்டுக்கட்டையைத்தான் விளைவிக்கும்.

தற்போது வழங்கப்பட்ட யுவபுராஸ்கார் பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளர்களின் படைப்பைகளையும்,விருத்துக்கு அனுப்பி பட்டியலில் இடம்பெறாத எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாசித்தால், ஒரு இலக்கிய வாசிப்பாளனு க்கு விருதுக்கு தகுதியான படைப்புகள் எவை என்பது தெளிவாகவே புரிந்துவிடும்.

கருத்து கூறுபவர்கள் எந்த படைப்புகளையும் வாசிக்காமலேயே ஜெயமோகன் சொல்லிவிட்டார் என்பதால் அதற்கு எதிர் நிலைப்பாட்டை எடுப்பது மூடத்தனம்.

ஜெயமோகனைத் தாண்டியும் பல எழுத்தாளர்கள் யுவபுராஸ்கார் விருதுக்கு எதிராக முகநூலில் பதிவு செய்திருப்பதைக் காணலாம்.

ஒரு குறிப்பிட்ட அதிகாரம் ஒரு விருதின் மீது செலுத்தும் அதிகாரத்தை எதிர்க்க வேண்டுமே தவிர ஜெயமோகன் மீது கொண்ட வெறுப்பால் அதை ஆதரிப்பது அறமற்ற செயல்.

தவிர தமிழ் இலக்கியத்தில் ஜெயமோகன் நிகழ்த்தியிருக்கும் பங்களிப்பு நாம் யோசித்து பார்க்க முடியாதது. தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன் என்பதை உலக இலக்கியத்தைக் கற்ற நல்ல வாசகியாக உறுதியாகக் கூறுவேன். அந்த வகையில் நல்ல எழுத்துக்கள் எவை என்பது குறித்து ஜெயமோகன் கருத்து தெரிவிப்பதும் விமர்சனம் செய்வதும் மிக முக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன்.

அதைப்போல எளியவர் பெரும் அங்கீகாரத்தை ஜெமோ எதிர்க்கிறார் என்பதும் தவறானது. ஏனெனில் பட்டியலில் இடம்பெற்ற பல எழுத்தாளர்களும் கவிஞர்களும், பட்டியலில் இடம்பெறாத பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் மிக எளிமையான பின்னணியில் இருப்பவர்கள்தான். அதில் தகுதியானவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்ற பலரின் ஆதங்கம்.

தகுதியான ஒன்றை ஆதரிப்பதே இலக்கிய வளர்ச்சி. ஏனெனில் விருது பெறும் படைப்பு பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதால் தமிழ் இலக்கிய படைப்பின் தற்போதைய தரத்தை தீர்மானிப்பதாகவும் அது இருக்கும் என்பதை தமிழ் உலகம் புரிந்து கொள்வது நலம்.

சந்திரா தங்கராஜ்

(முகநூல் பதிவு)

வீண்விருதுகள்

யுவபுரஸ்கார் விருது

முந்தைய கட்டுரைதத்துவ அறிமுக வகுப்பு, இடம் நிறைவு
அடுத்த கட்டுரைஉணர்வின் ஆழத்திலிருந்து ஒரு மடல்