விருதுகள், இளைஞர்கள்.

யுவபுரஸ்கார் விருது

வீண்விருதுகள்

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலமே. சாகித்ய அக்காதமி யுவபுரஸ்கார் பற்றிய உங்கள் குறிப்பைப் பார்த்தேன். வழக்கம்போல ஜெயமோகனுக்குப் பொறாமை, நாட்டாமை செய்கிறார், வன்மகுடோன் இத்யாதி வசைகள் வந்துகொண்டிருக்கும். இணையத்தில் நிறைய பார்த்தேன். இதை நீங்கள் சொல்லியாகவேண்டுமா? அண்மையில் இளம் எழுத்தாளர் படைப்புகள் பற்றி எதிர்மறையாக எதுவும் சொல்லமாட்டேன் என்று எழுதியிருந்தீர்கள். அதனால் கேட்டேன்.

எஸ்.

***

அன்புள்ள எஸ்,

உண்மை, இளம் படைப்பாளிகள் பற்றி எதிர்மறையாக ஏதேனும் சொல்லி நெடுநாட்களாகின்றது. சொல்லப்போவதுமில்லை. முக்கியமானவர்கள் என்று தோன்றினால் மட்டுமே அவர்களை முன்னிறுத்தி சில சொற்கள் சொல்கிறேன். அது முந்தைய தலைமுறை படைப்பாளிகள், இலக்கிய விமர்சகர்கள் செய்யவேண்டிய பணி.

இந்த விருது வராவிட்டால் இவரைப் பற்றியும் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டேன். எழுதவரும் எவரும் அடிப்படையில் நம் சமூகத்தில் மிக அரியவர்கள், ஆகவே முக்கியமானவர்கள் என்றுதான் எப்போதும் சொல்லிவருகிறேன்.

*

இதுபற்றி நிறையவே வசைகள் வந்துவிட்டன. என் வாசகர்களுக்கு அவ்வசைகளில் ஒரு சொல்லும் புதியவை அல்ல. பெரும்பாலானவை என்னை ஒருவன் அடித்ததை எண்ணி மகிழ்பவை. இலக்கியம், முற்போக்கு என்றெல்லாம் இவர்கள் சொல்லிக்கொள்ளும் செயல்பாடு இவர்களுக்கு அளிக்கும் பண்புநிலை இதுதான்.

ஆனால் இன்னமும்கூட புதிய வாசகர்கள், இளையவர்கள் இந்த விவாதம் வழியாக இங்கே வரக்கூடும். அவர்களுக்கான ஐயங்களை போக்கும்படியாக எப்போதும் சொல்லிவருவதையே மீண்டும் சொல்கிறேன்.

அ. இலக்கியவிமர்சனம் என்பது இலக்கியப்படைப்புகளை மதிப்பிடுவதும், தரமானவற்றை முன்வைப்பதும்தான். அவ்வாறு தரமானவற்றை முன்வைக்கையிலேயே தரமற்றவையை புறக்கணிக்கவும் வேண்டியிருக்கிறது. இல்லையேல் தரம் என்பதற்கே இடமில்லை. எல்லாமே ஒன்றுதான் என்றால் அங்கே ரசனை இல்லை, ரசனை இல்லையென்றால் இலக்கியச் செயல்பாடே இல்லை. ஓர் ஓட்டலில் சாப்பிடுவதற்குக் கூட நாம் தரம் பாக்கிறோம். நல்ல ஓட்டலை சிபாரிசு செய்கிறோம். எல்லா ஓட்டலும் சமம் என்று சொல்வதில்லை.

ஆ. அப்படி ஓர் இலக்கிய விமர்சகன் சொல்லும் மதிப்பீடும் பரிந்துரையும் அவனுடைய ரசனை, அறிவுத்தளம் சார்ந்தவை. அவன் அதுவரை சொல்லிவந்தவற்றின் நீட்சியாகவே அவன் சொல்லும் கருத்துக்கள் அமைகின்றன. தமிழில் கவிதை பற்றி மிக அதிகமாக எழுதிய விமர்சகன் நான். தமிழிலெழுதிய ஏறத்தாழ எல்லா நல்ல கவிஞர்கள் பற்றியும் விரிவான ஆய்வுகள் எழுதியிருக்கிறேன். நூல்களாக அவற்றை வெளியிட்டிருக்கிறேன். என்அழகியல் பார்வை என்ன, என் மதிப்பீடுகளென்ன என அவற்றில் மீண்டும் மீண்டும் வகுத்துச் சொல்லியிருக்கிறேன். என் அழகியல்பார்வை க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன் வழிவந்த ஒன்று. அதை வாசகர் பரிசீலிக்கலாம், இல்லை மறுப்பதென்றால் அதற்கான வாசிப்பை செலுத்தலாம்.

இ. ஒரு விருது ஒருவருக்கு அளிக்கப்படுவதென்பது ஓர் இலக்கியமதிப்பீடு முன்வைக்கப்படுவது. அது முற்றிலும் ஏற்பற்ற ஒன்று என்றால் அதை கண்டிப்பதே விமர்சகனின் பணி. சரியானவற்றுக்கு விருதுகள் சென்று சேர அதுவே வழி. தரமான படைப்பாளிகள் இருக்க எந்த அடிப்படைத் தகுதியும் அற்ற ஒருவருக்கு வழங்கப்படும் விருது இலக்கியச் செயல்பாட்டுக்கே எதிரானது. மறுபடியும் ஓட்டலுக்கே வருகிறேன். உங்களூரிலேயே ஒரு மகாமட்டமான ஓட்டலுக்கு ஊரின் மிகச்சிறந்த ஓட்டல் என விருதளிக்கப்பட்டால் அதை கண்டிப்பீர்களா மாட்டீர்கள? ஓட்டலுக்கு அளிக்கும் இடத்தையாவது இலக்கியத்துக்கு அளிக்கலாமே?

ஈ. சென்ற முப்பதாண்டுகளாக தரமான படைப்புகளை எழுதிவரும் ஏராளமான இளம் படைப்பாளிகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவருகிறேன். அவர்களுக்கான மேடைகளை உருவாக்குகிறேன். அதில் சாதி,மதம், இனம் ஏதும் பொருட்டல்ல. அவ்வாறு அறிமுகமான பலர் இன்று தமிழின் முதன்மைக் கவிஞர்கள். அவர்களை முன்னிறுத்துவது இலக்கியவிமர்சகனாக என் கடமை, என் பார்வையை முன்வைப்பது அது என்பதனால்தான்.

*

சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளில் நான் கொண்டுள்ள அளவுகோல் ஒன்றே, எவ்வகையேனும் இலக்கியம் என்னும் வட்டத்திற்குள் செயல்படுபவராக இருந்தாலே போதும். இலக்கியம் என்னும் இயக்கம் மீது நம்பிக்கை கொண்டு, ஓர் அடிப்படை இலக்கியத்தகுதியை அடைந்திருந்தாலே போதும்.

அந்தத் தகுதிகூட இந்த இளைஞரின் படைப்புகளுக்கு இல்லை என்பதையே சொல்ல வருகிறேன். இளைஞர்கள் எழுதவரவேண்டும். நம்பிக்கையுடன் எழுதவேண்டும். கவிதைகள் உடனடியான வாசிப்பை, ஏற்பை அடைவதில்லை. காத்திருக்க நேரலாம். தொடக்கத்தில் ஒருவரிடமிருந்து முதிர்ச்சியான ஆக்கங்கள் வராமலிருக்கலாம். அது பிழையல்ல, அதிலிருந்து முன்னகர்வதே முக்கியமானது.

ஆனால் எந்தத் துறையானாலும் அந்தத் துறை பற்றிய ஓர் அடிப்படைப் பயிற்சியை அடைந்தாகவேண்டும். அந்தத் துறையில் என்ன நடந்திருக்கிறது என்று தெரிந்திருக்கவேண்டும். எழுத்து மட்டுமல்ல, ஒரு வணிகம் செய்வதாக இருந்தாலும் அங்கே என்ன நடக்கிறது என்று கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும். அதில் எதையேனும் கூடுதலாகச் செய்யவேண்டும் என்னும் முனைப்பு வேண்டும். அவ்வாறு செய்தபின் உருவாகும் பெருமையை மட்டுமே ஏற்கும் மனநிலை வேண்டும்.

அதாவது நான் எதிர்பார்ப்பது ஓர் அடிப்படைப் பயிற்சியையும் தகுதியையும் மட்டுமே. அதுகூட தேவையில்லை என ஒரு விருது அறிவிக்கும்போது இலக்கியம் என்னும் அமைப்பே கேலிக்குரியதாகிறது. எழுத்து, வாசிப்பு இரண்டுமே அபத்தமாகிறது.

மொண்ணைகளான மூன்று பேராசிரியர்கள் ஓர் இளைஞனின் அடிப்படையான மனநிலைகளை மழுங்கடிக்கிறார்கள் என்பதே இந்த விருதின் பொருள். (அதற்கு பொள்ளாச்சிப் பிதாமகர்களின் ஊடுருவல் காரணம் என தெரியாதவர்கள் சின்னக்குழந்தைகள்.) கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டும் அல்ல அவர்கள், இகழப்படவேண்டியவர்கள். (ஆர்.ராஜேந்திரன், டி.பெரிய சாமி, எம்.வான்மதி) தமிழ்ச்சமூகத்தின் அனைத்து வகை அவமதிப்புக்கும் உரியவர்கள் அவர்களே.

இப்படி ஒரு விருது அறிவிக்கப்பட்டதும் அத்தொகுப்பை உடனடியாக படித்து, அக்கவிஞர் மீதான ஒரு மதிப்பீட்டை முன்வைக்க இன்று அக்கறைகொண்டவர் மிகச்சிலரே. அவ்வாறு கருத்து சொன்னால் வரும் வசைபாடல்களை பொருட்படுத்தாமலிருக்கும் நிமிர்வு கொண்டவர் அதனினும் சிலர். பெரும்பாலானவர்கள் இங்கிருக்கும் அசடுகளின் வசைகளை எண்ணியே அமைதியாகிவிடுவார்கள். ஆகவே நான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இது சொல்லப்பட்டே ஆகவேண்டும்.

வசைகளை கவனித்திருப்பீர்கள். இது வேறு வழியே இல்லாமல் நான் செய்வது. க.நா.சு, சுந்தர ராமசாமி என அவ்வாறு வசைபெறுவதற்கு ஒரு மரபு இங்கே உண்டு. அடுத்த தலைமுறையும் வரவேண்டும்.

அத்துடன் அந்த இளைஞர், அவருக்கு அடிப்படை நுண்ணுணர்வு ஒருவேளை இருந்தால், இதில் இருந்துகூட ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறமுடியும். அவர் சீண்டப்படட்டும். என்னை அவர் வசைபாடுவதும் கூட பிரச்சினை இல்லை. ஆனால் அவர் வாசிக்கட்டும், நல்ல கவிதைகளை எழுதிக்காட்டட்டும். மொண்ணைகளின் வாழ்த்தை விட இக்கண்டனமே மதிப்புமிக்க வழிகாட்டல் என அவர் அதன்பின் புரிந்துகொள்வார்.

ஜெ

எழுத்து கவிதை இயக்கம்

பாரதிதாசன் பரம்பரை

நாமக்கல் கவிஞர் மரபு

வானம்பாடி கவிதை இயக்கம்

முந்தைய கட்டுரைநாககுமார காவியம், இறுதிக் காப்பியம்
அடுத்த கட்டுரைதத்துவ அறிமுக வகுப்பு, இடம் நிறைவு