சடங்குகள் தேவையா? -கடிதம்

பேரன்புள்ள திரு.ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். நலந்தானே? மிகச்சரியான நேரத்தில் உங்கள் சடங்குகள் தேவையா  கட்டுரை என் கண்களில் அகப்பட்டது என் பாக்யமென கருதுகிறேன்.  அவ்வப்போது தங்களது தளத்தில் வாசிப்பவன்தான், அன்றாடம் முடியவில்லை. இருந்தாலும் வாசிக்கும் தருணங்களில் என்னை முழுமையாக கொடுத்துவிடுவேன்.

கடந்த “ஆவணி அவிட்டம்” தினத்தன்று நான் மிகமிக குழப்பமாக இருந்தேன்.  ஊரில் இருக்கும்போதூதான் இச்சடங்கைப் பின்பற்ற முடிந்தது. இம்முறை ஏனோ ஒரு சலிப்பு.  கோயிலுக்குச் சென்றால் அர்த்தம் புரியாமல் இயந்திரதனமாக செய்யவேண்டுமே என்கிற அலுப்பு. மேலும் எனக்கும் கடவுளக்கும் உள்ள ஆத்மார்த்தமான பரிவர்த்தனைகளை இம்மாதிரி சடங்குக்குள் என்னை எப்படி ஒப்படைக்கும் முடியுமென ஆதங்கமாகவும், கவலையாகவும் சென்ற நேரத்தில், அலுவலகத்திற்கு ஆயுத்தமான சமயத்தில் எனது தாயார் பலகாரங்களையும் செய்துவிட்டு, பஞ்சபாத்திரங்களையும், பூணூலையும் தயாராக வைத்திருந்தது என்னை என்னவோ செய்துவிட்டது.

மிகமிக எளிமையாக எந்தவிதமான சடங்கு முறைகளை பின்பற்றாமல் அம்பாளிடம் வேண்டிக்கொண்டே செய்துக்கொண்டேன். ஆசுவாசமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இறைவன் அளித்த வரம் என்று அன்றைய தினம் அனுகூலமானது. மனமும் சஞ்சலத்திலிருந்து விடுப்பட்டது. அப்பொழுதுதான் இக்கட்டுரை என் கண்களில் பட்டது.

குரு ஒருவர் வேண்டுமென்பார்களே, அத்தருணங்களை உணர்ந்தேன், தங்களது கருத்தால். தெளிவு பெற்றேன். வம்சாவழியாக வரும் எந்தவிதமான சடங்குகளுக்கும் முரணின்றி ஆட்பட முனைவேன், அதற்கான விளக்கங்களும், முறையான வழிமுறைகளையும் கண்டு, எளிமையாகவும்  வழிநடத்தவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டேன். இதுதான் என் மூத்தோர்களுக்கு நான் செய்யும் பிரதியுபகாரம். அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்த தலை

முறைகளுக்ககாகவும்.

என் மனமார்ந்த நன்றிகள் பல.

இப்படிக்கு என்றென்றும்

அன்புடனும், நட்புடனும்

கி.பா.நாகராஜன்

*

அன்புள்ள ஜெ

சடங்குகள் தேவையா ஓர் அரிய கட்டுரை. நம்மில் பலருக்கு சடங்குகள் செய்வதில் தயக்கம். காரணம்,தங்களை அறிவுஜீவிகள் என்னும் எண்ணம் கொண்டிருப்பது. ஆனால் கொஞ்சநாள் கழித்து குற்றவுணர்வு. காரணம் ஆழத்தில் எல்லா நம்பிக்கையும் இருப்பது. இரண்டுக்கும் நடுவே ஊடாடுபவர்களுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை அளித்த கட்டுரை இது. வாழ்த்துக்கள்

சங்கரநாராயணன்

முந்தைய கட்டுரைதத்துவக்கல்வி, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரையதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, மாடு!