அன்பின் ஜெ,
நலம்தானே?
பல வருடங்களுக்குப் பின் சென்ற வாரத்தில் “இயற்கையை அறிதல்” இரண்டாம் முறை படித்தேன். முதல் வாசிப்பில் தவறவிட்ட அர்த்தங்களை சுட்டல்களை இம்முறை அடையாளம் காண முடிந்தது மிகுந்த சந்தோஷம் அளித்தது.
இம்முறை படித்தபோது இவ்வழகிய சிறு நூல் பழைய நினைவுகள் பலவற்றைக் கிளறியது. ஏதேதோ எண்ணங்கள். திறப்புகள். அறிதல்கள். ஒரு பத்தி படித்துவிட்டு பின் ஓடும் மனத்தை சிறிது நேரம் கழித்து உணர்ந்து பிடித்து இழுத்துவர வேண்டியிருந்தது. எழுத்தோ, சினிமாவோ, இசையோ… எனக்கு அது என்ன தந்தது, என் உள்ளுக்குள் எதைக் கிளறியது, எனக்குள் எது ஒத்ததிர்ந்தது என்று சொல்லத்தான் ஆசையாய் இருக்கிறது. அதை பதிவு செய்தால் போதும் என்று தோன்றுகிறது. மற்றபடி கோட்பாடுகளையும், இஸங்களையும் அறிந்துகொள்வதில் மிகுந்த தயக்கம் இருக்கிறது.
இம்முறை நூலோடு கைபிடித்துக்கொண்டு பொருள்புரிந்து கவனம் பிசகாமல் பயணிக்க முடிந்தது.
அந்த முழுமையை, நிலவை எத்தனையோ விரல்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஏன் ஐந்திலிருந்து (பூதங்கள்) ஐந்து வழியாக (பொறிகள்) செல்லும் (புலன்கள்) எல்லாமே ஏதோ ஒருவகையில் அதை நினைவூட்டத்தான் செய்கின்றன. புரிந்தாலும், புரியாவிட்டாலும், அறிந்தாலும், அறியாவிட்டாலும் சுற்றிலும் அப்பூரணத்தின் அருள்மழை பொழிந்து கொண்டேதான் இருக்கிறது. அதனுள்தான் நாம் நிகழ்கிறோம். மீனின் கேள்வி ஒன்று ஞாபகம் வருகிறது. “இந்த நீர், நீர் என்கிறார்களே, அது எங்கிருக்கிறது?”.
இரவு. வானில் முழு நிலவு. சலனமில்லா குளத்து நீரில் அதன் பிம்பம். நாம் குளத்து நிலவைப் பார்த்து “ஆஹா…நிலவு” என்கிறோம். ஒரு விரல் மேலே சுட்டி “சத்” அங்கிருக்கிறது அங்கே பார் என்கிறது. ஓஷோ சொல்கிறார், “விரலைப் புடிச்சி தொங்காதே; விரலுக்கு நன்றி சொல்லிவிட்டு அது சுட்டுவதை மேலே பார்/போ” என்கிறார். முழுமையின் பிரதிபலிப்புகள் அனைத்தும் முற்றிலும் அதன் கருணையன்றி வேறென்ன?. புலன்களின் உணவெல்லாம் அதன் ஆசிகளல்லவா?. விருந்தின் சுவை அறிவதற்கான “ஒரு சோறு” பதங்கள்/விள்ளல்கள்.
“ஒளிரும் ஒளியே!ஒளிரும் ஒளிக்கிடமே! எண்ணில் ஒன்றுமில்லா வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே! அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே!”. ஆம், நாம் அறியும்/உணரும் அளவிற்கு அது சுருங்கி தன்னை வெளிக்காட்டிக் கொள்வது அது நம் மேல் கொண்ட அன்பினால். தயையினால். இல்லையென்றால் அதன் விராடத்தை நம்மால் தாங்கமுடியுமா?. விஸ்வரூபத்தின் முன் நடுங்கிய மனம் நினைவுக்கு வருகிறது. நாம் தயாராகும் முன்பு அது நமக்கு முழுமையாய் காட்சி தருவது நம்மை சிதைக்கும் என்றறியும் கணம் ஒரு திறப்பின் கணம். அதுவரை அவ்வன்பின் துளித்துளி பிரசாதங்களில் பரவசமடையவே கொடுத்துவைத்திருக்கிறது நமக்கு.
மார்கழிகளின் வைகறைகள் எதையோ எனக்கு அளிக்கின்றன என்ற நிறைவு எல்லா வருடங்களிலும் எனக்கு வருவதுண்டு. தொண்ணூறுகளின் இறுதி வருடங்களில் ஒரு மார்கழி. அப்போது ஓசூரின் காரப்பள்ளி அருகே செந்தில் நகரில் குடியிருந்தோம். செந்தில் நகர் அப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்த குடியிருப்பு. தள்ளித் தள்ளி மொத்தமே பத்து/பனிரெண்டு வீடுகள்தானிருக்கும். முகப்பில் சாலையோரமாகவே ஒரு விநாயகர் கோவில். காரப்பள்ளியிலிருந்து விஜயராகவன் தினமும் பூஜை செய்வதற்கு வந்துகொண்டிருந்தார். மார்கழிகளின் அதிகாலை பூஜைகள் விஸ்தாரமாய் இருக்கும். வைகுண்ட ஏகாதசி தினத்தின் வைகறை. என்றுமில்லாத வழக்கமாய் ஆரத்தியின் போது விஜயராகவன் உள்ளே கூப்பிட்டார். நான் தயங்கி அணிந்திருந்த வேஷ்டி தடுக்கிவிடாமல் படிதாண்டி கரு நுழைந்தேன். அலங்காரத்தில் அது. தொங்கிக் கொண்டிருந்த அகல்களில் சுடர்கள். “சிற்றஞ்சிறுகாலே…” பாடிக்கொண்டே ஆரத்தி தட்டில் விபூதியின் மேலிருந்த சூடக்கட்டியை எடுத்து அகலின் சுடரில் பற்றவைத்து தட்டிலிட்டு என்னிடம் தந்தார் விஜயராகவன். மூன்று முறை ஆரத்தி சுற்றி முடித்து அந்த முகத்தின் முன் காட்டியபோது தழலில் ஒளிர்ந்த முகம் சட்டென்ற ஒரு ஆழ்ந்த துக்கத்தை தொண்டையில் உருவாக்கியது. என்னவென்று தெரியாமல் கண்கள் நிறைந்தது.
பூஜை முடித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு ஒவ்வொருவராய் கிளம்பிச் சென்றனர். விஜயராகவனும் சைக்கிளில் வயர் கூடையை மாட்டிக்கொண்டு கிளம்பிப் போனார். நான் கோவில் படிக்கட்டுகளின் ஓரத் திண்டில் உட்கார்ந்திருந்தேன். எதிரில் ராமநாதன் சார் உட்கார்ந்திருந்தார். ராமநாதன் சார், செந்தில் நகருக்கும் ஒன்னல்வாடிக்கும் நடுவிலிருந்த “சுவா எக்ஸ்ப்ளோசிவ்”-வில் வேலை செய்பவர். மேலாளர். என் அப்பா வயது. அவரிடம்தான் சில மாதங்களுக்கு முன்பு காயத்ரி மந்திர உபதேசம் வாங்கியிருந்தேன். தேடலின் கேள்விகளோடு அவரிடம் சென்று அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதுண்டு.
மார்கழியின் காலைக் காற்றில் மெல்லிய குளிரிருந்தது. ராமநாதன் சாரிடம் கோவிலுக்குள் கைகாட்டி “இது என்ன? யார் இது?” என்று கேட்கத் தோன்றியது. கேட்க நினைக்கும்போதே உள்ளுக்குள் அவர் என்ன பதில் சொல்வார் என்றும் தோன்றியது. “அதே கேள்வி உன்னைப் பார்த்தும் கேட்டுக்கலாமே? எழுத்தோ, காட்சியோ, கல்லோ, மரமோ, மனுஷனோ, மலையோ…எதுவோ… முன்னாடி இருக்கிறதா முக்கியம்? அதைப் பார்க்கும்போது உனக்குள்ள என்ன நடக்குன்றதுதானே முக்கியம்?
இப்படி பலசமயம் ஆனதுண்டு. 2001 அல்லது 2002 என்று நினைக்கிறேன். ஒரு யோகா பயிற்சி வகுப்பில் திறந்த வெளி குடிலில் நாற்பது/ஐம்பது பேரில் ஒருவனாய் கீழே உட்கார்ந்திருந்தேன். எல்லோருக்கும் சிறிய நோட்டுப்புத்தகமும் பேனாவும் தரப்பட்டது. பாடமெடுத்த காவியணிந்த அண்ணா “எல்லாவற்றையும் தரவல்ல குரு உங்கள் முன்னிருந்தால், நீங்கள் அவரிடம் என்னென்ன கேட்பீர்கள்? பத்து நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எழுதுங்கள்” என்றார். “உனக்கு என்ன வேணும்?” என்னைக் கேட்டேன். திடுக்கென்றது. கைகள் ஓடவில்லை. அப்போதும் யோசிக்க யோசிக்க துக்கம் போன்ற ஒன்று மேலெழுந்தது. பத்து நிமிடங்கள் அமைதி. நேரம் ஆனபின் ஒவ்வொருவராய் எழுந்து வாசிக்கச் சொன்னார் அண்ணா. மூன்றாவது வரிசையில் மத்தியில் அமர்ந்திருந்த இளைஞனின் முறை வந்தபோது அவன் எழக்கூட இல்லை. தலைகுனிந்து கேவிக்கேவி அழுதான்.
பணியிடப் பண்ணைகளில் பல நேரங்களில் ஆஸ்டெர் பூக்களின் மத்தியில் அமைதியான் உச்சிவெயில் நேரத்திலோ, அந்தி துவங்கும் நேரத்தில் அலுவலகத்தின் பால்கனியிலோ மனம் இளகி கரைவதுண்டு. கிஷோரி அமோன்கரின் தும்ரி குரல் கேட்டு அம்முவிற்கு ஏன் அழுகை வருகிறது?. ஜஸ்ராஜ் கச்சேரியில் நண்பன் மிஸ்ரா ஏன் கண்களில் நீர்வழிய உட்கார்ந்திருந்தான்?. ஒரு மலைப் பயணத்தின்போது “எந்தரோ மஹானுபாவுலு” கேட்டு எதனிடமோ தாழ்பணிந்து வணங்கி கேவி அழவேண்டும்போல் எனக்கு ஏன் தோன்றியது? கலைகளும், இலக்கியமும், அழகும், இயற்கையும் ஏதோ ஒன்றை எனக்குள் சுட்டுகிறதே அது என்ன?.
“இயற்கையை அறிதல்” ஒரு அடர்த்தியான செறிவான சுட்டு ஜெ. ஒரு “நில்…கவனி…அறி”. மொழிபெயர்ப்பிற்கு மிக்க நன்றி. ஆங்கிலத்தில் வாசித்திருந்தால் இந்த அளவிற்கு உள்வாங்கியிருப்பேனா என்பது சந்தேகமே.
பூரணம் சுட்டும் விரல்களில் ஒன்றுதான் “இயற்கை”யோ?. மிகவும் அண்மையான விரல் என்று அதை சொல்லலாமா?. அதுவேதான் பூரணமோ என்ற மயக்கம் தரும் விரல் இல்லையா?. “இயற்கை” என்பதுதான் எத்தனை பிரம்மாண்டமான, ஆழமான சொல்!
வெங்கி