அன்புள்ள ஜெ,
வெந்து தணிந்தது காடு உங்கள் கதை என்று கேள்விப்பட்டேன். கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்தக் கதை எந்த தொகுதியிலிருக்கிறது? நாவலாக எழுதப்பட்டதா?
பிரபாகர் எம்.
***
அன்புள்ள பிரபாகர்,
கொஞ்சம் தேடித்தான் பாருங்கள்.
அந்தக் கதையின் பெரும்பகுதி சினிமாவுக்காக எழுதப்பட்டது. சினிமாவின் தேவைக்காக மாற்றப்பட்டு, எடிட்டிங்கில் மறுதொகுப்பாகி, இறுதிவடிவம் அமைந்தது.
அக்கதை உண்மையான ஒருவரின் வாழ்க்கையை அடியொற்றியது. (ஆனால் புனைவுக்காக நிறையவே மாற்றப்பட்டுள்ளது. நேரடியாக எவரையும் குறிக்கவில்லை) கொஞ்சம் சினிமாவுக்காக ‘கிளாமரைஸ்’ செய்யப்பட்டாலும் அடிப்படையில் யதார்த்தமானது.
உண்மையான வாழ்க்கைக்கு சில இயல்புகளுண்டு. சினிமாக்கதைக்காக உருவாக்கப்படும் செயற்கையான ‘திரில்’ அதில் இருக்காது. சவால்விடுவது, சொல்லி அடிப்பது, திகைக்கவைக்கும் திருப்பங்கள், நம்பமுடியாத சாகசங்கள், மிகையான ஹீரோத்தனம், பயங்கரச் சண்டைகள் எல்லாம் இருக்கமுடியாது.
அதேபோல மெய்யான வாழ்க்கை என்றால் ஒரு பகுதி சாதாரணமாக நாம் அறிந்ததாகவே இருக்கும். முற்றிலும் புதியதாக இருக்காது. அந்த வாழ்க்கையில் ஒரு பகுதி நம் வாழ்க்கையில் எப்படியும் நடந்திருக்கும். முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருக்காது.
மெய்யான வாழ்க்கையில் செயற்கையாக ‘டெம்போ’ ஏற்ற முடியாது. கூடாது. கதை ஒருவகையான ஆற்றொழுக்குத்தன்மை கொண்டிருக்கும். கௌதம் வாசுதேவ் மேனன் அந்தவகையான கதையை விரும்பினார். அவருடைய உலகம் அது, யதார்த்தம்.
அப்படியென்றால் அதில் என்ன இருக்கும்? உண்மையான வாழ்க்கையில் உள்ள தத்தளிப்பும், போகும்பாதை சரிதானா என்னும் அலைக்கழிப்பும், சிக்கிக்கொண்டு விடுபடத் தவிப்பதும் இருக்கும். மனித குணங்களின் விசித்திரங்கள் இருக்கும். எல்லாவற்றையும் விட விதி மனிதர்களை தூக்கிக் கொண்டுசெல்வது இருக்கும். நம் வாழ்க்கை எப்படியோ அதிலும் கொஞ்சம் இருக்கும்.
அப்படிப்பட்ட படம் வெந்து தணிந்தது காடு. வன்முறை இருந்தாலும் அடிப்படையில் மென்மையான உணர்ச்சிகளின் கதை. வெளியேற முயலுந்தோறும் சிக்கிக்கொள்வதன் யதார்த்தம். நாம் அனைவரும் வாழும் வாழ்க்கையின் இன்னொரு வடிவம்.
ஜெ