இன்று சவார்க்கரை ஓர் மாபெரும் தேசியத்தலைவராக முன்வைக்கிறார்கள். காந்தியை நீக்க சவார்க்கரை பயன்படுத்துகிறார்கள். சவார்க்கர் மெய்யான தியாகி என்கிறார்கள். சவார்க்கர் ஊர்வலங்கள் நிகழ்கின்றன. இந்தப் போக்கு மிக ஆபத்தானது என நினைக்கிறேன். உங்கள் எதிர்வினை என்ன?
சரண்ராஜ்
அன்புள்ள சரண்
எனக்கு இப்போது அரசியல்பேச ஆர்வமில்லை. சலிப்பாக உள்ளது. பேசவேண்டியவற்றை பெரும்பாலும் பேசிவிட்டேன் என நினைக்கிறேன். நீங்கள் கேட்டதனால் சுருக்கமாக.
சவார்க்கரை இந்துத்துவர் முன்வைப்பதும் சரி, அதை இடதுசாரிகள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பதும் சரி இன்றைய அரசியலின் வியூகம் சார்ந்தவையே ஒழிய எந்த நீடித்த கொள்கையைச் சார்ந்தவையும் அல்ல. தாங்கள் ஒன்றைச் செய்யும்போது அது முழுநியாயம், எதிரி செய்வது முழுஅநியாயம்- அவ்வளவுதான் இதிலுள்ள தரப்புகள்.
சவார்க்கர் சார்ந்து இன்று வலதுசாரிகள் செய்வதை நேற்று சுபாஷ் சந்திரபோஸ் சார்ந்து இடதுசாரிகள் செய்தனர். சுபாஷை முன்வைத்து காந்தியை இழிவுசெய்வது பல ஆண்டுகள் நடந்தது. இது அதன் மறுபக்கம். எப்போதுமே இப்படி எவரேனும் எடுத்து முன்வைக்கப்படுகிறார்கள்.
அவ்வாறு முன்வைக்கப்படுபவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு ‘அதிதீவிர’ முகம் கொண்டவர்கள் என்பதைக் காணலாம். அந்த அதிதீவிரங்களை காந்தியின் சமரசப்போக்குக்கு, அகிம்சைக்கு, நீடித்த செயல்பாட்டுக்கு எதிரானதாகக் காட்டுவார்கள்.
ஆனால் அந்த அதிதீவிரங்கள் எல்லாமே நடைமுறையில் தோல்வி அடைந்தவை. அத்தோல்வியின் பொறுப்பை அந்த தலைவர்மேல் சுமத்தாமல் அவர் ‘பழிவாங்கப்பட்டவர்’ ‘வஞ்சிக்கப்பட்டவர்’ என்னும் பிம்பங்களை உருவாக்குவார்கள். இதெல்லாமே பரப்பியல் அரசியலின் செயல்முறைகள்.
மக்களுக்கு அதிதீவிர பிம்பங்கள் தேவைப்படுகின்றன. கதைநாயக பிம்பங்கள். பிரச்சினைகளை அதிரடியாக தீர்ப்பவர்கள். பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை தாங்களே எடுத்துக்கொள்பவர்கள். மக்களின் காவலர்கள், அதாவது ஒருவகை நாட்டுப்புற காவல்தெய்வங்கள்.
காந்தி மக்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர். அவர்களே அதை தீர்த்துக்கொள்ளவும், போராடவும் வழிகாட்டுபவர். எச்சிக்கலும் ஒரேயடியாக தீர்க்கப்படமுடியாது என்றும், மெல்லமெல்லவே தீர்வுகள் வந்துசேரும் என்றும், அதுவரை தொடர்முயற்சி தேவை என்றும் சொல்பவர்.காந்திய வழிமுறை என்பது எதிர்ப்பு அல்ல, தன்னை மேம்படுத்திக் கொள்ளுதல். காந்தி முன்வைக்கும் உணர்ச்சி கொந்தளிப்பு அல்ல, பொறுமை. காந்தி சொல்லும் வழி என்பது அழிப்பதும் உடைப்பதும் அல்ல, ஆக்குவது.
காந்தியைப் போன்றவர்களை புரிந்துகொள்ள மெய்யாகவே அக்கறையுடன் சமூகத்தை புரிந்துகொண்டு செயல்படுபவர்களால்தான் முடியும். போலியாக மிகைக்கூச்சலிடுபவர்கள், அரசியல் வெறியர்கள், முதிரா இளமையின் மிகை கொண்டவர்கள், தங்கள் பொறுப்பை ஏற்க மறுப்பவர்களுக்கு உரியவரல்ல காந்தி.
சவார்க்கர், சுபாஷ் இருவருமே தியாகிகள். ஐயமில்லை. அவர்களின் தேசப்பற்றுமீது எனக்கு ஐயமில்லை. ஆனால் இருவருமே இருவகையில் ஃபாசிசம் நோக்கி நம்மை கொண்டு சென்றுவிட வாய்ப்பிருந்தவர்கள். சுபாஷ் நம்மை ஜப்பானியரிடம் மாட்டிவிட்டிருக்கக் கூடும். சவார்க்கர் பிரிட்டிஷாரின் மதவாரியாக தேசத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையானார்.
சவார்க்கர், சுபாஷ் இருவருமே சமரசங்கள் செய்துகொண்டனர். சுபாஷ் சயாம் மரணரயிலில் பல ஆயிரம் இந்தியர், தமிழர், ஜப்பானியரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதை கண்டும் காணாமல் இருந்தார். சவார்க்கர் மதவெறியால் நிகழ்ந்த பலிகளை உதாசீனம் செய்தார்.
தீவிரநிலைபாடு என்பது சருகு எரிவதுபோல. எரிந்து எழுந்து சாம்பல்தான் எஞ்சும். அது உடனடிக் கவற்சி கொண்டது, நீண்டகால அளவில் அழிவையே எஞ்சவைப்பது.
காந்தி ஒரு சமையல் அடுப்பு. எரிந்தெழாது, அணையவும் செய்யாது. சமைக்கும், பசியாற்றும்.