வாழ்தலும் வள்ளுவமும்

சமண வள்ளுவர்

தமிழ் சித்தர் மரபு படி திருக்குறள் எழுதிய நமது திருவள்ளுவரின் கூற்றுப்படி பிறவிக் கடலை நீந்திக் கடக்க ஆசையற்றுப்போகும் பட்சத்தில் அமைதியும் ஆனந்தமுமேயான வாழ்க்கை ஒருவரை இன்னும் வாழ ஆசைப்பட வைக்குமேயொழிய ஆசையற்றிருப்பது சாத்தியமல்லவே

மேலும் அமைதியும் ஆனந்தமாக வாழ்பவர்கள் வாழ ஆசைப்படாதது முரணாக உள்ளது. தயைகூர்ந்து விளக்க முடியுமா?

தங்களின் அறம் நூறு நிலங்களின் மலை படித்து கொண்டிருக்கிறேன். என்னமோ இந்த கேள்விகளை உங்களிடம் மட்டுமே கேட்க தோன்றிற்று.

ஏ.முருகேசன்

***

அன்புள்ள முருகேசன்,

ஏனோ இத்தகைய கேள்விகள் நிறைய வருகின்றன இப்போது. நான் எல்லாக் கேள்வியையும் உகந்த கேள்வியாக ஆக்கிக் கொள்கிறேன்.

பிறவிப்பெருங்கடல் நீந்துவது பற்றி வள்ளுவர் சொல்வதன் பொருள் என்ன? சமண , இந்து மரபுகளின்படி இந்தப் பிறவியில் அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை அடைந்து நிறைவுறுபவர் வீடுபேறு அடைகிறார். வீடுபேறு என்பது மறுபிறவி என்னும் சுழலில் இருந்து விடுபடுவது. அதையே பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடத்தல் என்கிறார்.

அதாவது இங்கே அறம் நிறைந்து, அவ்வறம் செய்வதற்கான பொருள் அடைந்து, இன்பமும் நிறைந்து வாழ்ந்து செல்வதையே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுவே வீடுபேறு.

ஒருவர் வாழ்வின் இறுதியில் இவ்வாழ்வில் நிறைவுற்றேன் என அகத்தே உண்மையாக உணர்வார் என்றால் அவர் வீடுபேறு அடைகிறார். குறையுடன் உணர்கிறார் என்றால் அவர் விடுதலை அடையவில்லை.

அதற்கு வாழ்ந்து நிறைவது முக்கியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று அதையே வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவர் வாழ்வைத் துறக்கச் சொல்லவில்லை. சிறக்க வாழும்படிச் சொல்கிறார். வாழாது செல்லச் சொல்லவில்லை. வாழ்ந்து நிறையவே அறிவுறுத்துகிறார்.

ஜெ

முந்தைய கட்டுரைசாரு, காளிபிரசாத்
அடுத்த கட்டுரைசு.வேணுகோபாலுக்கு தன்னறம் விருது