நெல்லையின் தூண்கள்

தமிழ்ப் பண்பாட்டு அழிப்பு

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றிருந்தபோது, கோவில் மணி மண்டபத்தில் உள்ள கூட்டுத்தூண்களில் (இசைத்தூண்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படும் தூண்களில்) அணில்களின் சிற்பங்கள் இருப்பதைக் கவனித்தேன்.

மரத்தண்டுகளில் ஏறி இறங்கும் அணில்களின் பாவனையிலிருக்கும் அச்சிற்பங்களை காண்கையில், சிற்பி அத்தூண்களை மரங்களாக உருவகிக்கிறாரோ என்ற எண்ணம் ஒரு கணம் எழுந்தது.  அவ்வெண்ணம் வளர்கையில் கூட்டுத்தூண்களில் கொத்தாக அமைந்திருக்கும் சிறுதூண்களை மூங்கில்கள் என்றும், மணிமண்டபத்தை நிறைந்திருக்கும் அத்தூண்கொத்துக்களை வேணுவனநாதருக்கு கல்லால் அமைந்த மூங்கில் காடு என்றும் காணமுடிந்தது.

இத்தூண்களின் cluster போன்ற அமைப்பு,  பக்கவாட்டில் செதுக்கப்பட்டிருக்கும் அணில்கள், சில தூண்கொத்தின் தலைப்பகுதியில் செகுக்கப்பட்டிருக்கும் குரங்குகள், வேணுவனம் எனும் பெயர், கோவிலின் தல விருட்சம்,  முதலியவற்றை கருதுகையில் அவை மூங்கில்வனக் காட்சியாக இருக்கலாம் என்ற interpretationக்கு இடமிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அதேசமயம் தூண்கொத்தில் உள்ள தூண்கள் தனித்தூண்கள் என்றே கருதும் வகையில் தூண்களுக்கான உறுப்புகளுடனும், பல்வேறு அலங்கார வேலைபாடுகளுடன் இருப்பது அவை மூங்கில்களெனும் விளக்கத்தை ஐயமுறச் செய்கின்றன.

மரபாக உருவாகி வந்ததொரு கட்டுமான வடிவமைப்பை அதற்குறிய இலக்கணத்துடன் அமைத்து அதற்கு மூங்கில் மரங்களெனும் மேலதிக அர்த்தமேற்ற அணில்களை அச்சிற்பி செதுக்கியிருக்கலாமா? என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

இக்கேள்விக்கு விடைகண்டு மேல்செல்ல பிறகோவில்களில் உள்ள இவ்வகைத்தூண்களுடனான comparitive study,  காலவரிசைப் பட்டியல், இவ்வகைத்தூண்கள் அடைந்த பரிணாம வளர்ச்சி, இத்தூண்கள் அமைப்பதற்கான இலக்கணம் முதலியவற்றை குறித்த புரிதல் அவசியமாகிறது.

இத்தூண்களின் அழகியல், வரலாறு சார்ந்து கட்டுரை நூல்கள் வாசிக்க கிடைக்கிறதா? இத்தூண்களுக்கு ஆய்வாளர்கள் கொடுக்கும் விளக்கம் என்ன?

கலைப்படைப்பை ஆய்வாளரல்லாத ஒரு பொது ரசிகன் தர்க்கப்பூர்வமாக அணுகுவது சரியா? அவ்வணுகுமுறை அக்கலைப்படைப்பு வழங்கக்கூடிய கலையனுபவத்தை குறைப்பதாக ஆகுமா?

பி.கு 1: இவ்வகைத்தூண்களைக் குறிக்கும் கலைச்சொல்லாக ‘இசைத்தூண்’ என்ற சொல்லே இணையக்கட்டுரைகளில்  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிற்ப நூல்களில் இதற்கான சொல் இருக்கிறதா? என்ன சொல் பயன்படுத்தலாம்?

பி.கு 2: தமிழ் விக்கி மீதான எனது எதிர்பார்ப்புகளில் ஒன்று, நூல்களில் ஆய்வேடுகளில் உள்ள நம்பகமான முக்கியமான கருத்துக்களை வெளிக்கொணர்ந்து தொகுத்து இணையம் வழியாக பொதுவாசகனுக்கு தமிழ்விக்கி அறியக்கொடுக்க வேண்டும் என்பது. அவ்வகையில் சுசீந்தரம் கோவில் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

அன்புடன்,

சுந்தர்

அன்புள்ள சுந்தர்,

இவ்வகை தூண்களுக்கு அலங்காரத்தூண் என்ற பெயர்தான் கேரள தச்சு சாஸ்திரங்களில் உள்ளது. (அலங்கார உத்தரமும் உண்டு) இவற்றின் மூலவடிவம் மரம். கேரளத்தின் பழைய ஆலயங்களில் மரத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லில் செதுக்கும் கலை மேம்பட்டபோது அப்படியே கல்லில் செதுக்கினர். நெல்லையப்பர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களின் அமைப்பைப் பார்த்தால் மரக்கட்டிடங்களின் அழகியல் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஓட்டுக்கூரையின் மரக்கழுக்கோல்கள் போல கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.

இந்தவகையான அடுக்குத் தூண்கள், தொங்கும் கற்சங்கிலிகள், யாளிவாயில் உருளை எல்லாமே சிற்பி தன் தொழில்திறனை காட்டுவதற்காக உருவாக்குபவை. கலையுடன் இணைந்த திறன் என்பதனால் அவை ரசிப்புக்குரியவை.

ஆனால் நீங்கள் சொல்வதுபோல மூங்கிலை இவ்வாறு செதுக்கியிருக்கக்கூடும். நெல்லையின் ஸ்தல விருட்சம் மூங்கில். வேணுவனம் என்று சம்ஸ்கிருதம். வேணு என்றால் மூங்கில். மூங்கிலின் கல்வடிவமாக இத்தூண்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என எனக்கும் தோன்றுகிறது.

நெல் என்றால் மூங்கில் என்றும் பொருளுண்டு. மூங்கிலில் விளையும் விதையும் நெல் என்று சொல்லப்பட்டுள்ளது.பழைய இலக்கணப்படி நெல்லின் நான்கு வகைகள் ஐவனம், மூங்கில், செந்நெல், வெண்ணெல். ஐவனம் என்பது ஆளுயரமான விளையும் மலைநெல். என் சிறுவயதில் கஞ்சிக்கு அதைதான் வாங்குவார்கள். நெல் கொட்டைகொட்டையாக இருக்கும். (அதையெல்லாம் மலையாளிகளே சாப்பிட முடியும். பொன்னி அரிசி சாப்பிடுபவர்கள் புளியங்கொட்டையா என்று கேட்பார்கள்)

மூங்கில்  எனப்படுவது மூங்கில்வித என்று சொல்லப்படுவதுண்டு. இல்லை, நீருக்குள்ளேயே உயரமாக வளரும் ஒருவகை நெல் அது. அண்மைக்காலம் வரை ஆலப்புழையில் அது வேளாண்மை செய்யப்பட்டது. அதை அங்கே மூங்கில் என்றுதான் சொல்வார்கள். அதேபோல மூங்கிலுக்கும் நெல் என்னும் சொல் உண்டு.

வேலி என்றால் நிலம் என்றும் காடு என்றும் பொருளுண்டு. ஒலிக்கும் காடு என்று நேரடிப்பொருள். ‘வேரல் வேலி வேர்கோட் பலவின் சாரல் நாட’ என்னும் குறுந்தொகைப் பாடலில் வேலி என்பது காட்டை குறிக்கிறது. வேலி என்பது எல்லையை குறிக்கிறது. ‘வீங்குநீர் வேலி உலகாண்டு’ என்னும் சிலப்பதிகாரக் குறிப்பு உள்ளது. பிங்கலநிகண்டு வேலி என்றால் வயல், நிலம் என பொருள் அளிக்கிறது. தஞ்சையில் வேலி என்பது நில அளவைக்கான அலகு.

நெல்வேலி என்றால் மூங்கில்காடு அல்லது மூங்கில் வயல். அதைத்தான் சம்ஸ்கிருதத்தில் பின்னாளில் வேணுவனம் என ஆக்கியிருக்கிறார்கள். என்றோ அங்கே மூங்கில்காடு இருந்திருக்கிறது. அங்கே ஒரு லிங்கம் இருந்திருக்கிறது. ஏதோ தொல்மூதாதை நிறுவி வழிபட்டது. அதுவே நெல்வேலி. ஆலயம் எழுந்தபின் திருநெல்வேலி.

அலங்காரத் தூண்களை இசைத்தூண்களாக ‘பயன்படுத்தி’கொள்வதுபோன்ற ஓர் அபத்தம் இன்று நெல்லையில் நிகழ்கிறது. திருநெல்வேலி என்ற சொல்லை அப்படியே அன்றாடப்பொருள் கொண்டு நெல்லையப்பனுக்கு நெல்லில் வரம்பு (வேலி) கட்டி ஒரு விழா கொண்டாடுகிறார்கள். நெல்லில் எப்படி வேலி என்று கேட்கக்கூடாது. சாமிகுத்தம் ஆகிவிடும். கோயிலை கல்லால் அடித்தே இடிப்பது பக்தியின் பகுதியாக எப்படி இருக்கிறதோ அப்படித்தான்.

ஜெ

பிகு: உங்கள் புகைப்படங்கள் அழகு. புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டியதுதான். அங்கே இரண்டு அயோக்கியர்கள் ஒவ்வொரு நாளும் கல்லால் இத்தூண்களை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் தூண்களில் விரிசல்கள் உருவாகிவிட்டன. விரைவிலேயே உடைந்துவிடும்.

முந்தைய கட்டுரைக.நா.கணபதிப் பிள்ளை, ஈழத்து வில்லிசை
அடுத்த கட்டுரைதாமரை, குறும்படம்