விண்ணளந்த சிறகு

இனிய ஜெயம்

இப்போதெல்லாம் வாசித்து முடித்த புனைவுகளில் இருந்து அதன் கனவில் இருந்து வெளியேற தேர்வு செய்யும் அல்புனைவுகள், புனைவுகள் அளவே தீவிரம் கொண்ட ஒன்றாக இருக்கவே மனம் விரும்புகிறது. அப்படி சமீபத்தில் வாசித்த நூல், தி இந்து தமிழ் திசை வெளியீடான தியடோர் பாஸ்கரன் எழுதிய _விண்ணளந்த சிறகு_ எனும் தலைப்பிலான இயற்கை சார்ந்த  கட்டுரைகள் அடங்கிய சிறு நூல்.

அளவில் சிறிய ஆனால் வலிமையான உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நூல். உதாரணமாக ஒடிசா சிலிகா ஏரியில் வாழும் இராவதி ஓங்கில் எனும் அறிய டால்பின் இனத்துக்கு பார்வைத் திறன் கிடையாது எனும்   (அஜிதனும் நானும் இந்த  மீனைப் பார்க்க பயணித்திருக்கிறோம். இருப்பினும் நான் முதன் முதலாக அறிந்து திடுக்கிட்டு விட்டேன்) உண்மை நூலுக்குள் சும்மா ஒரு வரியில் வந்து போகிறது. இப்படி தியடோர் அவர்களின் எந்த நூலை எடுத்தாலும் எப்படி புத்தம் புதிய அறிதல் பரவச கணங்கள் பொதிந்த ஒன்றாக இருக்குமோ அதே வரிசையில் மற்றும் ஒரு நூல்.

உண்மையில் இந்த நூல் நீங்கள் சுட்டிக்காட்டிய பிரம்ம கமலம் தாவரத்தைக் குறித்து மேலதிகமாக வாசிக்கத் தேடிய வகையில் கையில் சிக்கியது. பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி வருடம் ஒரே ஒரு முறை பூப்பது. அதுவும் இரவில். அதுவும் பௌர்ணமி இரவில். அதுவும் சில போது அபூர்வமாக புத்த பூர்ணிமா இரவில். ஆகவே பௌத்த மரபில் இதற்கு பெரும் இடம் உண்டு. பகலையே காணாமல் தன் இருப்பை நிறைவு செய்யும் இந்த மலர் வழியே அந்த இரவில் மட்டும் அதன் மகரந்த சேர்க்கைக்கு துணை நிற்கும் அந்திப் பூச்சி வகை உண்டு. அந்தப் பூச்சி அழிந்தால்? இப்படிப்பட்ட உயிர்வலைப் பின்னலில் மனிதர்கள் ஆகிய நாம் நிகழ்த்தும் சீரழிவு குறித்த, புள்ளினங்கள்,பாலூட்டிகள்,தாவரங்கள்,ஆளுமைகள்,கருத்தாக்கங்கள் என ஐந்து பகுப்பில் அமைந்த 35 கட்டுரைகள் அடங்கிய சிறு நூல் இது.

தாவரங்கள் பகுப்பில் டுரூரி ஆர்கிட் எனும் தாவரம் குறித்த கட்டுரையில் அந்த தாவரத்தை தியடோர் அவர்கள் குற்றாலம் காடுகளில் தேடி அலைகயில் வரும் சாமியார், அவரது கதை  நாவல் ஒன்றில் மட்டுமே காண சாத்தியம் உள்ளது. இறுதியாக அந்த செடியை நூலாசிரியர் பார்க்க முடியாமல் திரும்பி விடுகிறார். காரணம் இன்னும் அபூர்வமானது. அந்த செடி மலர்ந்தால் மட்டுமே கண்ணில் படும். அதன் மலர் மட்டுமே பூமிக்கு மேலே வரும். செடி எப்போதும் மண்ணில் புதைந்து கண்ணுக்கு தெரியாமலேயே கிடக்கும். இறுதியாக இந்த செடியை நூலாசிரியர் பார்த்தே விடுகிறார் 40 வருட தேடலுக்கு பிறகு.( இப்படி தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே 1972 இல் இந்திய ஓநாய்களை அதன் வாழிடத்தில் பார்த்திருக்கிறார் )

அதே போல குறிஞ்சிப்பூ குறித்த கட்டுரை.12 வருடத்துக்கு ஒரு முறை குறிஞ்சி பூப்பது என்பது அந்த மலர்தலுடன் அந்த புதரின் ஆயுள் முடிகிறது என்பதன் அடையாளம் அது. அதன் வேரில் அதன் பின்னர் மற்றஒரு செடி பிறந்து வளர்ந்து 12 வருடம் வளர்ந்து பூத்து பின்னர் நிறையும். இந்த நூல் அளிக்கும் இந்த தகவலுக்குப் பின்னர் குறிஞ்சிப்பூ வை உதாரணமாக்கி சொல்லப்பட்ட எல்லா இலக்கிய வரிகளுக்கும் வேறொரு ஆழம் கூடுகிறது.

கட்டுரைகள் பேசும் இயான் லாக்வூட், erc டெலிடார், சேகர் தத்தாரி, கோவை ஜெயராமன், தாமஸ் ட்ரவுட்மன்  (இவரது இந்தியப் போர்க்களத்தில் யானைகள் எனும் ஆய்வு நூலை காலச்சுவடு பதிப்பகம் வழியே தமிழாக்கம் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர்) , பீட்டர் மத்தீசன், ஜார்ஜ் ஷேலர், காண்டராட் லாரல், ஜெ சி குமரப்பா, போன்ற ஆளுமைகளின் சூழலியல் சார்ந்த பணிகளின் வரிசையில், தொதுவர் இனத்துக்காக பணியாற்றிய பில்ஜின் அவர்களின் வாழ்வு ஆச்சர்யம் அளிப்பது. சுதந்திரம் கண்ட சில ஆண்டுகளில் வந்த கொள்ளை நோயில் கிட்டத்தட்ட தொதுவர் இனமே அழியும் நிலை, பில்ஜின் ஒரு பொது நிகழ்வில், ப்ரோட்டோ கால் முறைகளை மீறி நேருவை பார்க்க முயலுகிறார். நேருவின் பார்வையில் இவர் விழ, மீட்புப் பணிகள் துரிதமாக நிகழ்கின்றன. நேருவின் இறுதி காலம் வரை எந்த இடை நிறுத்தமும் இன்றி நேரு வசம் நேரடியாக பேசுபவராக பில்ஜின் இருந்திருக்கிறார். அவர் செய்த பணிகளை பட்டியலிடும் கட்டுரையில் மற்றொரு துணை சுவாரஸ்யமும் உண்டு. பில்ஜின் அவர்கள் தத்து எடுத்து வளர்த்த 10 தொதுவர் மகள்களில் ஒருவர் பின்னர் தமிழ் சினிமாவில் நடித்து, பிரபல நடிகரை மணந்தார். அவர்களின் மகனும் பிரபல நடிகர். பெயர் கெளதம் கார்த்திக்.

இந்த ஆளுமை வரிசையில் கோவை ஜெயராமன் முதன் முதலாக இதுவரை யார் கண்ணிலும் படாத தவளை, சிலந்தி இவற்றைக் கண்டு ஆவணம் செய்திருக்கிறார். அவரை சிறப்பிக்கும் வகையில் அவற்றின் உயிரியல் பெயருடன் ஜெயராமன் பெயரும் இணைக்கப்பட்டிருக்கிறது. ஜெயராமன் இந்தியாவின் முக்கியமான வகைப்பாட்டியலாளர்.

கருத்தாக்கங்கள் பகுப்பில் துனுக்குற செய்யும் கட்டுரைகள் இரண்டு. முதலாவது வன உரிமை சட்டம் மீதானது. இன்றைய தேதியில் இந்தியாவில் வன நிலத்தை தங்கள் வாழிடமாக கொண்ட குடிகளுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை. அவர்கள் அங்கிருந்து வெளியேற்ற பட வேண்டும் என்பதே அவர்கள் மீதான  இறுதி தீர்ப்பு. உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கிறது. ஓட்டு வங்கி என்றாகாத அவர்களின் எதிர்காலம்தான் என்ன? இரண்டாவது கட்டுரை தெருநாய்கள் குறித்தது. இன்றைய தேதியில் முப்பது இந்தியனுக்கு ஒரு தெரு நாய் என்ற கணக்கில் இந்தியாவில் தெருநாய்கள் பெருத்து கிடப்பதாக சுட்டுகிறது கட்டுரை. அத்தனை நாயும் உணவுக்கு என்ன செய்யும்? உணவுக்கு வழி இல்லாத நாய்கள் மீண்டும் காட்டு நிலைக்கு திரும்புகின்றன. அந்த நாய்கள் உருவாக்கும் வன உயிர் சூழல்  அழிவுகள் குறித்த பட்டியல் திடுக்கிட வைப்பது. பிறப்பு கட்டுப்பாடு நாய்கள் பிறப்பை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்பது கண்கூடு. எனில் மிஞ்சி உள்ளது ஒரே வழிதான். அந்த வழியை தேராவிட்டால் இந்த ஒரு இனம் குறைந்தது விளிம்பு நிலையில் இருக்கும் 30 அறிய உயிர் வகைகளை முற்றிலும் இல்லாமல் செய்து விடும்.

உணர்வெழுச்சி பொங்க வைக்கும் அக நிலை முறையிலோ, அல்லது முற்றிலும் உணர்ச்சிகள் கழித்துக் கட்டப்பட்ட புற நிலையில் நின்றோ எழுதப்பட்ட கட்டுரைகள் அல்ல இலை. இரண்டுக்கும் நடுவே நிற்கும் வெளிப்பாட்டு முறை கொண்டவை. ஆகவே இக்கட்டுரைகள் உருவாக்கும் உணர்வு நிலைகள் அலாதியானது. குறிப்பாக பழனி சிரிப்பான் எனும் பறவை குறித்த கட்டுரை. தியடோர் அவர்களின் கொடைக்கானல் தேன் நிலவு பயணத்தில் நெடுக எப்போதும் கண்ணில் பட்டு அதன் பின்னணியாக ஒலித்த இந்த பறவையின் குரல், இந்த நாட்களில் அற்றுப்போய் இந்தப் பறவையே தேடித் தேடி பார்க்கப்பட வேண்டிய நிலையில் இப்போது இருக்கும் நிலை. இந்தப் பறவை இந்த நிலத்துக்கு மட்டுமே சொந்தமான,இங்கு மட்டுமே வாழும் பறவை.

இப்படி தேன் பருந்து, வேட்டை வல்லூறு,கிளிகள் என்று பல பறவைகளின் ஆர்க் குறித்து பேசும் நூலின் மற்றொரு குறிப்பிட்ட பகுதி, பறவைகளின் கூடுகள் குறித்த பகுதி. பற்பல வடிவில் பயன்பாட்டில் உள்ள கூடுகள், அடுத்த பறவையின் கூட்டை கள்ளத்தனமாக பயன்படுத்திக்கொள்ளும் பறவைகள், தரையில் பொந்துகளில் அதை கூடாக்கி முட்டை இடும் பறவைகள், மரத்தில் துளை போட்டு அதை கூடாக்கி வாழும் பறவைகள், உள்ளே  மண்ணுருண்டைகளை போட்டு ( அது எதற்கு என்று இன்னும் எவருக்கும் தெரியாது) அழகிய கூடுகளை வனையும் தூக்கணாங்குருவி இந்த வரிசையில் என்னை வாய் பிளக்க வைத்தது, தனது எச்சிலை குழைந்து களிமண்ணால் கூடு வனையும் பறவையின் வாழ்வு.

எறும்புத் தின்னி, ஹூலக் குரங்கு, சென்னாய், நீர்நாய், யானைகள், காங்கிரேஜ் மாடுகள் என்று பல்வேறு உயிர்கள் இன்று இந்தியாவில் எப்படி உண்மையாகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறது என்று விவரிக்கும் இந்த நூல், வாழிடம் சுருங்குதல், சூழல் மாசு அளவே, அதிராத குரலில் சுட்டும் அதிர்ச்சிகரமான மற்றொரு அம்சம் முக்கியமானது.அது இந்திய வன உயிர்களின் அழிவுக்கு சீனா தனது கள்ள சந்தை வணிகம் வழியே அள்ளி வீசும் பணம்.

இளம் தலைமுறைக்கு நம்மை சார்ந்த நம்மை உள்ளிட்ட உயிர் வலை மீது காதல் வரும் வகையில் எழுதப்பட்ட இந்த நூல் வழியே அவர்களுக்கான பல நூல்களை அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வரும் சூழலியல் சார்ந்த நூல்களின் கோணல்கள் குறித்து பேசுகிறார். நமதேயான சொல்லாடல் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை, இழந்த பல சொற்கள் குறித்தெல்லாம் கவனம் குவிக்கிறார். (கரடிக்கு தமிழில் உளியம் என்றொரு பெயர் உண்டாம்) ஒரு பறவைக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களால் நிகழும் குழப்பம், தவறான பெயரால் நிகழும் குழப்பம் ( ஈ பிடிப்பான் எனும் பறவைக்கும் ஈ க்கும் எந்த தொடர்பும் இல்லை) பல்வேறு வகைக்கு அளிக்கப்பட்ட ஒரே பெயரால் நிகழும் குழப்பம் (மீன் கொத்தி எனும் ஒரே பெயரின் கீழ் 6 பறவைகள் அடையாளப்படுத்த படுகிறது) ஒரே இனத்தின் ஆண் பெண் பறவைகளின் பேதம் அறியாமல் நிகழும் குழப்பம், அதே இனத்தில் குஞ்சு பறவை வளர்ந்த பறவை என இந்த இரு நிலையிலும் முற்றிலும் இரு வேறு உருவங்கள் எடுக்கும் பறவைகள் கொடுக்கும் குழப்பம், என இதுவரையிலான நமது இந்திய ‘பறவை நோக்கல்’ அடைந்த இடர்கள் அதை களையும் வகைமைகள் குறித்தெல்லாம் இந்த சிறிய நூலுக்குள் சாத்தியப்பட்ட பலவற்றை பேசி இருக்கிறார் தியடோர்.வாசிக்க வாசிக்க உள்ளே தோன்றுவது ஒன்றுதான். உலகுக்கு ஒரு டேவிட் அட்டன்பரோ என்றால் நமக்கு ஒரு தியடோர் பாஸ்கரன்.

கொடைக்கானல் எனும் சிறிய நிலத்தில் மட்டுமே வாழும் பறவை, கண்டம் விட்டு கண்டம் என இங்கே வந்து போகும் பறவை, இமயமலைத் தொடர் அங்கிருந்து நீலகிரி மலைத்தொடர் இந்த இரண்டு தொடர்களில் மட்டும் வாழும், இந்த இரண்டு தொடர்களுக்கும் இடைப்பட்ட 3000 கிலோமீட்டரில் வேறு எங்குமே வாழாத பறவைகள் என பக்கங்கள் தோறும் பரவசம் கொண்டு அட எனும்படிக்கான விஷயங்கள் நிறைந்த நூல். அறியாமை இருளுக்குள் அறிவின் ஒளி அதன் எல்லை கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைவதில் வாசகன் எய்தும் பரவசம் அதுவே இந்நூல் அளிக்கும் வாசிப்பின்பம். இளம் மனங்கள் தவறவிடக்கூடாத மற்றும் ஒரு முக்கிய நூல்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஅ.முத்துலிங்கம் விழா, கடிதம்
அடுத்த கட்டுரைஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்