உலகம் யாவையும்

(விஜயா பதிப்பகம் வெளியீடாக வெளிவந்துள்ள ‘ஆறாம் திணையின் கதவுகள்- அ.முத்துலிங்கம் படைப்புகள் பற்றிய கட்டுரைகள்’ என்னும் நூலுக்காக எழுதிய கட்டுரை. தொகுப்பு. ஆஸ்டின் சௌந்தர் )

அ.முத்துலிங்கம் – தமிழ் விக்கி

ரயிலில் மூன்று பேர் அப்பகுதியில் அமர்ந்திருந்தோம். ஒரு கணவனும், மனைவியும், ஐந்து வயது மதிக்கத்தக்க அவர்களின் மகனும் உள்ளே வந்தனர். கணவர் தன் இருக்கைகளை எண் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள, மனைவி பெட்டிகளை இருக்கைக்கு அடியில் சீராக அடுக்கி வைத்தார். சிறுவன் உரத்த குரலில் “கழுதை மனுஷன்” என்றான்.

நான் அவன் எதைச் சொல்கிறான் என்று அவன் கண்களைப்பார்த்தேன். நான் பார்ப்பதை அறிந்து அவன் என்னைப்பார்த்து புன்னகைத்து, ”கழுதை மனிதன்” என்று சுட்டிக்காட்டினான்.

ஏறிட்டுப்பார்த்தால் ரயிலின் மேலே ஒரு விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. அதில் கழுதைத்தலை கொண்ட ஒரு மனிதர் எதையோ யோசிப்பது போல கையைத் தலையில் தாங்கி அமர்ந்திருந்தார். ஏதோ நிதி நிறுவனத்தின் கவனஈர்ப்பு முயற்சி நான் புன்னகையுடன் “ஆமாம்” என்றேன்.

ஆனால் அந்தப்பெட்டியில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நான் அமர்ந்திருந்தேன். அந்த விளம்பரம் என் கண்ணுக்குப் படவில்லை. அந்த விளம்பரத்தை கூர்ந்து பார்த்தேன். என்ன சொல்ல வருகிறார்கள்? பெரும்பாலான நிதி முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். மிகுந்த கட்டணம் எனும் பொதியை சுமக்க வைக்கப்படுகிறார்கள். தாங்கள் அவ்வாறன்றி முதலீட்டாளர்களின் சுமையைக் குறைக்கிறோம் என்று அந்த விளம்பரம் சொல்கிறது.

சிரிப்பூட்டக்கூடிய ஒரு கேலிச்சித்திரம். ஆனால் நான் யோசித்தது அதைப்பற்றியல்ல. அந்தப்பெட்டிக்குள் நுழைந்ததுமே அந்த விந்தையான விளம்பரத்தை முதலில் கவனிக்கும் குழந்தையின் கண்களை. மற்ற அனைவரும் ஏற்கனவே தெரிந்தவற்றை, தேவையானவற்றை மட்டுமே விழிநாடுகையில் தெரியாதவற்றை  நோக்கி, தேவையற்றவற்றை நோக்கி குழந்தையின் கண்கள் நீள்கின்றன.

இலக்கியத்தில் எப்போதுமுள்ள அழகென்பது நாமறிந்த உலகில் நாமறியாத ஒன்றை அது சுட்டிக்காட்டுகிறது என்பதுதான். பெரும்பாலான வாசகர்கள் எழுத்தாளர்களிடம் சொல்லும் வரியே ‘நான் இதைக்கவனித்ததே இல்லை, இத்தனைக்கும் நான் அங்கேயேதான் வாழ்கிறேன்’ என்பதுதான். வாசகனின் தீராத விந்தையே ஓர் எழுத்தாளர் எப்படி தானறியாத ஒன்றை தானறிந்த களத்தில் சொல்லிவிடுகிறார் என்பதுதான்.

தனக்கு முற்றிலும் அறியாத உலகை தனக்கு அறிமுகப்படுத்தும் எழுத்தாளனைவிட;, தான் அறிந்த உலகையே மேலும் ஆழமும் கூர்மையும் அழகும் கொண்டதாக, மேலும் விந்தையானதாக, காட்டும் எழுத்தாளன் மேலேயே வாசகன் ஈர்ப்புகொள்கிறான். அறியாத உலகைக்கூட வாசகன் தான் ஏற்கனவே அறிந்த உலகத்தின் நீட்சியாக மாற்றியே அடைகிறான்

இலக்கியவாதியின் கண் எங்கும் வேறுபாடுகளையும் விந்தைகளையும் முரண்பாடுகளையும் பார்க்கும் தனிக் கோணம்  கொண்டது. சாதாரணமாகப் பார்க்கும் ஒன்றையே சற்றே மொழியைத் திருப்பி, கோணத்தை மாற்றி, விந்தையென ஆக்கிக்கொள்ளக்கூடியது. தமிழில் அவ்வகையில் முன்னோடி புதுமைப்பித்தனே. இப்போது யோசிக்கையில் புதுமைப்பித்தன் கதைகளிலிருந்து அந்த விந்தைகள் ஒவ்வொன்றாக நினைவில் எழுந்து கொண்டே இருக்கின்றன.

இதை  வைத்தே தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களை அளக்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பார்த்தால், புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி முதல் நமது பெரும்படைப்பாளிகள் வரிசையில் இந்தக்கூறு மிக அதிகமாக இருக்கும் படைப்பாளி அ.முத்துலிங்கம்தான். பிற அனைவரை விடவும் முற்றிலும் வேடிக்கை பார்க்கும் கண்களால் மட்டுமே காட்டப்பபட்டவை முத்துலிங்கத்தின் கதைகள்.

மற்ற படைப்பாளிகள் ஒருவகையில் அன்றாட வாழ்க்கையில் சிக்கிக்கொண்டவர்கள். அவர்கள் வாழ்ந்த ஊர், அவர்கள் அறிந்த நிலம், அவர்கள் பழகிய மனிதர்கள், அவர்கள் சந்தித்த நிகழ்வுகள், அவர்கள் அடைந்த உணர்வுகள் அனைத்துமே எல்லைக்குட்பட்டவை. மற்ற தமிழ் வாசகர்களும் சாதாரணமாக அறிந்தவை. அவற்றுக்குள் அவர்களுடைய சிறுவர்களுக்குரிய பார்வை சில நுண்தருணங்களைக் கண்டெடுக்கிறது. ஆயினும் ஒரு பெரும்பகுதி அறிந்த அன்றாடத்திலேயே நின்றுவிட்டிருக்கிறது.

சைக்கிள் சீட் போன்ற முகம் கொண்ட இசக்கியை வேடிக்கை பார்க்கும் சுந்தர ராமசாமி என்கிற பாலுவை நாம் புன்னகையுடன் நினைத்துக்கொள்கிறோம். ஆனால் புளியமர ஜங்ஷன் என்பது நாம் எங்கும் பார்க்கக்கூடிய ஒன்றுதான். ஆர்மோனியத்தின் கட்டைகளை ஆவேசத்துடன் ஓங்கி அடிக்கும் ட்ரில் மாஸ்டரைக்கண்டு ஏழுநாடியும் ஒடுங்கி நின்றிருக்கும் சிறுவனான தியாகராஜனை நாம் மறப்பதில்லை ஆனால் செகந்திரபாத் வாழ்க்கை ஏறத்தாழ அனைவருக்கும் உரியதுதான்.

அழகிரிசாமியின் காலகண்டி கதையின் கிழவி நம் நினைவுகளில் ஏற்கனவே பதிந்திருப்பவள்தான். புதுமைப்பித்தனின் ’சொள்ளமுத்து இண்ணு சொல்லும்வே, புள்ள என்ன புள்ள கூண்டிலே ஏறினாப்பிளே?’ என்று சொல்லும் தேவ இரக்கம் நாடாரின் றகரம் கன்னியாகுமரி ஜில்லாவில் பெரும்பாலான ஊர்ப்பெயர்களில் நகர்ப்பெயர்களில் எவரும் கண்டுகொள்ளக்கூடியது தான்.

அ.முத்துலிங்கத்துக்கு நாமறியாத நிலங்களும் மனிதர்களும் வாய்த்தன. ஒவ்வொருநாளும் திகைத்து, வியந்து வேடிக்கைபார்க்கும் வாழ்க்கை அமைந்தது. ஒரே ஊரில் வாழ்ந்து எழுதுபவராக அவர் நிகழவில்லை. திருவிழாவிலிருந்து திருவிழாவுக்குச் சென்று கொண்டே இருக்கும் ரங்கராட்டினக்காரர் அவர். அந்தந்த இடங்களில் வாழ்ந்து ,அடுத்த ஊருக்குச் சென்று அதை வித்தாரமாகப் பேசிவிட்டு, அப்படியே போட்டுவிட்டு சென்ற கதைகள் போல அவை தோற்றமளிக்கின்றன.

அ.முத்துலிங்கம் படைப்புகள் முழுக்க இருக்கும் இந்த வேடிக்கை பார்க்கும் கூறு அவருடைய ஆளுமையின் ஒருமுகம். அவருக்கு அமைந்த உலகம்சுற்றும் வாழ்க்கையின் ஒரு வெளிப்பாடு. அதற்கு அப்பால் இந்தக்கூறு தமிழிலக்கியத்தில் என்ன தனிப்பங்களிப்பை ஆற்றுகிறது, அ.முத்துலிங்கத்தின் படைப்புகளுக்கு அது சேர்க்கும் அழகியல் கூறென்ன, தத்துவ அம்சமென்ன என்பது ஆர்வமூட்டும் ஒரு கேள்வி.

அ.முத்துலிங்கம் படைப்புகளில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அந்தச் சிறுவன் அசோகமித்திரனின் ’லான்சர் பாரக்’ கதைகளில் வருபவன். சுந்தர ராமசாமியின் இளமைப்பருவ கதைகளில் சிறுவன் பாலுவாக வருபவன். வில்லியம் சரோயனின் மை நேம் இஸ் அராம் கதைகளில் வருபவன். அ.முத்துலிங்கத்தின் படைப்புலகில் அவனே ஆசிரியனாகவும் அமர்ந்துகொண்டிருக்கிறான். மொத்த படைப்புலகின் உணர்வு நிலைகளையும் பார்வைக் கோணத்தையும் தீர்மானிக்கிறான்.

அழகிய இளம்பெண்ணின் விரல்கள் பல்லியின் குஞ்சு போலிருந்தன என்று சொல்பவன் அவன். நடந்து வரும் பெண்ணின் இடை இருபக்கமும் அசைவதை ஒரு இயந்திர நடனம் போல வியப்புடன் பார்ப்பவன். அம்மா சுடும் தோசையில் எல்லாத் தோசைகளிலும் ஏறத்தாழ ஒரே எண்ணிக்கையில் தான் துளைகள் இருக்கும்போலும் என்று எண்ணிக்கொள்பவன். சிறுநீரை பாதியில் நிறுத்த முடியாது, தப்பி ஓடும் திருடனையும் பிடிக்க முடியாது நின்றிருக்கும் விதானையரின் துயரத்தில் மகிழ்பவன்.

அச்சிறுவனை புரிந்துகொள்ளும் ஒவ்வொரு வாசகருக்கும் எளிதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அப்பருவத்தினூடாக கடந்து வந்தவர்கள் தான். ஒரு குறிப்பிட்ட வயதில் கடமைகளும் பொறுப்புகளும் உருவாகும்போது அச்சிறுவன் சுருங்கி உள்ளே மறைந்துவிடுகிறான். ஒவ்வொரு நாளும் ஒரே வழியில் ஒரே மனிதர்கள் ஒரே தொழிலில் வாழும் வாழ்க்கையில் அச்சிறுவன் ஆர்வமிழந்து கண்களை மூடிக்கொள்கிறான்.

முத்துலிங்கத்திற்கு அது நிகழவில்லை. அந்த வயதில் அவர் விரிந்த உலகை நோக்கி சிறகுடன் எழுந்தார். ஆப்ரிக்காவில், மத்திய ஆசியாவில், கனடாவில், அமெரிக்காவில் என இடம் மாறிக்கொண்டே இருந்தார். புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கைச் சூழல்கள், புதிய நிலம். அவரிலிருந்த சிறுவன் விழி மூட நேரவில்லை.

இப்போது பார்க்கையில் வாழ்வினூடாக நாம் அடையும் ஒன்று, நிலைகொள்ளுதல். அ.முத்துலிங்கத்தில் அது நிகழவில்லை. அதுவே இந்தக்கதைகளில் புதுமையும், அழகும், வாழ்க்கைநோக்கும் ஆக இருக்கிறது. நிலைகொள்ளுதல் என்பது ஓர் ஊரில், ஒரு வாழ்வில் நிலைகொள்ளுதல் என்பது மட்டுமல்ல. ஒரு தத்துவத்தில், ஒரு பற்றில், ஒரு மதத்தில், ஓர் அரசியலில் நிலைகொள்ளுதலும் கூட.

இக்கோணத்தில் பார்க்கையில் அ.முத்துலிங்கத்தின் கதைகளில் நாம் பொதுவாக படைப்பாளர்களிடம் காணும் எந்த வகையான ஆழ்ந்த பற்றும் இல்லை என்பதைக் காணலாம். அவர் ஈழத்தமிழர் ஈழப்போராட்டத்தின் உச்சகாலங்களில் எழுதிக்கொண்டிருந்தவர். ஆனால் மிகத்தீவிரமான பிறந்தநிலப் பற்று அவர் படைப்புகளில் வெளிப்படவில்லை. இனப்பற்றோ அரசியல் சார்போ வெளிப்படவில்லை. அதன்பொருட்டு வழக்கமாக ஒவ்வொன்றையும் அரசியலில் வைத்தே பார்க்கக்கூடிய இயந்திரமனங்கள் அவர் மேல் கடுங்குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றன. அவர் அவற்றை பொருட்படுத்தியதில்லை. அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குச் சில மென்மையான பதில்களைச் சொல்லியிருக்கிறார்.

உண்மையில் நாம் எந்த இடத்திலும் நிலைகொள்ளாமல், ஒவ்வொன்றிலும் அக்கணமே ஈடுபட்டு கடந்து சென்றுகொண்டே இருக்கும் அச்சிறுவனிடம் ’எங்காவது உட்கார்’ என்று சொல்கிறோம். எதையாவது ஏற்றுக்கொள் என்று சொல்கிறோம். எதையாவது முத்திரையாகக் குத்திக்கொள், அடையாள அட்டையாக அணிந்துகொள், கொடியாகப்பற்றிப் பிடித்துக்கொள் என்று சொல்கிறோம். எல்லா சிறுவர்களிடமும் முதிய உலகம் ‘ஓரிடத்திலே உக்காரேண்டா” என்றுதான் கூவிக்கொண்டிருக்கிறது.

முத்துலிங்கத்திடமும் அதையே கோருகின்றனர் வழக்கமான வாசகர்கள். என்ன சொல்ல வருகிறார்? என்ன நிலைபாடு கொண்டிருக்கிறார்? முத்துலிங்கம் உருவாக்கும் புனைவுலத்திற்கு நேர் எதிரான ஒரு பார்வை அது. அந்தப்பார்வையில் நின்றுகொண்டு முத்துலிங்கத்தின் படைப்புகளை நாம் உடைத்து நெளித்து சுருட்டி நம்மைநோக்கி இழுத்துக்கொள்ள முயல்கிறோம். சென்ற முப்பதாண்டுகளில் தமிழில் ஒரு குறிப்பிட்ட புனைவிலக்கியவாதிக்கு எதிராக நிகழ்ந்த மாபெரும் அழகியல் வன்முறை என்பது இதுதான். நல்லவேளையாக அந்தக்காலகட்டம், அந்த இயந்திர மனிதர்கள், அவர்களின் மூர்க்கமும் வஞ்சமும் இன்று வழக்கொழிந்து போய் தன் குன்றா ஒளியுடன் முத்துலிங்கம் எஞ்சி நிற்கிறார்.

பற்று எழுத்தாளனுக்கு நன்றும் தீதும் அளிக்கிறது. தீதென்பது ஒவ்வொரு புது அனுபவத்தையும் தனக்கு ஏற்கனவே இருக்கும் பற்றினூடாக மட்டுமே பார்க்க முடியும் என்பதும், புது உலகம் புது அகம் ஒருபோதும் அப்புனைவில் நிகழ்வதில்லை என்பதும்தான். அப்பற்று பலவகை, தேசம், இனம், மொழி, மதம் எனும் பற்றுகள். இவற்றைவிட ஆழமான பற்று தன் மீதான பற்று.

பல எழுத்தாளர்கள் தங்கள் இளமையில் அதுவரை அடைந்த அனுபவங்கள் வழியாக திரண்ட ஓர் ஆளுமையடையாளத்தை தங்களுடையதாக உருவாக்கிக்கொள்கிறார்கள். அதையே திரும்பத் திரும்ப முன்வைக்கிறார்கள். அவர்கள் எழுதி தங்களை கண்டடைவதில்லை, எழுத்தினூடாக அந்த அடையாளத்தை தொடர்ச்சியாக புனைந்துகொள்கிறார்கள். அதை உடைய விடுவதேயில்லை.

அந்த அடையாளத்தின் மீது, அந்த அடையாளத்தை உருவாக்கிய அனுபவங்களின் மேல் பெரும்பற்று கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் கொண்டிருக்கும் பற்றுகளில் மிகத்தீங்கானது இதுவே. இப்பற்றுகளால் எழுத்தாளனின் உலகம் இறுக்கமானதாக, மீளமீள நிகழ்வதாக ஆகிவிடுகிறது. எழுத்தாளன் தன்னை நகலெடுக்கத் தொடங்குகிறான்.

தமிழ் எழுத்தாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த தன்மை கொண்டவர்கள். தன்னை முன்வைப்பவர்கள். இவர்களை நாம் அகவய எழுத்தாளர்கள் என்கிறோம். அவர்களில் வெவ்வேறு படிநிலைகள் இருந்தாலும் இரு எல்லைகளில் உச்சமாகக் காட்டத்தக்கவர்கள் லா.ச.ராமாமிர்தமும் நகுலனும். அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சில அனுபவங்களும் அதை ஒட்டி அவர்கள் உருவாக்கிக்கொண்ட தன்னிலையும் மட்டும்தான் எழுதுவதற்கான பேசுபொருட்கள். ஆகவே அவர்கள் ஒன்றையே திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். மிகுதியாக எழுதாமல் இருக்கும்போது மட்டுமே அவர்களுக்கு மதிப்பிருக்கிறது. எழுத எழுத அவர்கள் நீர்த்துப்போய் திரும்பத் திரும்ப சொல்பவர்களாக சலிப்பூட்டுபவர்களாக மாறிவிடுகிறார்கள்.

அ.முத்துலிங்கம் இந்த தற்பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக இருக்கிறார். அவ்வகையில் அ.முத்துலிங்கமும்  ப.சிங்காரமுமே தமிழில் தாங்கள் உருவாக்கிக்கொண்ட தங்கள் தன்னிலையிலிருந்து எழுத்தினூடாக முற்றிலும் விடுபட்ட இருபடைப்பாளிகள் என்று தோன்றுகிறது. ப.சிங்காரம் தொடர்ந்து எழுதவில்லை. அவர் எழுதவந்த காலத்தில் அந்த தன்னிலையற்ற நிலைபேறற்ற எழுத்தென்பது பிழையானதாக கருதப்பட்டது. வேரற்றதாகவும் வெறுமே புறஉலகை சொல்வதாகவும் மதிப்பிடப்பட்டது. கடுமையான புறக்கணிப்புக்கு ஆளாகி, இலக்கியத்தின் மீதே நம்பிக்கை இழந்து அவர் எழுதாமலானார்.

நவீனத்துவம் உருவாக்கிய அந்த தன்னிலைமையப் பார்வை பின்னவீனத்துவ காலத்தில் மறுக்கப்பட்டது. தன்னிலை என்பது ஒருவர் உருவகித்துக்கொள்வதே ஒழிய, எய்தியதல்ல என்று கண்டடையப்பட்டது. தன்னைத்தானே வரையறுத்துக்கொள்ளும், நிலைபடுத்திக்கொள்ளும் எழுத்துக்களை விட அவ்வாறான அனைத்து நிலைபேறுகளையும் உடைத்து உடைத்து மேலே செல்லும் படைப்புகளுக்கு மேல் புத்தார்வம் எழுந்தது. தன்னை விரித்து வரலாற்றிலும் தத்துவத்திலும் பொருத்தி பொருத்தி பார்த்து மேலே சென்று கொண்டிருக்கும் எழுத்துகள் உருவாகி வந்தன. தன்னை தானே தலைகீழாக்கும் பகடி இலக்கிய அழகியலில் முதன்மைப்பட்டது. ப.சிங்காரம் மறுகண்டடைவு செய்யப்பட்டார்.

அ.முத்துலிங்கம் அந்த மறுகண்டடைவுக் காலத்தில் எழுத வந்தது அவருடைய நல்லூழ். இல்லையெனில் அவர் தமிழிலக்கியச் சூழலில் ஒருவேளை ஒருவகையான ‘வேடிக்கை எழுத்தாளராக’, வணிக எழுத்தின் ஒருமாதிரியாக கருதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அப்போது மாறிவந்த நவீனத்துவத்துவத்திற்குப் பிந்தைய வாசிப்புச் சூழலே உடனடியாக முத்துலிங்கத்தை அடையாளம் கண்டது. அவருடைய தன்னிலை அற்ற போக்கு ஒரு முதன்மையான இலக்கியப் பண்பு என்று வரையறுத்தது.

இன்று கூட நவீனத்துவத்தில் ஊறிய பழைய வாசகர்கள் பலருக்கு அ.முத்துலிங்கத்தின் எழுத்து எங்கும் இல்லாமல் பரந்துகொண்டிருப்பதாக தோன்றுகிறது. எழுத்தென்பது இரும்புக்குண்டு போல மண்ணில் அழுந்தி அசைவற்றிருக்கவேண்டும் என்று நம்புகிறவர்களுக்கு அன்றாடக் காற்றில் பறந்து சுழன்று எத்திசையும் எந்த இலக்கும் இன்றி அலையும் இறகு போல அவருடைய எழுத்து தோன்றுகிறது. ஆனால் அவருடைய எழுத்தின் தனிச்சிறப்பே அதுதான். பற்றின்மை, எதன்மீதும் தன்மீதும்.

முத்துலிங்கத்தில் உலகத்தில் உள்ள இந்த மகத்தான ’பொறுப்புத்துறப்பு’தான் தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவராக அவரை ஆக்குகிறது. இந்த நிலைபெயர்தல் பறந்தலைதல் ஆழமின்மை என்று கொள்ளத்தக்கதா? அதன் சிறப்புகள் என்ன? முதன்மையாக அது முற்றிலும் புதிய பண்பாடுகளின் ஆழங்களுக்குச் செல்ல எழுத்தாளனுக்கு வழி அமைக்கிறது. அவன் தன்னிலிருந்து விலகி இன்னொருவனாக நின்று தன் பார்வையை தன் பண்பாட்டை நோக்கி திருப்பவும் வழி அமைக்கிறது.

ஆனால் நிலைபேறு கொண்டு, ஒற்றைப்புள்ளியில் ஊன்றி, ஒரு பண்பாட்டுக்குள் ஊறித் திளைக்கும் எழுத்தாளர் அடையும் ஆழமொன்றுண்டு. முதன்மையான அகவய எழுத்தாளர்கள் அதையே நிகழ்த்துகிறார்கள். அது இந்திய சங்கீதம் போல. அதில் ஆலாபனையே மேதமை எனப்படுகிறது. கீர்த்தனைகள் ராகங்கள் பெரும்பாலும் மாறுவதில்லை. திரும்பத் திரும்ப நிகழ்த்தி மிகச்சிறு வேறுபாடுகளினூடாக முன்சென்று கொண்டே இருக்கிறார்கள். Improvisation எனப்படும் நுண்மேம்படுத்துதலே அதில் கலையெனப்படுகிறது. எங்கோ ஓரிடத்தில் அந்த நுண்மேம்படுத்துதல் நிகழ்த்தாமல் திரும்ப நிகழ்த்தல் நடக்கும்போது எழுத்து அல்லது கலை சொல்லின்பமாக அல்லது வெற்றுத் திறனாக மாறி பொருளிழக்கிறது.

அ.முத்துலிங்கம் எழுதுவதுபோன்ற புறஉலகு நோக்கித் திறக்கும் படைப்புகளில் ஒன்று நிகழ்ந்தது மறுமுறை நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் புறஉலகம் புதிய ஒன்றுடன் வந்து நிற்கிறது. புதிய வேடிக்கைகள் எழுந்து வந்து கொண்டே இருக்கின்றன. மனிதவண்ணங்களின் முடிவின்மையால் சலிப்பில்லாத வாசிப்பு எத்தனை எழுதிய பின்னரும் நிகழ்கிறது.

அகவய எழுத்துக்கு நேர் எதிரானது இது. அகவய எழுத்தில் அகமெனத் திகழும் ஒன்றில் புறவுலகு காட்டும் வண்ணங்களை பிரதிபலித்தே உலகைச் சமைக்கிறார்கள். அங்கே புதியதொன்றைக் கண்டடைகிறார்கள். எனில் இங்கு புறவுலகின் முடிவிலாத வண்ண வடிவ வேறுபாடுகளினூடாக ஓடும் ஓர் அகத்தை ஆசிரியன் காட்டுகிறான்.

இந்த தற்கண்டடைதல் மிக நுட்பமாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. முத்துலிங்கம் ஆப்ரிக்க கதைப்பாத்திரங்களை எழுதுகிறார். மையஆசிய கதாபாத்திரங்களை எழுதுகிறார். ஒவ்வொன்றிலும் அவர்களுடன் மிகச்சிறிய அளவில் முத்துலிங்கமும் தோன்றுகிறார். அவர் அதனூடாக தன்னை மறுவரையறை செய்துகொண்டே இருக்கிறார். அதுவரைக்கும் தான் அடைந்த அனைத்து எல்லைகளையும் கடந்து ஓர் அடி முன்னெடுத்து வைக்கிறார். தன்னைப்பற்றிய ஒவ்வொரு வரையறையையும் கலைத்து மீண்டும் அடுக்குகிறார். இந்த தொடர் கண்டடைதல்களே முத்துலிங்கத்தின் கதைகளை அழகுள்ளதாக்குகின்றன.

ஆப்ரிக்காவில் ராகு காலத்தை மொத்த இந்திய வாழ்க்கைமுறையில் இருந்தும் தன் வாழ்க்கைத் தரிசனமாக திரட்டி எடுத்துக்கொள்ளும் ஒருவரில் அவர் கண்டடைவது ஒருவேளை தன் தந்தையையோ தன் சித்தப்பாவையோ தன்னையோ கூட இருக்கலாம். பாகிஸ்தானில் கொழுத்த காளையை துப்பாக்கியால் சுட்டு கொன்று சமைத்து சாப்பிட்டுக் கொண்டாடும் ஒரு திருமண விருந்தில் அவர் கண்டடைவது ஏற்றுக உலையே ஆக்குக சோறே என்று கொண்டாடிய தன் தொல் தமிழ் மூதாதையராக இருக்கலாம்

தன்னை எழுதுபவர்களின் நடுவே முத்துலிங்கம் தன்னை கடந்து, தானிலாமல் விரியும் இப்பெரும் உலகை எழுதுபவராக இருக்கிறார். அந்த உலகில் தன்னை வெவ்வேறாகக் கண்டடையக்கூடியவராக இருக்கிறார். தன்னில் உலகை காண்பதற்கு நேர் எதிர்பார்வையாக உலகில் தன்னைப்பார்ப்பவராக அவர் நிகழ்ந்திருக்கிறார். துள்ளி அலையும் சிறுவனின் பார்வை. ஒருகணமும் அமராதிருக்கும் சிறுவனின் உள்ளத்தில் நிகழ்ந்த இந்த உலகம் தமிழுக்கு முற்றிலும் புதியது. அதன்பொருட்டே இன்னும் பல தலைமுறைகளுக்கு முத்துலிங்கம் நினைக்கப்படுவார்.

கன்றுக்குட்டி ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. பிறந்து நாலைந்துநாள் ஆகியிருக்கும். ஆர்வமாக ஒரு வைக்கோல் இழையை எடுத்து மென்றது. அப்பால் இன்னொரு வைக்கோலிழையை கண்டதும் வாயிலிருந்ததை துப்பிவிட்டு அதை நக்கி எடுத்தது. அதை துப்பிவிட்டு ஒரு புல்லை சப்பியது. பார்த்துக்கொண்டிருந்த கல்பற்றா நாராயணன் சொன்னார் “அடுத்த புல் கிடைக்காது என்னும் பதற்றம் வந்த கணம் முதல் கன்றுக்குட்டி பசுவாகிவிடும்”

இவ்வுலகம் முடிவற்றது என்று தெரிந்துகொண்டே கன்றுக்குட்டி வருகிறது. இவ்வுலகம் இவ்வளவே என இங்குள்ள சூழல் அதற்குச் சொல்கிறது. அதை ஒப்புக்கொள்ள பிடிவாதமாக மறுக்கும் வரைத்தான் கன்றுக்குட்டியின் சுதந்திரம் இருக்கிறது.

முந்தைய கட்டுரைமுடியரசன், கவிதைப் போட்டி
அடுத்த கட்டுரைஅஜிதன், உரை