திராவிட இயக்கமும் மறக்கப்பட்ட பிள்ளைகளும்

அன்புள்ள ஜெ

கே.என்.சிவராஜ பிள்ளை பற்றிய விக்கி பதிவில் அவர் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்று இருக்கிறது. ஆனால் அப்பதிவில் எங்குமே அவர் திராவிட இயக்கத்துடன், அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டியுடன் தொடர்பில் இருந்ததாக இல்லை. அது ஒரு தவறான வரி என நினைக்கிறேன். அத்துடன் கே.என்.சிவராஜ பிள்ளை எஸ்.வையாபுரிப் பிள்ளைக்கு அணுக்கமானவர். இருவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள். சொந்தக்காரர்கள் என்றும் நினைக்கிறேன். வையாபுரிப்பிள்ளை திராவிட இயக்கத்துக்கு எதிரானவர். கே.என்.சிவராஜ பிள்ளையும் காங்கிரஸ் காரராக இருக்கவே வாய்ப்பதிகம். அவர் பெயரை திராவிட இயக்கத்தவரும் சொல்வதில்லை.

ஆர்.எஸ்.ராமானுஜம்

அன்புள்ள ராமானுஜம்,

இந்தவகையான எளிமையான பாகுபாடுகள் அறிஞர்களை புரிந்துகொள்ள பெரும் தடையானவை. டி.கே.சிதம்பரநாத முதலியார் ஜஸ்டிஸ் கட்சி ஆதரவாளர். ஆனால் உறுதியான சிவபக்தர், கம்பராமாயண ரசிகர், ராஜாஜிக்கு அணுக்கமானவர். எஸ்.வையாபுரிப் பிள்ளை டி.கே.சிதம்பரநாத முதலியாரின் அவையில் இருந்தவர். ஆனால் ராஜாஜிக்கு அணுக்கமானவர் அல்ல.

வையாபுரிப் பிள்ளை திராவிட இயக்கத்துக்கு எதிரானவர் அல்ல. வையாபுரிப் பிள்ளைக்கு ஓர் ஆய்வுமுறைமை இருந்தது. அது முழுக்கமுழுக்க செவ்வியல் வரலாற்றாய்வு – இலக்கிய ஆய்வு முறைமை. அதன் மூன்று அடிப்படைகள்,

அ. நேரடியான தொல்சான்றுகளை கொண்டு மட்டுமே எதையும் முடிவுசெய்வது.

ஆ. ஓர் ஆய்வுமுடிவு உலகளாவிய ஆய்வுகளுடன் ஒத்துப்போகவேண்டும் என்று உறுதியாக இருப்பது.

இ. தனிப்பட்ட பெருமிதங்கள் எதையும் ஆய்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ளாமலிருப்பது.

வையாபுரிப் பிள்ளை அன்று திராவிட இயக்க அறிஞர்கள் வட இந்திய அறிஞர்களுக்கு ஏட்டிக்குப்போட்டியாக தமிழக நூல்களின் காலகட்டத்தை பற்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டுசென்றதை ஏற்கவில்லை. தன்னுடைய ஆய்வுக்கணிப்பை முன்வைத்தார். அவருடைய கணிப்புகளில் சில பிற்காலத்தில் திருத்தப்பட்டன என்றாலும் இன்று அவருடைய காலக்கணிப்புகளும், அதையொட்டிய காலக்கணிப்புகளுமே பொதுவாக ஏற்கப்படுகின்றன.

தேவநேயப் பாவாணர் அல்லது கா. அப்பாத்துரை சொன்னதுபோல தொல்காப்பியம் பத்தாயிரம் ஆண்டு தொன்மையானது, சங்க இலக்கியம் எட்டாயிரமாண்டு தொன்மையானது என்றெல்லாம் எவரும் இன்று சொல்வதில்லை. வட இந்திய ஆய்வாளர் பலர் புராணம் வரலாறு இரண்டையும் குழப்பிக்கொண்டு மகாபாரத காலகட்டத்தை வெண்கலக் காலத்துக்கு பின்னால்கொண்டுசென்றதையோ, பத்தாயிரம் இருபதாயிரம் என காலக்கணிப்பு செய்த அபத்ததையோ எஸ்.வையாபுரிப்பிள்ளை ஏற்றதில்லை.

கே.என்.சிவராஜபிள்ளை இலக்கியங்களை காலக்கணிப்பு செய்வதில் வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுமுறைமையையே சார்ந்திருந்தார். மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையும் அதே முறைமையைச் சார்ந்தவரே. கே.என்.சிவராஜ பிள்ளையின் ஆய்வுமுறைமையையும் அவர் நூல்களின் உள்ளடக்கத்தையும் சுருக்கமாக அப்பதிவிலேயே காணலாம்.

கே.என்.சிவராஜ பிள்ளை திராவிட இயக்கத்தவர் என்று அப்பதிவில் இல்லை. ஆனால் அவர் திராவிட இயக்கத்தின் அறிவார்ந்த அடிப்படைகளை உருவாக்கியவர்களில் ஒருவர். அப்பதிவிலேயே திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த ஒரு விவாதத்தில் ராஜாஜி தலைமையில் நிகழ்ந்த ஒரு அரங்கில் ஒருவர் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்துப் பேசியபோது கே.என்.சிவராஜ பிள்ளை அதற்கு அளித்த விரிவான மறுப்புரையும், தொடர்ந்து அது நூலாகியதும், அந்நூலை ஒட்டி நூல்கள் பல வந்ததும் குறிப்பிடப்படுகிறது. தமிழின் தனித்தியங்கும் தன்மை, பண்பாட்டுத் தொன்மை ஆகியவற்றை முன்வைத்து தொடக்ககால ஆய்வுகளைச் செய்தவர் கே.என்.சிவராஜ பிள்ளை.

தேவநேயப் பாவாணர்

அக்காலகட்டத்தில் திராவிட இயக்கம் உருவாகவில்லை. தமிழின் தனித்தன்மையை முற்றாக மறுக்கும் குரல்கள் இங்கே ஓங்கி ஒலித்தன. அக்குரல்களுக்கு எதிராக ஆய்வுசெய்து தரவுகளையும் வரலாற்றுச் சித்திரத்தையும் முன்வைத்த வி.கனகசபைப் பிள்ளை, கே.என்.சிவராஜ பிள்ளை, மனோன்மணியம் பெ சுந்தரம் பிள்ளை போன்றவர்களே திராவிட இயக்கத்தின் அறிவடிப்படைகளை உருவாக்கியவர்கள்.

ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் திராவிட இயக்கம் பின்னர் அரசியல்சார்ந்து வேறுதிசைக்குச் சென்றது. தமிழை காட்டுமிராண்டி மொழி என பழிக்கும் நிலையை அடைந்தது. சி.என் அண்ணாத்துரை வழியாக மீண்டும் அதில் தமிழ்ப்பற்றுக்கு இடம் அமைந்தது. அது வேறு வரலாறு.

ஜெ

முந்தைய கட்டுரைநீலகேசி – எத்தனை அடுக்குகள்!
அடுத்த கட்டுரைசாரு, கடிதங்கள்