யுவபுரஸ்கார் விருது

சாகித்ய அக்காதமி யுவபுரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம்படைப்பாளி ஒருவரைப் பற்றி எதிர்மறையாக எழுதக்கூடாது என்றே நினைத்தேன். அரிதாக நல்ல படைப்பாளிகளுக்கு வழங்கப்படும்போது அதை பாராட்டுவதனாலேயே இந்த தெரிவிலுள்ள அறிவின்மையைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இப்படிச் சுட்டிக் காட்டப்படும் என்பது ஜூரிகளுக்கு தெரியவேண்டும் என்பதனால்.

இவ்வாண்டு பட்டியலில் அரிசங்கர், றாம் சந்தோஷ் , சுரேஷ் பிரதீப், வேல்முருகன் இளங்கோ, கார்த்திக் புகழேந்தி ஆகியோரே இலக்கியத் தகுதி கொண்டவர்கள். விருதுபெற்றிருக்கும் பி.காளிமுத்து கவிதைகளை இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன் அவர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளை வாசிக்கவேண்டும். கவிதை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் அவ்வண்ணம் நிகழுமென்றால் நன்று.

நடுவர்களாக இருந்த முனைவர் ஆர்.ராஜேந்திரன், டி.பெரிய சாமி, எம்.வான்மதி ஆகியோருக்கு தமிழ் கல்வித்துறையின் மரபின்படி தினத்தந்தி அளவுக்குக் கூட வாசிப்புப்பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. பயணப்படி, கௌரவஊதியம் தவிர சாகித்ய அக்காதமியில் அவர்களுக்கு அக்கறையேதும் இருக்கவும் நியாயமில்லை. அவர்களை நடுவர் குழுவுக்கு பரிந்துரைத்தவர்கள் ஆணையிட்டதைச் செய்திருப்பார்கள்.

பொள்ளாச்சியில் இருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த உபாதை இருக்கும் என நினைக்கிறேன்.

 

முந்தைய கட்டுரைகீதைத்தருணம்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசுக் கூடுகை 51