புத்தகக் கண்காட்சியில் மேடைப்பேச்சாளர்கள்

ஒரு நண்பர் இந்த முகநூல் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு நான் கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்று கோரியிருந்தார். பதிப்பாளரும் கூட. ஆனால் அவர் பெயர் சொல்லப்படக்கூடாதாம்

*

ஈரோடு புத்தகக் காட்சி ஆரம்பிக்கிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய புத்தகக் காட்சி என்று சொல்லப்படுவதுண்டு.பேச்சாளர்கள் பட்டியலைப் பார்த்தேன். ஒரு எழுத்தாளர் பெயர் இல்லை. வழக்கம் போல் சிவகுமார் நூற்றியெட்டு பூக்களின் பெயர்களை மூச்சுவிடாமல் ஒப்பிக்கிறார்.

போகன் சங்கர்

கரூர் புத்தக கண்காட்சியில் சிறப்புரை வழங்கப்போகும் பின் நவீனத்துவ மாய யதார்த்தவாத எழுத்தாளர்கள்.

சாலமன் பாப்பையா,

செந்தில் கணேஷ் & இராஜலட்சுமி, மருத்துவர்

சிவராமன், மல்லூரி,

மோகனசுந்தரம்,

கோபிநாத், லியோனி & சுகி சிவம்

ராஜீவ் பாஸ்கரன்

மன்னார்குடி புத்தகத் திருவிழா குறித்து ஒரு செய்திக் குறிப்பு வாசிக்க நேர்ந்தது. தன்னுடைய சகாக்களான தஞ்சை நாகைக்கு சற்றும் சளைத்தது அல்ல திருவாரூர் என்பதை நிரூபிக்கும்படியான சிறப்பு அழைப்பாளர்கள். எனக்கென்னவோ செல்வராகவன் ஆயிரம் வருடங்களாக உலகத் தொடர்பே இல்லாத இருண்ட சோழர் வாழ்க்கையை காட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரொம்ப மெனக்கெட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. அவர் நேரடியாக தஞ்சைக்கும் திருவாரூருக்கும் வந்திருக்கலாம். டெல்டா வாசிகள் இன்றுவரை எந்த அப்டேட்டும் இல்லாமல்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மன்னார்குடி மதன்கௌரின்னு ரைமிங்கா வந்ததால கூப்பிட்டிருப்பாங்களோ… அடுத்தடுத்து பப்ஜி மதன், பாரிசாலன், டிடிஎஃப் வாசன் என யூடியூபர்களாக கூப்பிடுவார்கள் போலிருக்கிறது. அதற்கடுத்து டிக்டாக் பண்ணுகிறவர்கள் இன்ஸ்டா ரீல்ஸ் போடுகிறவர்களை எல்லாம் கூட புத்தக கண்காட்சிகளுக்கு பேச அழைக்கலாம்.

அப்ப எழுத்தாளர்கள்?

எழுத்தாளர்களா? அவர்களுக்கும் புத்தகங்களுக்கும் என்ன சம்மந்தம்?

சுரேஷ் பிரதீப்

*

இக்குறிப்புகளிலுள்ள ஆதங்கம், கண்டனம் நியாயமானது. நானும் அவ்வுணர்வை பகிர்ந்துகொள்கிறேன்.

ஆனால் நம் தமிழக உண்மையை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு தேசமாக இந்தியா வாசிப்புக்கு எதிராக விரைவாகச் சென்றுகொண்டிருக்கிறது. செல்பேசி அடிமைகளாலான தேசம். வாசிப்பு ஒரு மாபெரும் சமூகச் செயல்பாடாக இருந்த கேரளத்திலேயே இதுதான் நிலைமை. இன்று கேரள இடதுசாரி வட்டத்திலேயே நூல்களைப் பற்றிய விவாதம் ஏதுமில்லை. டிரோல் காணொளிகள், மீம்களே அவர்களுக்கும் ஆயுதமாக உள்ளது.

கேரளத்தில் வாசிப்பியக்கத்தை நிலைநாட்டியவர் இ.எம்.எஸ். இன்று பார்க்கையில் அவர் சமகாலத்து இலக்கியப் படைப்புகளில் முக்கியமான அனைத்துக்குமே நீண்ட மதிப்புரைகள் எழுதியிருக்கிறார் என்பது, மிகமிகக் கொந்தளிப்பான அரசியல்சூழலில் தேசத்தின் இடதுசாரி இயக்கத்தையே வழிநடத்திச் செல்லும்போதுகூட அதை தவறவிடவில்லை என்பது, ஆச்சரியமாக உள்ளது. இன்று அங்கே அப்படிப்பட்ட இடதுசாரிகள் எவருமில்லை. இலக்கியம்பேசும் இடதுசாரி மேடைப்பேச்சாளர் சுனில் இளையிடம் தவிர வேறெவருமில்லை.

தமிழகச்சூழல் எப்போதுமே பரிதாபகரமானது. இங்கே தமிழ்நூல்களை, ஆசிரியர்களை மேடையிலோ கட்டுரைகளிலோ சுட்டிக்காட்டும் ஓர் அரசியல்தலைவர் ராஜாஜிக்குப்பின் இருந்ததில்லை. ராஜாஜி மட்டுமே இலக்கியவிழாக்களில் எழுத்தாளர்களை முன்னிறுத்தியிருக்கிறார். கல்கியும் டி.கெ.சிதம்பரநாத முதலியாரும் கி.வா.ஜகந்நாதனும் எல்லாம் அவரால்தான் கவனம் பெற்றனர். அதன்பின் நமக்கு இலக்கிய அறிமுகம் செய்யும் முதன்மை ஆளுமைகளே இல்லை.

நம் இடதுசாரித் தலைவர்கள் புகழ்மிக்க பொதுஆளுமைகள் அல்ல. இருந்தாலும் அவர்கள் பேசியிருக்கலாம், பேசுவதில்லை. ப.ஜீவானந்தமும், பாலதண்டாயுதமும் கல்யாணசுந்தரமும் நவீன இலக்கியத்தை கவனித்ததில்லை.  சங்கரய்யாவோ நல்லகண்ணுவோ, வரதராஜனோ இலக்கிய அறிமுகம் கொண்டவர்கள், எதையேனும் வாசிப்பவர்கள் என்பதற்குச் சான்றே இல்லை. அவர்களின் கட்சிசார்ந்த எழுத்தாளர்களையே அவர்கள் பேசுவதில்லை.

இச்சூழலில் இங்கே வாசிப்பு ஓர் சமூகஇயக்கமாக எழவே இல்லை. நான்கு பெருநகரங்களுக்கு வெளியே மக்களுக்கு புத்தகம், வாசிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. கேட்டுப்பாருங்கள் குமுதம் அல்லது ராணி எவ்வளவு விற்கிறது என்று. நாகர்கோயிலிலேயே அதுதான் நிலைமை. நம் சூழலிலேயே எதையேனும், கவனியுங்கள் எதையேனும், வாசிக்கக்கூடிய எவரை எப்போது சந்தித்தோம் என நினைவுகூர்ந்து பாருங்கள்.

இன்று வாசிப்புக்கு எதிரான சூழல் மேலும் வலுப்பெற்றுள்ளது. நம் ஒட்டுமொத்தக் கல்விமுறையே வாசிப்புக்கு எதிரானது. நம் ஆசிரியர்கள் எழுத்தை, வாசிப்பை மனமார வெறுப்பவர்கள். நம் அரசியலுக்கு அடிப்படை வாசிப்பு கூட தேவையில்லை. நம் அறிவுச்சூழலிலேயே இன்று காணொளி அறிஞர்கள்தான் மிகுதி.

இச்சூழலில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. அங்கே எப்படியாவது கொஞ்சபேரை கொண்டுவந்தாகவேண்டும். சாலமன் பாப்பையாவோ, சுகி சிவமோ, திண்டுக்கல் லியோனியோ கொஞ்சம் கூட்டத்தை கொண்டுவந்தால் நல்லது. வருபவர்களில் 2 சதவீதம்பேர் நூல்கள் வாங்கினாலே நஷ்டமில்லாமல் தப்பித்துவிடலாம் என்பதே நிலைமை.

குறைந்தபட்சம் இன்று இந்த மேடைப்பேச்சாளர்கள் அவ்வப்போது நாலைந்து எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். கு.ஞானசம்பந்தம், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர் எல்லாம் இலக்கிய அறிமுகமாக சில சொல்கிறார்கள். தமிழகத்தில் வேறு எவர் பேசுகிறார்கள்?

ஆகவே அவர்கள் வருவதை அத்தனை காழ்ப்புடன் நினைக்கவேண்டியதில்லை. வேண்டுமென்றால் இலக்கியவாதிகள் சிலரையும் விழாக்களுக்கு கூப்பிடும்படி சொல்லலாம். குறைந்தது ஒரு அரங்காவது எழுத்தாளர்களுக்கு ஒதுக்கும்படி கோரலாம். அவ்வளவுதான் நமக்கு இன்றைய தமிழ்ச்சமூகத்தில் மெய்யாகவே இடம். அதற்கு அப்பால் நாம் எப்படிக் கோரமுடியும்?

அண்மையில் ஒரு செய்தி. ஒரு புத்தகவிழாவுக்கு நவீன எழுத்தாளர்களை அழைக்கலாமென அதை ஒருங்கிணைக்கும் அதிகாரி மாவட்டநிர்வாகப் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரியிடம் சொன்னபோது ‘யார் அவர்கள்?’ என்று அவர் கேட்டாராம். தமிழ் விக்கியின் தமிழ், ஆங்கிலப் பதிவுகளைக் காட்டியதும் அவர்கள் முக்கியமானவர்கள் என்று ஒப்புக்கொண்டாராம். அதையும் நாமே எழுதிக்கொள்ளும் நிலைமையில்தானே இருக்கிறோம்?

என் நண்பர் சிவனி சதீஷ் தக்கலையில் தன் தனிமுயற்சியால் ஒரு புத்தகவிழாவை நடத்தி முடித்திருக்கிறார். தக்கலையில் ஒரு புத்தகவிழாவா என்னும் திகைப்பு எனக்கு இன்னும் நீங்கவில்லை. அங்கே நூல்களை வெளியிட்ட, பரிசுகள் பெற்ற எந்த எழுத்தாளரையும் எனக்கு தெரியவில்லை. அனைவருமே புதியவர்கள். ஆனால் அவர்கள் வரட்டும், எழுதட்டும். வாசிப்பு ஓர் இயக்கமாக நிகழட்டும்

புத்தக விழாக்கள் நடக்கட்டும். அது இங்கே அறிவியக்கத்தின் கடைசி மூச்சு. மேடைப்பேச்சாளர்கள் அதன் ஆக்ஸிஜன் என்றால் அவ்வாறே ஆகட்டும்.

ஜெ

***

முந்தைய கட்டுரைதுணைவன்
அடுத்த கட்டுரைசாரு, கடிதங்கள்