பசுமை- ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன்!

பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் எனது ஊர். அங்குள்ள கிளை நூலகம் வழியாகத்தான் அறிவுலகில் நுழைந்தேன். அதன் பிறகு காலம் என்னைக் கைப்பிடித்துப் பத்திரிகைத் துறைக்கு அழைத்து வந்தது. ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இணையத்தில் உலா வரும் எல்லா இளைஞர்கள் போலவே, எங்கோ சுற்றி அலைந்து, கடைசியில் உங்களிடம் வந்து சேர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

ஆன்மீகம் முதல் அரசியல் வரை தாங்கள் தொட்டுக்காட்டும் அத்தனை விஷயங்களும் வாசகனுக்கு ஞானத் தெளிவை ஏற்படுத்துகின்றன. வேளாண் விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட மசானோபு ஃபுகோக்காவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ பற்றித் தெரியாது. ஆனால், ஃபுகோக்காவின் இயற்கை வேளாண்மை பற்றிய தங்களின் பதிவு அருமை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். தங்களின் ‘தேர்வு செய்யப்பட்ட சிலர்’ கட்டுரையை வாசித்த போது, எனக்குப் பெண் தேடும் படலம் நடந்து கொண்டு இருந்தது. வேடந்தாங்கல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும், பெண்ணைப் பார்த்தேன். அழகும், அறிவும்… கொண்டவர். ஆனால், இடது கால் போலியாவல் பாதிக்கப்பட்டதால் தாங்கித் தாங்கி நடக்கிறார். அந்த நேரத்தில் எனக்கு நீங்கள் நித்யா சொன்னதாக எழுதிய வரிகளே நினைவுக்கு வந்தது.(பல வருடங்களுக்கு முன் நித்யாவிடம் ஓர் இளம்பெண் வந்து அவளுக்குக் கண் தெரியாதைச் சொல்லி வருந்தினாள். நித்யா ஆறுதல் ஒன்றும் சொல்லவில்லை. ‘நாட்டிலே பல லட்சம்பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். கண் தெரியாததைப்போய்ப் பெரிய பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே’ என்றார்.அந்தப் பெண்ணின் வாழ்க்கையை அந்த வரி மாற்றியது. அந்தப்பெண் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். கணிதத்தில் ஆராய்ச்சி செய்கிறார்.)

எங்கள் வீட்டில் பலரும் ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். அவர்களை எல்லாம் சாந்தப்படுத்த உங்கள் எழுத்துக்களே உதவியது. வரும் செப்டம்பர் 16 -ம் தேதி செங்கல்பட்டு நகரில் திருமணம் நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தலைமை தாங்குகிறார். தங்களது வாழ்த்துக்களும் எங்களுக்குத் தேவை.

மேலும், பத்திரிகைத் துறையில் நான் சந்தித்த சுவையான நிகழ்வுகளை எனது http://sannachi.blogspot.com/வலைப்பூவில் எழுதி வருகிறேன். ஒரு முறை அதை எட்டிப் பார்த்தால் மகிழ்வேன்.
நேசத்துடன்,
பொன்.செந்தில்குமார்

 

அன்புள்ள செந்தில்குமார்

நான் தொடர்ச்சியாகக் காசுகொடுத்து வாங்கிப்படிக்கும் ஒரே இதழின் ஆசிரியராக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி அளித்த கடிதம். மானசீகமாக எப்போதுமே விவசாயியாக இருக்கிறேன் என்பதனால் இயற்கை விவசாயம் மேல் எப்போதுமே ஆர்வமுண்டு.

உங்கள்  இணையதளம் மிக நன்றாக உள்ளது. நம்மாழ்வார், அண்ணாஹசாரே போன்ற மனிதர்களைப் பற்றிய நேரடிப் பழக்கத்தை எழுதியிருப்பதை விரும்பி வாசித்தேன். முக்கியமான பணி.  குறிப்பாக  வீடுதோறும் தத்துவஞானிகள் என்ற கட்டுரை. நம்முடைய மண்ணில் விவசாயிகள் அவர்களின் வாழ்க்கையினூடாகவே கனிந்து மலர்வதை எப்போதுமே கண்டுகொண்டிருக்கிறேன். அவர்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் நம்முடைய பெரும் செல்வம்.

உங்கள் மணவாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள். சென்னை வரும்போது சந்திப்போம். என் வாழ்த்துக்களை மனைவிக்குத் தெரிவியுங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகாவியங்களும் தொன்மங்களும்