பிரமோ உஷார்!
பிரமோ, ஒரு பதில்
ஜெ,
எங்கள் சென்னையில் உஷார் பண்ணுவது என்பதற்கு அர்த்தம் வேறு. தவிரவும் நான் வேறு அந்தக் கட்டுரையின் தலைப்பில் உள்ள பிரமோவை, பிரேமா என்று அவசரத்தில் படித்திருந்தேன். “பிரேமா வை உஷார் பண்ணிய ஜெயமோகன்” என அ(ன)ர்த்தம் பண்ணிக்கொண்டு, சிக்கினாண்டா சித்தப்பு என மேற்கொண்டு படித்தால் சப்பென்று ஆகி விட்டது.
இசை, சினிமா பாட்டு சம்பந்தமாக உங்கள் அறிவின் தரம் என்னவென்று எல்லோருக்குமே தெரியும் என்று கடிதம் எழுதியவர் அவ்வளவு உறுதியாக கூறியிருக்கிறாரே, இந்தப் பாவிக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் பொ.செ பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.
ஒரு கட்டுரையில் “அந்த நாட்டுப்பாடல் ஏதோ சில மாயங்களால் மேலைநாட்டிசையாகவும் மாற்றப்பட்டுள்ளது.” என்று ஒரு வரிவருகிறது.(அறியாமையை என்ன ஆணவமாக எழுதியுள்ளீர்கள்). மற்றொன்றில், ‘வேகமான தாளம் கொண்ட துடி என்னும் வாத்தியத்துடன் இணையும் வஞ்சிப்பா என்னும் வடிவில் அமைவது’ என்று தமிழறிந்த யாருக்கும் புரியும் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறீர்களே… (என்ன ஒரு தலைக்கனம்).
சரி.. சங்கீதம் பற்றிய பழைய கட்டுரைகளிலாவது ஏதாவது தேறுமா என்று அவைகளையும் படித்தேன். பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் கட்டுரையில் …
“நான் நல்ல இசை ரசிகன் அல்ல. என் நண்பர்கள் யுவன் சந்திரசேகர், ஷாஜி போன்ற பலர் மிகச்சிறந்த இசை ரசிகர்கள். நா.மம்முது, சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் இசை நுட்பங்களை ஆராய்ந்தறிந்தவர்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கும் இடத்திலேயே நான் எப்போதும் இருக்கிறேன். என்னால் ராகநுட்பங்களுக்குள் செல்லவே முடிந்ததில்லை. என்னால் அடையாளம் காணப்படும் ராகங்களே மிக மிகக் குறைவுதான். கர்நாடக சங்கீதம் தவிர வேறு எந்த இசைமரபையும் என்னால் உணர முடிவதில்லை.”
என்றெல்லாம் (உங்களை தாழ்த்தி) தற்பெருமை அடித்துக்கொண்டீர்களே. என்னவொரு தரம் தாழ்தல்.. ஒருவேளை அந்த ஒவ்வாமையினால்தான் இப்படி ஆகிறதா என்று மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன்.. என்ன செய்ய..குமட்டல் வருவேனா என்று அடம் பிடிக்கிறது.
சாதாரண (ஜெ.மோ) ஒவ்வாமை குமட்டல் என்றால் ஒருவாரம் ஜெ.மோ எழுத்துக்கள் எதுவும் படிக்காமல் இருந்து டோம்ஸ்டால் மாத்திரையும் கூடவே எடுத்ததுக்கொண்டால் சரியாகிவிடும்.இல்லை மசக்கை குமட்டல் என்றால் நல்ல கைனகாலஜிஸ்டை பார்ப்பது உத்தமம்.
ஒருவேளை இரண்டும் இல்லையென்றால் குமட்டல் சீரியஸான புற்றுநோயின் அறிகுறி யாக கூட இருக்கலாம் எனவே உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.அவ்வளவு கஷ்டப்பட்டு குமட்டலை தாங்கிக்கொண்டு தொடர்ந்து படிக்க வேண்டாம்.செரிமான கோளாறுகள் இல்லாத என்போன்றோர் குமட்டாமல் படித்துக் கொள்கிறோம்.
மூர்க்கரோடு முயல்வதென்பது அச்சோபதிகம் பாடப்பட்ட அந்தநாளிலேயே உள்ளபோது சழக்குகளிலேயே சாமியாடுபவர்கள் நிறைந்த இந்தக்காலத்தில் இல்லாமலா. (ஆனாலும் அந்த பிரேமாவை உஷார் பண்ணுகிற விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்தான்)
அன்புடன்
நாகராஜன்
முடிச்சூர்.
***
அன்புள்ள நாகராஜன்
பரவசங்களுக்கு அளவே இல்லை. நீங்கள் மட்டும் இப்படி படிக்கவில்லை. இன்று ஒரு கடிதம். நான் இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வனில் பாட்டு எழுதுதும் வாய்ப்பை கெடுக்க முயன்றேன், அதை அவர் முறியடித்தார் என்று சொல்லி என்னை மலையாளத்தான், சங்கி என்றெல்லாம் வசைபாடி எழுதியிருந்தார். அவரே சுட்டியும் அளித்திருந்தார். வாய்ப்பை கொடுத்தார் என்பதை கெடுத்தார் என வாசித்திருக்கிறார். ஐயா நீங்கள் புரிந்துகொண்டது தப்பு என ஒரு மடல் போட்டேன். ‘இந்த உருட்டு எல்லாம் தெரியும். தமிழனை எவனும் ஏமாற்ற முடியாது’ என்று பதில். (உருட்டு?)
ஜெ