முழுமைவாசிப்பு என்பது என்ன?

நீர்ப்பூச்சியும் சிப்பியும்

நூல்களை வாசிப்பதே முழுமை வாசிப்பு என்று நான் கூறியிருந்த காணொளிக்கு எதிர்வினையாக பல கடிதங்கள் வந்தன. காணொளிகளிலேயே ஞானம் கிடைக்கும் என நம்புபவர்கள், வாட்ஸப் ஒன்றும் மோசமில்லை என்பவர்கள் பலர் எழுதியிருந்தார்கள். அவர்களில் பலர் மீண்டும் அவர்கள் ‘செய்திகளை’ அறிந்துகொள்வதற்கு அந்தக் களங்கள் உதவியாக உள்ளன என்றே எழுதியிருந்தனர்.

நான் பேசிக்கொண்டிருப்பது செய்திகளை, தகவல்களை தெரிந்துகொள்வது பற்றி அல்ல. அச்செய்திகளை, தகவல்களை ஒட்டி சிந்திப்பதற்குக் கற்றுக்கொள்வதைப் பற்றி. அச்செய்திகளையும் தகவல்களையும் ஒரு முழுமையில் பொருத்திக்கொள்வதைப் பற்றி. அந்த முழுமைச்சித்திரத்தை அடைவதற்கு உதிரிச்செய்திகளே எப்படி தடையாக அமைகின்றன என்பது பற்றி.

சென்ற காலங்களில் உதிரிச்செய்திகளுக்கு ஒரு மதிப்பிருந்தது. ஏனெனில் அவை மிக அரிதாக இருந்தன. தினமணி நடுப்பக்கக் கட்டுரைகளுக்காக என் கல்விநாட்களில் காத்திருந்தது உண்டு. ஏனெனில் ஒரு பொருளியல் கட்டுரையோ வரலாற்றுக் கட்டுரையோ மிக அரிதாகவே அன்று படிக்க கிடைத்தது. ஒரு நூல் அறிமுகமோ ஒரு அறிஞருடைய பெயர் அறிமுகமோ அவ்வாறுதான் நிகழ முடிந்தது.

இன்று தொழில்நுட்பம் உதிரிச்செய்திகளை பல்லாயிரம் மடங்கு பெருக்கியிருக்கிறது. நாம் எந்த ஆர்வமும் கொண்டிராவிட்டாலும் ஒவ்வொரு நாளும் உதிரிச் செய்திகள் நம் மீது வந்து கொட்டுகின்றன. ஒரு தகவலை இன்னொரு தகவல் மறக்கச் செய்கிறது. தகவல்களால் ஆன ஓர் அன்றாடம் உருவாகி நமக்கு நேற்றும் நாளையும் இல்லாமல் ஆகிவிடுகிறது.

உதிரிச்செய்திகள் வந்து நம்முள் நிறையும்ந்தோறும் நம் நினைவுக்களஞ்சியம் தேவையற்ற குப்பைகளால் நிறைகிறது. விளைவாக நாம் நம்மையறியாமலேயே நினைவை காலிசெய்கிறோம். கணிப்பொறியின் குப்பைக்கூடையை தானாகவே அது காலிசெய்வதுபோல. நம் அகம் நினைவுகளை விலக்க ஆரம்பிக்கிறது. இத்தனை செய்திகள் வந்து குவியும் இக்காலகட்டத்தில்தான் நாம் மிகமிகக் குறைவான நினைவு கொண்டவர்களாக இருக்கிறோம்

இன்றைய செய்திப்பெருக்கு நம்மைச் சிந்திக்க விடாமல் ஆக்குகின்றது. காணொளிகள் வழியாக வருபவை, விவாதங்கள் வழியாக வருபவை, நாளிதழ் செய்திகள், வாட்ஸப் செய்திகள் நண்பர்களின் அரட்டைகளில் வரும் செய்திகள். இத்தனை செய்திகளை தொகுத்து, ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரும் ‘மென்பொருள்’ நம் மூளைக்குள் இல்லை. அதற்கான எந்த திட்டமும் நமக்கு அளிக்கப்படுவதில்லை.

இந்த செய்திகளை அறிதல் என்று நாம் எண்ணிக்கொள்ளும்போது நமது மூளையை கூழாங்கற்களால் நிரப்பத்தொடங்குகிறோம். அந்த தகவல்களை நம்மால் கையாள முடியவில்லை என்றால் அந்தத் தகவல் நமக்கு சுமைதான், செரிக்காத உணவு நோயளிப்பது போல. ஆகவேதான் நூல்களை வாசிப்பதை சென்ற பத்தாண்டுகளாக மேலை நாடுகளில் மிக வலியுறுத்துகிறார்கள். உதிரிக்கட்டுரைகள் தனிச்செய்திகளை முழுக்கத் தவிர்க்கச் சொல்கிறார்கள். அவை நாம் கற்றிருக்கும் மொத்தத்தையும் ஒருவகையில் குலைத்துவிடக்கூடும். நம்முடைய நினைவு அடுக்குகளை தேவையில்லாமல் நிறைத்துவிடவும் கூடும்.

ஒரு தளத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனில் அந்தத்தளத்திற்கு முழுமையான ஒர் அறிதலை அளிக்கும் ஒரு நூலை தேர்ந்தெடுத்து படித்து முடிப்பதே ஒரே வழி. நமது படிநிலை எதுவோ அதற்கேற்ற நூல்கள் இன்று உள்ளன. அவை விரல்சொடுக்கும் தொலைவில் உள்ளன.

உதாரணமாக, இலக்கிய வாசகன் ஒருவன் ஹெகல் பற்றி அறிவதற்கு ஆயிரம் பக்க ஹெகல் கட்டுரைத்தொகுதியை படிக்கத்தேவை இல்லை. அப்படிப் படிப்பது அவனுடைய படைப்பூக்கத்தை பெருமளவு குறைக்கும் என்பது தான் என்னுடைய கருத்து. 30ஆண்டுகளுக்கு முன் நித்ய சைதன்ய யதி உலகப்புகழ்பெற்ற தத்துவ ஆசிரியராக நின்று இந்த அறிவுரையை எனக்களித்தார். இலக்கிய ஆசிரியன் ஹெகல் பற்றி அறிந்துகொள்வதற்கு இருநூறு பக்கங்களுக்குள் நிற்கக்கூடிய சுருக்கமான ஒரு நூலைப் பயின்றால் போதுமானது. ஏனெனில் ஹெகலை மட்டுமல்ல குரோச்சேவை ஹைடெக்கரை நீட்சேவையும் அவன் அவ்வாறு பயில வேண்டும்.

உதாரணமாக, தமிழில் மட்டுமே வாசிக்கும் ஓர் இளம் எழுத்தாளன் எங்கே தொடங்கலாம்? தமிழில் மிக ஆரம்பகட்டத்தில் இருக்கக்கூடிய ஒருவர் பிரேமா பிரசுரம் வெளியிட்ட சிந்தனையாளர் வரிசை நூல்களை முழுமையாகப்படிப்பதே பேருதவியாக இருக்கும். அந்த அளவுக்குக் கூட தமிழ் சிந்தனைத்தளத்தில் செயல்படும் கணிசமானவர்களுக்கு வாசிப்பு இல்லை என்பது தான் அவர்களுடைய குறிப்புகளில் இருந்து நான் கண்டுகொள்கிறேன்.

அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட அறிமுக நூல்கள் உள்ளன. பலகளங்களில் மிக எளிமையான சிறுநூல்கள் உள்ளன. அவற்றை வாசகன் படிக்கலாம். சோவியத் ரஷ்ய வெளியீடுகளாக வந்த அறிமுக நூல்கள் இயற்பியலை, வேதியியலை, உயிரியலை, மரபணுவியலை மிகத்தெளிவாகவும் மிக சுவாரசியமாகவும் அறிமுகம் செய்கின்றன. இவை அனைத்தையுமே ஒரு அடிப்படை சிந்தனையை கட்டமைத்துக் கொள்ளும் பொருட்டு படித்திருக்கவேண்டும் என்று சொல்வேன்.

அதற்கு அப்பால் அவன் மேலே செல்லலாம். அதற்கும் தமிழில் நூல்கள் உள்ளன.உதாரணமாக, பௌத்த தத்துவ இயல் மிகச்சுருக்கமான அறிமுகம் அடையாளம் பதிப்பக வெளியீடாக சி.மணி மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. அது ஒரு நல்ல தொடக்கம். அடுத்து டி.டி.கோசாம்பியின் பகவான் புத்தர். அடுத்து ராகுல சாங்கிருத்யாயனின் பௌத்த தத்துவ இயல். அடுத்து அம்பேத்கரின் புத்தரும் அவருடைய தம்மமும். அப்படி எல்லா திசையிலும் விரியலாம்

அவ்வாறு ஒரு இருநூறு முன்னூறு நூல்களை ஒருவன் படிக்கும்போது எல்லாத்துறைகளிலும் விரவி நின்றிருக்கும் ஒரு பொதுவான சிந்தனைப்புலம் அவனுக்கு அமைகிறது. அவற்றின்மேல் அவன் இலக்கியமோ தத்துவமோ அரசியலோ தனக்கான ஒரு களத்தை கண்டடைய முடியும் அங்கு தீவிரமான படைப்புகளை படிக்கலாம், உச்சகட்ட அறிதலை அங்கு நிகழ்த்தலாம். தனது பங்களிப்பை அங்கு நிகழ்த்தலாம்.

செயலின்மையின் இனிய மது

முந்தைய கட்டுரைகல்பொருசிறுநுரை, முதலாவிண்- முன்பதிவு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது,2022