செயலும் சலிப்பும்

மெய்யாகவே வாழும் நாட்கள்

அன்புள்ள ஜெ

உங்கள் கடிதம் கண்டேன். சந்திப்புகள், விவாதங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நான் இதுவரை எந்தச் சந்திப்பிலும் கலந்துகொண்டதில்லை. இலக்கிய நண்பர்களும் எனக்கில்லை. அது என்னுடைய சிக்கல்தான். என் வேலைச்சுமை அதிகம். வீட்டிலிருந்து விலகி இருப்பதும் கஷ்டம். அதோடு சந்திப்புகளுக்கு கிளம்பலாமென எண்ணினாலும் உடனே தவிர்த்துவிடவேண்டும் என்னும் எண்ணமும் சலிப்பும்தான் வருகிறது

எஸ்.சம்பத்குமார்

***

அன்புள்ள சம்பத்,

உண்மையில் நம் அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையில் இங்கு மிகபெரிய சலிப்பு உள்ளது. நமது தொழிற்சூழல் அளிக்கும் சலிப்பு நமது நுகர்வுப் பண்பு கொண்ட சமூக சூழல் அளிக்கும் சலிப்பு. ஒத்த உளம் இலாதவருடன் உடன் வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அளிக்கும் சலிப்பு.

அனைத்துக்கும் மேலான சலிப்பு ஒன்று உண்டு. அது சராசரித்தனத்திற்குள் பொருந்திக் கொள்ள முடியாத அல்லது பொருந்த முயல்வதன் வழியாக உருவாகும் சலிப்பு. நீங்கள் திரைப்படங்களை, இணைய இதழ்களை, தொலைக்காட்சி தொடர்களை, சமூக வலைத்தள விவாதங்களை, நாளிதழ் கட்டுரைகளை பொழுதுபோக்குக்காக படிக்கலாம். ஆனால் இவை அனைத்துமே ஒரு மாபெரும் சராசரிக்காக உருவாக்கப்பட்டவை. நீங்கள் சற்றேனும் தனித்தன்மை கொண்டவராக இருந்தால் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு ஏமாற்றமும் ஒவ்வாமையையுமே உணர்வீர்கள்.

இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் பார்த்தால் நான்காவது திரைப்படம், பத்து நிமிடத்திலேயே சலித்துவிடும் .இரண்டு தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தால் மூன்றாவது தொலைக்காட்சித் தொடரை பார்க்க முடியாது. இந்தச் சலிப்பு இருந்தால்தான் நீங்கள் அறிவியக்கவாதி. இல்லை, உற்சாகமாகத் திளைக்க முடிகிறதென்றால் நீங்கள் அறிவியக்கத்திற்குள் நுழையவே இல்லை என்று பொருள். நீங்கள் எந்த தனித்தன்மையும் கொண்டவர் அல்ல.

அல்லது நாம் நமது மூளையைக்கழற்றி வைத்துவிட்டு வேண்டுமென்றே நம்மை மூழ்கடித்துக்கொள்ள வேண்டும். பலர் அது சலிப்பை வெல்லும் வழி என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் உங்கள் மூளையை விலக்கி வேண்டுமென்றே சராசரித்தனத்தில் மூழ்கடித்துக்கொண்டால் உங்களுக்குள்ளிருந்து உங்களைக் கண்காணிக்கும் உங்களுடைய ஆழம் மேலும் அதிருப்தி கொள்கிறது. மேலும் சலிப்பை அடைகிறது.

அந்த சலிப்பு உங்களுக்குத் தெரியாது. ஒரு நாளில் ஆறுமணிநேரம் திரைப்படங்களையோ இணையத்தொடர்களையோ பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் ஆழ்ந்த உளச்சோர்விலும் இருந்துகொண்டிருப்பார். தான் உளச்சோர்வில் இருப்பதே அவருக்குத் தெரியாமலும் இருக்கும். ஏதாவது பேசத்தொடங்கும்போது அந்த உளச்சோர்வு அவரில் தெரியும். ஒன்று, வலிந்து உருவாக்கின மிகை நகைப்புகளுடன் பேசுவார். அல்லது சோர்ந்து தனித்தனியாக ஒலிக்கும் சொற்களுடன் பேசுவார். ஒரு உளமருத்துவன் மிக எளிதில் அவருடைய உளச்சோர்வை கண்டடைய முடியும்.

சராசரிகளில் ஈடுபடுபவர்களின் சலிப்பை ஓர் அறிவியக்கவாதி அச்சராசரிகளிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளாதவரை நீக்க முடியாது. சராசரிகளிடமிருந்து விலகியிருப்பதனால் தனிமை அடைகிறோம் என உணர்ந்து, அத்தனிமையை வெல்ல சராசரிகளில் ஈடுபடுபவர்கள் காலப்போக்கில் உளச்சோர்வடைந்து, அந்த எரிச்சலை சகசராசரிகள் மேல் காட்டி, அவர்களால் வெறுக்கப்படுவார்.

அறிவியக்கவாதி செய்தாகவேண்டியது தன்னைப்போன்றே சராசரிக்கும் மேலெழ விரும்புபவர்களுடனான நட்பு. அவர்களுடனான தீவிரமான உரையாடல். சலிப்பிற்கு மாற்று ஒன்றே- தீவிரம்.

தீவிரம் அளிக்கும் விசை நம்முள்ளிருக்கும் அத்தனை ஆற்றலையும் நம்மை பயன்படுத்திக்கொள்ள வைக்கிறது. நமது மூளைத்திறன் முழுக்க நமது உடல் திறன் முழுக்க செலவழிக்கப்படுகிறது. அப்போது தான் நம் அகம் நிறைவடைகிறது. நாம் ஆற்றல் கொண்டவர்களாக நம்மை உணர்கிறோம். நம்பிக்கையும் நிறைவையும் மகிழ்ச்சியையும் அடைகிறோம். திறன் கொண்டவரின் மகிழ்ச்சி திறன் வெளிப்படும்போது தான் வெளிப்படுகிறதே ஒழிய ஓய்ந்திருத்தலில், சோம்பியிருத்தலில் அல்ல.

அறிவுத்திறன் கொண்டவர்கள் அவ்வறிவுத்திறன் முழுக்க வெளிப்படுத்தும் களனைக் கண்டடைந்தே ஆகவேண்டும். அதற்கான தளங்களைக் கண்டடைந்தாகவேண்டும். அறிவுச் செயல்பாடினூடாக மட்டுமே அவர் தங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள முடியும். ஒற்றை வரியில் சொல்வதென்றால் இதுவே, ‘தனித்திறன் கொண்டிருப்பவர் தன் தனித்தன்மை வெளிப்படும் செயல்களில் ஈடுபடாதவரை உளச்சோர்வை தவிர்க்கமுடியாது’

அதன்பொருட்டே நான் விவாதக்களங்களை அமைக்க ஆர்வம் கொண்டிருக்கிறேன்.அதில் முதன்மையான தடையாக அமைவது என்ன என்று பார்த்தால் விந்தையான ஓர் உளசிக்கல்தான். சோர்விலிருப்பவர்கள் சோர்வை வெல்ல வேண்டும் என்ற விழைவை கொண்டிருப்பார்கள், ஆனால் அதற்குரிய ஒரு செயலைச் செய்வதற்கே அந்த சோர்வே தடையாக இருக்கும். அந்த இருநிலைதான் சிக்கலே.

ஒரே இடத்தில் வாழ்வதனால் ஒருவருக்கு சோர்வு இருக்கிறது. அங்கிருந்து கிளம்பிச் சென்றால் அந்த சோர்வு அகன்றுவிடும். ஆனால் அப்படி கிளம்பிச் செல்வதற்கு அந்த சோர்வுவே தடையாக இருக்கும். ஒரு நல்ல விவாத அரங்குக்கு சென்றால் மிகப்பெரிய அளவில் உள ஊக்கம் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் ஊக்கமற்றிருப்பதனால் அத்தகைய ஒரு சந்திப்புக்குச் செல்லும் விஷயத்தை தவிர்ப்பார். விடுமுறை இல்லை என்பார் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது என்பார். மூன்று நாட்களை நான்கு நாட்களை ஒதுக்க முடியாது என்பார். ஆனால் பல நாட்கள் எந்தப்பயனுமற்ற சோர்வில் நாட்கள் செல்லவும் கூடும்.

பெரும்பாலானவர்களால் அந்த தொடக்கநிலைத் தயக்கத்தை வெல்ல முடியவில்லை என்பதை நான் காண்கிறேன். அவர்கள் தங்களைத் தாங்களே சிறையிட்டிருக்கும் உளச்சோர்வும் செயலின்மையும் அவ்வகை ஆற்றல் கொண்டவை என்பதையும் காண்கிறேன்.

என்னுடைய தலைமுறையில் அந்தப் பிரச்னை இந்த அளவுக்கு இல்லை ஏனெனில் அன்று இதைவிட பெரிய வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்தன. அன்றெல்லாம் குடும்பம் ஒருவர்மேல் பெரும் பொறுப்பைச் சுமத்தி சுமையை அன்றி எதையுமே எண்ண முடியாதபடி ஆக்கியது. அதிலிருந்து கிடைக்கும் சிறு இடைவேளைகளையே கொண்டாட்டமாக உணரச்செய்தது. அன்றாடமே ஒருவரை உழலவைத்து உழலவைத்து மழுங்கடித்து உளச்சோர்வென்றால் என்னவென்றே தெரியாத உளச்சோர்வுக்குள் சிக்க வைத்து வாழ்க்கையை முழுக்க உறிஞ்சித்தீர்த்துவிட்டுக்கொண்டிருந்தது.

இன்று அப்படி அல்ல. இன்றைய இளைஞர்களுக்கு குடும்பப்பொறுப்பு குறைவு. பெற்றோரின் சேமிப்பின் குறைந்தபட்ச பின்புலம் அற்றவர்கள் குறைவு. பெரும்பாலானவர்களுக்கு வேலையும் வருமானமும் உள்ளது.  எஞ்சியிருக்கும் இச்சலிப்பு ஒருவரின் ஆளுமையுடன் தொடர்பானது. செயலின்மை அளிக்கும் சலிப்பு அது. செயலே அதற்கு மாற்று. அச்செயலை தொடங்க தடையாக இருப்பதும் அச்சலிப்பே.

இலக்குகள் இல்லை என்பதனால் அச்சலிப்பு வருவதில்லை. இலக்குகளை வகுத்தபின் செயலாற்ற முடியாது. செயலாற்றும்போதே இலக்குகள் திரள்கின்றன. அச்செயற்களமே இலக்குகளை விளைவிக்கிறது.

செயலுக்கு இன்று குடும்பம், வேலை எல்லாம் பெருந்தடை என நினைப்பவர்கள் அச்சலிப்பினால்தான் அவ்வாறு எண்ணிக்கொள்கிறார்கள். சலிப்பு அக்காரணங்களைக் கண்டடைகிறது. அன்றி மெய்யாகவே அத்தடைகள் கொண்டவர்கள் அதை வெல்லவேண்டியதுதான். ஒரு செயல் அதற்கெதிரான தடைகளை வென்றே நிகழமுடியும். அச்செயலை ஆற்றல்கொண்டதாக ஆக்குவன அத்தடைகள்தான்.

அதற்கும் அப்பால் ஒருவருக்கு வேலை, குடும்பம்தான் முக்கியம் என்றால்; எதன்பொருட்டும் அவற்றை அவர் சற்றும் விடமாட்டார் என்றால் அவர் எனக்குரியவர் அல்ல. அறிவியக்கவாதியும் அல்ல. என் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றே அவர்களிடம் சொல்வேன்.அறிவுச்செயல்பாட்டுக்காக சிறைசென்றவர்கள், செல்பவர்கள் இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை சிக்கனையும் மதியத்தூக்கத்தையும் விடமாட்டேன் என்பவர்கள், பெண்டாட்டிக்கு பிடிக்காது என்பவர்கள் இந்தப்பக்கமே நடமாடக்கூடாது. மற்றவர்களுக்கும் அந்த நோய் தொற்றவிடக்கூடாது.

தன்னுடைய தொடக்க சலிப்பை வென்று தனக்குரிய களம் நோக்கி நகரக்கூடிய முதல் ஆற்றலை உருவாக்கிக்கொள்ள்ளாதவர்களுக்கு சொல்ல செய்ய என்னிடம் எதுவுமே இல்லை. அதை மீறி வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என ஒரு களம் இருக்கவேண்டும் என்று மட்டுமே கவனம் கொள்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகு. அழகிரிசாமி  
அடுத்த கட்டுரைஎங்கோ ஓரிடத்தில்…