நீர்ப்பூச்சியும் சிப்பியும்
அன்புள்ள ஜெ
நான் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கியம் எனக்கு ஆர்வமுள்ள துறை என்றாலும் என்னுடைய வாசிப்பு சரித்திரம், சமூகவியல் சார்ந்து நீட்சி அடைகிறது. ஆனால் என் பிரச்சினை என்னால் எதையும் தெளிவாக யோசிக்க முடிவதில்லை என்பதுதான். இதனால் என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை. புத்தக வாசிப்பு தெளிவையும் உறுதியையும் அளிக்கும் என்று நீங்கள் நிறையவே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நாலாண்டுகளாக வாசிப்பு நிகழ்ந்தாலும் என்னால் தெளிவாக யோசிக்கவோ பேசவோ முடியவில்லை.
சம்பத்குமார்
***
அன்புள்ள சம்பத்,
புத்தக வாசிப்பென்பது மிக இன்றியமையாத ஒரு செயல்பாடாயினும் அதனுடன் இணைந்த ஆக்கபூர்வமான தொடர்விவாதம் இல்லையென்றால் அது சுமையாகவும் ஆகிவிடக்கூடும். ஆகவேதான் உலகமெங்கும் நூல்களுக்கு நிகராக விவாதஅரங்குகளும் கல்விக்குத் தேவையானவையாக கருதப்படுகின்றன. அரசும் பல்கலைக்கழகங்களும் அத்தகைய விவாத அரங்குகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்ச் சூழலில் அத்தகைய அரசு சார்ந்த முயற்சிகள் எவையுமே இல்லை. ஓர் இலக்கிய விவாதத்தையோ ,ஒரு தத்துவ வரலாற்று விவாதத்தையோ நடத்துவதற்கான பொதுஇடம் என்று ஒன்று தமிழகத்தின் மாநிலத்தலைநகராகிய சென்னையில் கிடையாது. ஐம்பது பேர் கூடி அமர்ந்து ஒன்றை விவாதிக்க வேண்டுமென்றால் ஐம்பதாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டுமென்பது தான் இன்றைய நிலை, அதாவது ஒருவருக்கு ஆயிரம் ரூபாய். வேடிக்கையாகச் சொல்வார்கள் முன்னூறு ரூபாய் மதிப்புள்ள ஒரு புத்தகத்தைப்பற்றிய ஒரு விவாதத்திற்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும்.
இத்தகைய வேடிக்கையை இந்தியாவின் எந்த மொழி, எந்த மாநில தலைநகரிலும் பார்க்க முடியாது.திருவனந்தபுரத்தில் வைலோப்பிள்ளி பவன் என்ற பெயரில் அரசு நடத்தும் கலையிலக்கிய மையம் உள்ளது. எவரும் அங்கு மிகக்குறைவான செலவில் கூடுகைகளை நடத்த முடியும். கேரளத்தில் திருவனந்தபுரம் முதல் கோழிக்கோடு வரை அத்தகைய இடங்கள் உள்ளன. கர்நாடகத்தில் தனியாரும் அரசும் நடத்தக்கூடிய பல அமைப்புகள் உள்ளன.
தமிழகத்தின் எந்த ஒரு மாவட்டத்தலைநகரிலும் இலக்கிய விவாதத்திற்கோ கருத்துவிவாதத்திற்கோ குறைந்த செலவில் கிடைக்கும் ஓர் இடமில்லை. எந்த அமைப்பும் அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் பல ஊர்களில் பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் உள்ளன. அங்கு அந்த அமைப்புகள் சார்ந்து ஆக்கபூர்வமாக எதுவும் நடைபெறுவதில்லை என்பதுடன் வெளியாட்கள் அவற்றை எடுத்து ஆக்கபூர்வமாக எதையாவது செய்வதற்கான வாய்ப்புகளும் அறவே இல்லை.
(மலையாள ,கன்னட நண்பர்களிடம் நான் தமிழிலக்கியக்கூட்டங்கள் நட்சத்திர விடுதிகளில் நிகழ்கின்றன என்பேன். கெத்து குறையவேண்டாமே என்று)
இந்தப் பின்னணியில் நம்மிடம் ஆக்கபூர்வமான விவாதங்கள் இல்லாமல் ஆகின்றன. விவாதங்கள் இல்லாமலாகும்போது கற்கப்பட்டவை செரிக்கப்படாமல் எஞ்சுகின்றன. கருத்துகள் பார்வை என ஒருங்கிணையவேண்டும். தரவுகள் கருத்துகளாக ஒருங்கிணைய வேண்டும். அதற்கு விவாதச்சூழல் தேவை.
விவாதம் ஏறத்தாழ இணையானவர்களிடம் மட்டுமே நிகழமுடியும். அன்றி முற்றிலும் சம்மந்தமில்லாதவர்கள் அமர்ந்து விவாதிக்க முடியாது. ஆகவேதான் முகநூல் போன்ற சமூகஊடக விவாதங்கள் எல்லாமே கேலிக்குரியதாகின்றன. ஒருநூலைப்பற்றி நீங்கள் எழுதினால் அந்த நூலைப்பற்றி எதுவுமே தெரியாதவர் வந்து கருத்து சொல்வார். அல்லது எங்கும் எதிலும் போய் தன்னுடைய அரசியல்- மதக்காழ்ப்புகளை வெளிக்காட்டுபவர்கள் வந்து கும்மியடிப்பார்கள்.
நாம் ஒன்றை கவனிக்கவேண்டும், பெரும்பாலானவர்களால் எதிர்நிலைத் தீவிரத்தையே அடைய முடியும். எதற்கும் எதிராக அன்றி, நேர்நிலையான தீவிரம் அவர்களின் வாழ்வில் கிடையாது. உண்மையில் செயலாக ஆவது நேர்நிலைத் தீவிரம்தான். அச்சூழலிலேயே நல்ல விவாதமும் நிகழமுடியும். அதில் எதிர் உளநிலைகள் இருக்காது. அது நம் பொதுச்சூழலில் இயல்வது அல்ல.
அத்தகைய சூழலில் எந்த விவாதமும் உடனடியாக கேலிப்பொருளாகும். அல்லது கடத்திச் செல்லப்படும். ஏனென்றால் ஒரு சாமானியருக்கு அவருக்குப் புரியாத ஒரு விவாதம் ஓர் எரிச்சலை உருவாக்குகிறது. அதை தான் பேசக்கூடிய ஒரு விவாதமாக கொண்டுசெல்லவே அவர் விரும்புவார். அதுவே மானுட இயல்பு.
நான் முகநூலிலேயே வாழும் நண்பர்களைக் கேட்டிருக்கிறேன். எங்காவது முகநூலில் ஒரு இலக்கிய விவாதமோ கருத்தியல் விவாதமோ தீவிரமாகவும் எல்லை மீறாமலும் நிகழ்ந்திருக்கிறதா என்று. அதற்கு வாய்ப்பே இல்லை, அது ஒருவகையான வெளிப்பாட்டுக்களம், ஒருவகையான பொழுதுபோக்குத்தளம் என்று மட்டுமே அனைவரும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே இணையானவர்கள் விவாத நெறிமுறைகளுக்குற்பட்டு ஒருவர் கற்றவற்றை இன்னொருவர் செம்மை செய்யும் தன்மை கொண்ட விவாதங்களை நிகழ்த்தவேண்டிய தேவை உள்ளது. அதற்கு இணையான உள்ளமும் அறிவுக்களமும் கொண்டவர்கள் கூடவேண்டும். விவாதத்தை மையம் விட்டு விலகாமல் , களம் மீறாமல் எல்லா திசைக்கும் கொண்டுசெல்ல சில நெறிமுறைகள் உள்ளன. விவாதத்தை நிகழ்த்த சில அடிப்படை தர்க்கப் பயிற்சிகளும் உள்ளன. அவற்றை அறிந்த நண்பர்கள் என்றால் ஓரிரு முறை விவாதித்தாலே நாம் செழுமையுறுவதை உணரமுடியும்.
இத்தகைய விவாதங்களில் சில சிக்கல்களை நான் காண்கிறேன். ஒன்று அதன் கட்டற்ற தன்மை. இதை நம்மவர் ‘சுதந்திரம்’ என நினைக்கிறார்கள். ஆனால் ஒருவரின் கட்டற்ற சுதந்திரம் இன்னொருவரின் பொழுதை வீணடித்துவிடக்கூடும். விவாதங்கள் அதற்குரிய நெறிகளுக்கு உட்பட்டே நிகழவேண்டும். பொதுவாகச் சொல்லப்போனால் கீழ்க்கண்ட நெறிகளைச் சொல்லலாம்
அ. விவாதத்தின் நேரம் வரையறுக்கப்படவேண்டும். ஒரு விவாதம் நேரக்கட்டுப்பாடில்லாமல் நீளும் என்றால் முதலில் வருபவர்கள் தொடர்ந்து வரமாட்டார்கள். அவர்கள் தங்களுக்கான நேரக்கணக்கு கொண்டிருப்பார்கள். ஆகவே எவரும் நேரக்கணக்கை மீறுவது அனுமதிக்கப்படலாகாது. எவராயினும், எங்கானாலும். விருந்தினரிடம் எப்போது முடிக்கவேண்டும் என மிகமிகக் கறாராகச் சொல்லியாகவேண்டும்.
ஆ. விவாதத்தின் பேசுபொருள் கடந்து செல்லும் பேச்சுக்கள் அனுமதிக்கப்படலாகாது. அப்படி நிகழ்ந்தால் பேச்சை வந்திருப்பவர்கள் சிலர் கடத்திச் செல்வார்கள். வழக்கமாக எங்கும் பேசப்படுவதே அங்கும் பேசப்படும். பயனற்ற அரட்டையாக விவாதம் மாறிவிடும். மயிர்சுட்டு கரி எஞ்சாது.
இ. விவாதங்களில் ஒருபோதும் உளத்தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாகாது. உற்சாகமான நிறைவான சந்திப்பு நிகழ்ந்தாலொழிய அச்சந்திப்பு நிகழ்ச்சி தொடராது. மகிழ்வே அறிவுசாவலின் அடிப்படையான உணர்வாக இருக்க முடியும்.
ஈ. ஒரு சந்திப்பின் நிபந்தனைகளை ஏற்காத எவரும், அதன் தளத்திற்குள் வர மறுக்கும் எவரும் எந்நிலையிலும் அனுமதிக்கப்படலாகாது.
உ. குடி போன்ற மூளையை மழுங்கடிக்கும் செயல்களுடன் சேர்ந்து அறிவியக்க விவாதம் நிகழ முடியாது. அப்படி ஒரு விவாதம் உலகில் எங்கும் நிகழ்வதில்லை. குடிக்கவேண்டுமென்றால் அதை குடிக்களியாட்டாகவே நிகழ்த்திக் கொள்ளவேண்டுமே ஒழிய அதற்கு அறிவியக்கச் செயல்பாடு என போலி முத்திரை குத்திக்கொள்ள வேண்டியதில்லை.
1984 முதல் 1988 வரை காசர்கோடு தபால்தந்தி ஊழியர் சங்க கம்யூனில் அப்படி ஓர் அற்புதமான விவாதக்கூட்டம் இருந்தது. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அந்நண்பர்கள் இன்றும் நட்புடன் தொடர்கிறோம். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆளுமையாக ஆகிவிட்டனர். செறுவத்தூரில் கதளிவனம் போல ஒரு மாபெரும் கலாச்சார அமைப்பையே ஒருவர் கட்டி எழுப்பிவிட்டார்.
1987 முதல் நான், கோணங்கி, யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், எஸ்.சங்கரநாராயணன், ராஜமார்த்தாண்டன், என விரியும் ஒரு நல்ல நண்பர்க் கூட்டம் இருந்தது. கடிதங்களிலேயே விவாதித்துக் கொண்டோம். அவ்வப்போது நேர்ச்சந்திப்புகளும் செய்துகொண்டோம். இன்று எவரேனும் அக்கடிதங்களை பகிர்கையில் அவற்றிலுள்ள கனவும் உத்வேகமும் வியப்பூட்டுகின்றன. எத்தனை தலைப்புகளில் பேசியிருக்கிறோம் என்பது எங்கள் பரிணாமத்தையும் காட்டுகிறது.
அவ்வாறு நூல்நவில்தலும் உசாவியறிதலும் ஒன்றிணைந்து நிகழும்போதுதான் மெய்யான வாசிப்பு நிகழ்கிறது. அதற்கு ஒரு வாசகன் சில ஆண்டுகளுக்காவது தொடர்ந்து விவாதிக்கும் நண்பர் குழாம் ஒன்றை பெற்றிருக்க வேண்டியிருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் அமர்ந்து சில நாட்கள் தீவிரமாக விவாதித்தாக வேண்டியிருக்கிறது.
இன்று இணையக்களங்களில் அதற்கான இடமே இல்லை. நேர் விவாதங்களே ஒரே வழி எவரிடம் விவாதிக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். நமக்குரிய நண்பர்களையும் தோழர்களையும் நாம் கண்டடைந்து நம்மால் கையாளப்படும் அளவிற்கு அளவுள்ள குழுக்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஸூம் போன்ற விவாதக்களங்கள் உதவியானவை. ஆனால் ஒருபோதும் நேர்ச்சந்திப்புகளில் நிகழும் தீவிரம் அவற்றில் அமைவதில்லை.
நேர் சந்திப்பெனில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு விவாதத்தின் பொருட்டு மட்டுமே சென்று அமர்வது மிகமிகச் சிறப்பானது. வேறு அலுவலகப்பணிகல், குடும்பப்பணிகள், அன்றாடப்பணிகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் முழுமையாகத் தவிர்க்கப்படவேண்டும். பல மாதங்கள் சூம் போன்ற தொடர்புச் செயலிகளில் நிகழும் விவாதங்களுக்கு நிகராக அந்த ஒரு நேர்ச்சந்திப்பு இருப்பதை ஒருமுறை அவ்விவாதத்தை நிகழ்த்தியபின் நீங்கள் அறியமுடியும்.
அதன்பொருட்டே சில சந்திப்புக் நிகழ்வுகளை உருவாக்கலாம் என்னும் எண்ணம் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாக செய்து பார்த்த எல்லா நிகழ்வுகளும் மிகப்பெரிய அளவில் பயனிருப்பதை, பங்கேற்றவர்களுக்கு மிகப்பெரிய உளநிறைவையும் கிளர்ச்சியையும் அளிக்கும் அனுபவங்களாக இருப்பதை வந்த நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தச் சொற்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன.
அண்மையில் எங்கள் மலைத்தங்குமிடத்தில் நண்பர்கள் சிலர் தங்கியிருந்தனர்.நான் ஒன்பதரை மணிக்கு தூங்கிவிட்டேன். இரவு இரண்டு மணிக்கு எழுந்து பார்த்தபோது அதிதீவிர விவாதம் நிகழ்ந்துகொண்டிருப்பதைக் கேட்டேன். மகிழ்வாக, நிறைவாக இருந்தது. அத்தகைய விவாதங்களை சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன் என முன்னோடிகளுடனும் யுவன் சந்திரசேகர், கோணங்கி என சமகாலத்தவருடனும் நிகழ்த்திய நாட்கள் நினைவிலெழுந்தன.
இந்த அறுபது வயது நிறைவில் எண்ணிப்பார்க்கையில் ‘வாழ்ந்த தினங்கள்’ அவை என்னும் எண்ணம் ஏற்படுகிறது. வேறெந்த மகிழ்ச்சிகளைவிடவும் அரியவை அவை. அறிவியக்கத்திலுள்ளவர்களுக்கு கற்றல், கற்றலை உசாவுதலில் மட்டுமே மகிழ்ச்சி உள்ளது. அந்த அரிய மகிழ்ச்சி பிறருக்கு இல்லை. அறிவியக்க அறிமுகமிருந்தும் அந்த கொடையை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.
ஜெ