எண்திசைத் தேடல்

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

விஷ்ணுபுரம்  வெள்ளிவிழா செம்பதிப்பு  வாங்க

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் விஷ்ணுபுரம் புதிய பதிப்புக்கான முன்னுரை)

1997ல் டிசம்பரில் விஷ்ணுபுரம் முதல் பதிப்பு அச்சேறியது. அந்தக் கணக்கில் இது அந்நாவலின் வெள்ளிவிழா பதிப்பு. இருபத்தைந்து ஆண்டுகளில் இன்று அதை படிப்பவர்கள் மூன்றாம் தலைமுறையினர். அந்நாவல் வெளியானபிறகு பிறந்தவர்கள்.

விஷ்ணுபுரம் வெளியான பிறகு இன்றுவரை அதை வாசித்து அகக்கொந்தளிப்பும் கண்டடைதலும் ததும்பலுமாக எழுதப்பட்ட ஒரு வாசகர் கடிதமாவது வராத ஒரு வாரம் கூட கடந்து சென்றதில்லை. தமிழில் வேறெந்த இலக்கியப் படைப்புக்கும் இத்தனை நீடித்த தீவிர வாசிப்பு அமைந்ததில்லை. இத்தனை தொடர்உரையாடல் ஒரு படைப்பின் மீது நிகழ்ந்ததும் இல்லை. பல படைப்புகள் இளமைப்பருவத்தின் ஒரு பகுதியாக அனைத்து வாசகர்களைச் சென்றடைகின்றன. அவர்கள் பிறகு அதை கடந்து வந்து ஒரு கடந்தகால ஏக்கமாக நினைவுகூர்கிறார்கள். வாழ்நாள் முழுக்க உடனிருக்கும் ஒரு படைப்பையே செவ்விலக்கியம் என்கிறோம். விஷ்ணுபுரம் இயல்பாக அந்த தகுதியை அடைந்துவிட்ட ஒன்று.

விஷ்ணுபுரம் தமிழிலக்கியம் வாசிக்க வருபவனுக்கு ஓர் அறைகூவலாக நின்றிருக்கிறது. முதலில் பலமுறை தொடங்கி விட்டுவிடுகிறான். பிறகு அதில் ஈடுபடுகிறான். அவனுடைய வளர்ச்சியின் பல கட்டங்களில் வெவ்வேறு வகையில் அவன் அதை உள்வாங்கிக் கொள்கிறான். அதன் வாசகர்களில் அதை முழுக்கக் கடந்து சென்றவர்கள் என்று எவரும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அது தனக்குள்ளேயே மடிந்து மடிந்து விரியும் அமைப்பு கொண்டது. அதன் உள்விரிவு அந்நாவலை மட்டும் சார்ந்ததும் அல்ல, அது இந்திய மெய்ஞான மரபின் ஒரு பகுதியென தன்னை நிறுத்திக்கொள்வது. மெய்ஞான மரபைக் கற்கக் கற்க அது பெருகும். இன்று பல கடிதங்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதை வாசிப்பவர்களால் எனக்கு அனுப்பப்படுகின்றன.

ஓர் இலக்கிய விமர்சகனாக விஷ்ணுபுரம் பெற்ற இந்த ஏற்புக்கான காரணம் என்ன என்று எண்ணிப்பார்க்கிறேன். தமிழ் நவீன இலக்கியம் புதுமைப்பித்தன் காலம் முதலேயே நவீனத்துவ இலக்கியமாகவே தோன்றியது. புதுமைப்பித்தன் அதற்கு உருவாக்கிய திசைவழி என்பது மரபு எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய வழிபாடுதான். தமிழ் நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளும் மேலைஇலக்கியத்திலிருந்து வந்தவர்களே. மேலை இலக்கிய வடிவங்களை திரும்ப எழுதுவதே இங்கே இலக்கியத்தின் புதுமை என்று கருதப்பட்டது. நான் அறிந்தவரை அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என இலக்கிய முன்னோடிகள் அனைவருமே வெவ்வேறு வகையில் ஐரோப்பாவால் ஈர்க்கப்பட்டவர்கள்.

(அவர்களில் ஜெயகாந்தனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் ரஷ்ய இலக்கியத்தின் மீது ஈடுபாடு உண்டு. ஆனால் அவர்கள் படைப்புகளில் ரஷ்யச் செல்வாக்கு என்பது அனேகமாக இல்லை.  அவர்கள் எழுதிய நவீனத்துவக் காலகட்டத்தின் அழகியல் ருஷ்யச்செவ்வியலுக்கு எதிரானது என்பதே முதன்மையான காரணம். ரஷ்யப் பெருநாவல்கள் தமிழில் எனது தலைமுறையில்தான் நேரடிச் செல்வாக்கை செலுத்தியிருக்கின்றன.)

விஷ்ணுபுரம் அவ்வகையில் ஒரு புதிய தொடக்கம். விஷ்ணுபுரத்தின் வடிவம், கூறுமுறை, உள்ளடக்கம் ஆகியவற்றில் இந்தியப் பெருங்காவியங்களின் செல்வாக்குதான் முதன்மையானது. தொன்மங்களை, அவற்றிலிருந்து உருவாகும் படிமங்களை பின்னி உருவாகியிருப்பது அதன் வடிவம். மனிதர்களையும் அது தொன்மங்களாக ஆக்குகிறது. அவ்வகையில் அது ஒரு நவீனப் புராணம். ரஷ்யப்பெருநாவல்களின் செல்வாக்கு அடுத்தபடியாக அதிலுள்ளது.  குறிப்பாக விரிந்த நிலச்சித்தரிப்பு, நுணுக்கமான காட்சி விவரணை ஆகியவற்றில் ரஷ்யப் பெருநாவலாசிரியர்களின் பயிற்சிக்களத்திலிருந்து நான் வந்திருப்பதை  இன்றைய வாசகன் காணமுடியும். அதற்கு முந்தைய தமிழ் நாவல் எவற்றிலும் அவ்வியல்பைக் காணமுடியாது.

நவீனத்துவ இலக்கியத்தின் மரபுஎதிர்ப்புத்தன்மை என்பது நடைமுறையில் வரலாற்றையும் தத்துவத்தையும் எதிர்ப்பதாக அமைந்தது. நவீனத்துவர்கள் பலர் ’தத்துவக்கிழவன்’ ’பாசிபடிந்த தத்துவம்’ என நிராகரிப்புத்தொனியில் எழுதியிருப்பதைக் காணலாம். அது ஒருவகையில் இந்திய எதிர்ப்பு, தமிழ் எதிர்ப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டுசென்று சேர்த்தது. அவர்களில் அனேகமாக எவருக்குமே தமிழ் வரலாறு அல்லது இந்திய வரலாறு பற்றிய பொதுவான அறிமுகம் கூட இல்லை என்பதை அவர்களுடைய படைப்புகள் காட்டுகின்றன. நவீன இலக்கிய வாசிப்பு – எழுத்து இரண்டுக்கும் அவை தேவையில்லை என்பதுடன், தடைகளும் ஆகும் என்று நான் எழுதவந்தகாலகட்டத்தில் சொல்லப்பட்டது. என்னிடம் சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும் அதை அழுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

நவீனத்துவர்களின் வினாக்கள், அலைச்சல்கள் அனைத்தும் அவர்களுக்குள்ளேயே இருந்தன. அவர்கள் எழுதியவை அனைத்துமே அவர்களைப் பற்றித்தான். அவர்களை விலக்கிவிட்டு அவர்களது படைப்புகளை பார்க்க  முடியாது. தனிமனிதனெனும் அடிப்படை அலகிலிருந்து எழுந்த அந்த எழுத்துக்கள் கலைத்தன்மையால் பல ஆழங்களைச் சென்று தொட்டிருக்கின்றன. தமிழில் பல சாதனைப்படைப்புகள் அவற்றில் உள்ளன.  ஆனால் அவற்றில் வரலாற்றின் நீட்சியும் விரிவும் இல்லை. அடிப்படையான தத்துவ உசாவல்கள் இல்லை, இருத்தல் சார்ந்த வினாக்கள் தவிர.

அவற்றுக்கு மாறாக தமிழில் இந்திய வரலாற்றை, தமிழ் வரலாற்றை, தத்துவத்தை, தரிசனங்களை கருத்தில் கொண்டு; அவற்றுக்கு எதிர்வினையாகவும் விரிவாக்கமாகவும் எழுதப்பட்ட நவீனநாவல் விஷ்ணுபுரம். அவ்வகையில் தமிழ்நவீனத்துவத்திலிருந்து மீறி எழுந்த முதல் பெரும்படைப்பும் அதுதான். அதன் பெரும்பாலான வாசகர்கள் நவீனத்துவ இலக்கியக் களத்திற்கு வெளியில் இருந்து வந்தார்கள்.  இன்றுகூட, தமிழ்ச் சிற்றிதழ்சார்ந்த இலக்கிய மரபில் இருந்து வரும் ஒரு வாசகனை விட ஆன்மிகத் தேடல்கொண்டு குர்ஜீஃப், ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, மகரிஷி மகேஷ் யோகி ,வேதாத்ரி மகரிஷி என்று சுற்றிவரும் ஒரு வாசகன் மிக எளிதாக விஷ்ணுபுரத்துக்குள் நுழைய முடியும் என்பதைக் காண்கிறேன்.

விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் நண்பர் ரமேஷ் பிரேதன் என்னிடம்  ’முதன்முறையாக நவீனத்துவத்தின் கோட்டை உடைக்கப்பட்டிருக்கிறது’ என்று சொன்னார். அன்று அப்படி நவீனத்துவம் குறித்த விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் விஷ்ணுபுரம் அப்படி ஒரு நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் விஷ்ணுபுரம் முழுக்க முழுக்க ஒரு அந்தரங்கமான நாவல். என்னுடைய தனிப்பட்ட ஆன்மீகத்தேடல், அதன் விளைவான அகத்தத்தளிப்புகள் மட்டுமே அதில் உள்ளன. என்னையே வெவ்வேறு கதாபாத்திரங்களாக பிரித்து அதில் விரித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு நவீனத்துவ படைப்பைப் போல என்னுள்ளே நோக்கி அதிலேயே சுருங்கிவிடவில்லை. என்னை வெவ்வேறு தத்துவ பின்புலங்களில், வரலாற்றுக் காலகட்டங்களில் நிறுத்திப் புனைந்திருக்கிறேன். பிங்கலனும் திருவடியும் பாவகனும் நானே என்று இப்போது வாசிக்கையில் தோன்றுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறானவர்கள், அவர்களின் தத்துவச் சிக்கல்களும் அவர்களின் வரலாற்றுப் பின்புலமும் முற்றிலும் வேறானவை. என்னுடைய அந்தரங்க மெய்த்தேடலை என்னுள் இருந்து வெளியே எடுத்து வரலாற்றில், தத்துவ மரபின் பெரும்பரப்பில் வைத்தேன். அது எட்டுதிசைக்கும் திறந்துகொண்டது. இது ஒற்றைத்திசை கொண்ட ஆறு அல்ல. திசைநிறைக்கும் பெருங்காற்றுச் சுழற்சி.

பெருநாவல்கள் ஒருபுறம் வரலாற்றையும் மறுபுறம் தத்துவத்தையும் இருபெரும் சிறகுகளாக கொண்டே எழுந்து பறக்க இயலும். தனி மனிதனின் வாழ்க்கைக்குள் செல்லும் நாவல்கள் இருநூறு பக்கங்களுக்கு மிகுமென்றால் தன்னிலேயே சுழலத்தொடங்கிவிடும். அவற்றால் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்க முடியாது. அது ஆசிரியன் அல்லது மையக்கதாபாத்திரம் சார்ந்து மட்டுமே எழுதப்படும். பிற அனைத்துமே பிற அல்லது  பிறராக இருக்கும். அந்த ஒற்றைப்படைத்தன்மையே நவீனத்துவப் படைப்பிலுள்ள ஒருமை எனப்படுகிறது. தொடக்ககால வாசகர்களுக்கு வடிவக் கச்சிதம் என்று தோன்றக்கூடிய ஒரு சிறப்பியல்பை அந்த ஒருமை அளிக்கிறது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நவீனத்துவ நாவல்களை பார்த்தால் அது தெரியும்.

மாறாக வரலாற்றையும் தத்துவத்தையும் பேசும் ஒரு நாவல் அதிலுள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு களங்களில் கொண்டு நிறுத்தத் தொடங்குகிறது. அதில் ஒரு கதாநாயகன் இருப்பதில்லை. அவனுடைய மாற்று வடிவங்களும், எதிர்வடிவங்களும் அதே அளவு வல்லமையுடன் தோன்றுகின்றன. ஆகவே கதைமையம், அடிப்படை உசாவல் எல்லாமே பலவாகச் சிதறிவிடுகின்றன. அதில் ஒற்றைக் களம் இருப்பதில்லை. பலகளங்கள் அமைகின்றன. அமைந்த களங்களும் பெருங்காலப்பரப்பில் தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே அது ஒருமையை அடைவதில்லை. மாறாக, அது ஒத்திசைவையே இலக்காக்குகிறது. அந்த ஒத்திசைவென்பது அதன் வடிவத்தால் அடையப்படுவதல்ல. அதனுடைய மையத்தரிசனத்தால் அடையப்படுவது. (அந்த தரிசனம் எதிர்மறை தரிசனமாகக்கூட இருக்கலாம்) விஷ்ணுபுரத்தின் ஒத்திசைவு என்பது அதன் அடிப்படை உசாவல்களால் ,தரிசனங்களால், அவற்றை நிகழ்த்தும் படிமங்களால் ஆனது. ஒன்றைச் சொல்லி, அதன் எதிர்த்தரப்பையும் சொல்லி, சொல்லவிட்டுப்போன ஒவ்வொன்றையும் தேடித்தேடிச் சொல்லி நிறைத்தபடியே செல்லும் அதன் வடிவம் ஓர் எல்லையில் ஒரு முழுமையை அடைகிறது. முழுமையால்   அதன் ஒத்திசைவு கைகூடுகிறது.

அத்தகைய ஒரு நாவல் அதற்கு முன்பு தமிழில் வெளிவந்ததில்லை. அதுவே முந்தைய தலைமுறை வாசகர்களில் விஷ்ணுபுரத்திற்கு ஒரு எதிர்மனநிலையை உருவாக்கியது. இன்று தமிழின் செவ்வியல் படைப்பாகக் கருதப்படும் இந்த நாவல் வெளிவந்தபோது ஒப்புநோக்க எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் பெற்றது. பெருமதிப்புக்குரிய முன்னோடிகளாகிய அசோகமித்திரன்,  இந்திராபார்த்தசாரதி போன்றோர்கள் அதை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பு என்றும் நூறாண்டுகால தமிழிலக்கிய வரலாற்றின் முதன்மைச் சாதனை என்றும் அடையாளப்படுத்தினார்கள். ஆனால் பொதுவாசகர்களும், சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களும் அதற்குள் நுழையவே முடியாமல் இருந்தனர்.

நாவல் சிதறுண்டு கிடப்பதாகவும், ஒன்றுக்கொன்று முரண்பாடாக பேசிக்கொண்டிருப்பதாகவும், தனக்குள் தானே ஆக்கியும் அழித்தும் விளையாடிக்கொண்டிருப்பதாகவும் அன்று குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. ஆனால் அதுவே அதன் சிறப்பு. மையமற்ற வடிவம், மையங்களை அழித்து அழித்து விளையாடிச் செல்லும் பயணம், அதனூடாக உருவாகும் சுழற்சி ஆகியவை நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்தின் அடிப்படைகள். பின்நவீனத்துவம் என்ற பெயரை நான் தவிர்க்கிறேன். அதற்கான அழகியல் என வேறொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதனால்.

விஷ்ணுபுரம் அதன் அடிப்படைக்கேள்விகளால் வேறெந்த நவீனப்படைப்பையும் விட இந்தியாவில் வாழும் ஒருவரின் அந்தரங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ஆலயங்களின் அருகே வாழ்கிறார்கள். பெரும்பாலான ஊர்களில் அண்ணாந்து பார்த்தால் தலைக்கு மேல் கோபுரங்கள் எழுந்து, தெய்வங்கள் குவிந்து கிடக்கின்றன. மனிதர்களைவிட அதிகம் தெய்வங்கள் வாழும் நிலம். இந்நிலத்தின் அக எதார்த்தம் ஒன்றுண்டு. அது பல்லாயிரமாண்டுக் காலப் படிமங்களால் ஆனது. அதை எவ்வகையிலும் கருத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க அகவயமான ஒருபுள்ளியிலேயே குவிந்தவை நவீனத்துவ படைப்புகள்.

நான் வாழும் இந்நகரத்தில் மையமென அமைந்திருக்கும் இத்தெய்வம் வரலாற்றில் என்னை எங்கே பிணைக்கிறது? நான் ஒருமுறை கூடச் செல்லாவிடினும் இந்த ஆலயத்தின் தெய்வங்கள் என்னுள்ளே எங்கேனும் வாழ்கின்றனவா ?எத்தனை விட்டுச் சென்றாலும் அகலாமல் உடன் வரும் எனது குலதெய்வம் என்னுடன் எவ்வகையில் தொடர்பு கொண்டது? இவ்வினாக்களை எழுப்பிக்கொள்ளாத இந்தியர்கள், தமிழர்கள் மிகக்குறைவே. அவ்வினாக்களுடன் ஆக்கபூர்வமாக உரையாடுவதனாலேயே விஷ்ணுபுரம் தமிழில் வாசகர்களுடன் மிக அதிகமாக உரையாடி, மிக அதிகமானவர்களை உருமாற்றி, மிக அதிகமாக அவர்களை கண்டடையச் செய்த படைப்பாக திகழ்கிறது.

அத்துடன் அதனுடைய சிக்கலான வடிவம் அல்லது வடிவ விளையாட்டுத்தன்மை என்பது முழுக்க முழுக்க இந்தியப்புராணங்கள் சார்ந்தது. கதைசொல்லிக்குள் கதைசொல்லி வருவதும், கதைக்குள் கதைசொல்லி திகழ்வதும், கதைகளே கதைகளை ஏற்றும் மறுத்தும் தங்களை நெசவு செய்து கொள்வதும் இந்தியப் பெரும்புராணங்களில் உள்ளவையே. அந்த இயல்பை நவீனப் புனைகதைக்குரியதாக மாற்றிக்கொள்கிறது விஷ்ணுபுரம். ஆகவே ஒருபக்கம் நவீனத்துவத்தைக் கடந்த புத்தம்புதிய அழகியல் ஒன்றை உருவாக்கும்போதே முற்றிலும் இந்தியத் தன்மை கொண்டதாகவும் தமிழ்த்தன்மை கொண்டதாகவும், பல்லாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட மரபின் நீட்சியாகவும் அது அமைந்திருக்கிறது.

இன்று எனது தொடர்வாசிப்பில் நான் உணர்வதென்று ஒன்று உண்டு. சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் விஷ்ணுபுரத்திற்கு நிகரான உலக இலக்கியப்படைப்புகள் மிகச்சிலவே எழுதப்பட்டுள்ளன. என்றேனும் அது உலக வாசகர்கள் மத்தியில் செல்லவும் கூடும். இத்தருணத்தில் விஷ்ணுபுரத்தை எழுத நேர்ந்தமைக்காக நிறைவு கொள்கிறேன். என் ஆசிரியர் காலடியில் இத்தகைய ஒரு நாவலை படைக்கும் ஒரு நல்லூழ் எனக்கு வாய்த்தமைக்காக பெருமிதம் அடைகிறேன்.

இந்நாவலின் முதல் பதிப்பை எனது பெருமதிப்பிற்குரிய அன்னம் மீராவின் மகன் கதிர் வெளியிட்டார். அகரம் வெளியீடாக வந்த அந்நாவல் அன்று பல நண்பர்கள் முன்பதிவு செய்து பணம் அனுப்பிய முதலீட்டில் அச்சாகியது. அதன்பின் கவிதா பதிப்பக வெளியீடாக பலஅச்சுகள் தொடர்ந்து வந்தன. பின்னர் நற்றிணையும் அதன்பின் கிழக்கு பதிப்பகமும் இந்நாவலை வெளியிட்டுள்ளன. இப்போது இந்நாவலின் பெயராலேயே நாங்கள் தொடங்கியிருக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகம் இதை வெளியிடுகிறது. இதன் முதல் வடிவை செப்பனிட்டு உதவியவர் எம்.எஸ். அவர்கள். அவர் இன்றில்லை.  இதனுடன் தொடர்புடைய ஒவ்வொன்றும் வரலாறாகிக் கொண்டிருக்கிறது.

அனைவரையும் நன்றியுடன் வணக்கத்துடனும் இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

ஜெ

நாகர்கோவில்

19.08.2022

விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா

முந்தைய கட்டுரைஜி.நாகராஜன்
அடுத்த கட்டுரைவிசும்பு – ஒரு வாசிப்பு