சுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெ,

இந்தக் கடிதம் மற்றுமொரு சுஜாதா புகழ் பாடி தங்களை வசை மாரி பொழிய எழுதவில்லை. தங்களது சுஜாதா பதிவைப்பற்றிச் சில கருத்துக்களைப் பதிய விருப்பபடுகிறேன். பிழைகளை மன்னிக்கவும்.சுஜாதாவின் மாணவன் என்பதில் பெருமையும் கர்வமும் கொண்டுள்ளவன். தங்களது எழுத்துக்களை சில மாதங்களாக ரசித்து உணர்ந்து வியந்தவன்(மாடன் மோட்சம்,சோற்றுக்கணக்கு).

(ஜெ – நீங்கள் மட்டுமல்ல இலக்கிய அடிப்படை அறிந்த பெரும்பாலான தமிழ் வாசகர்கள் சுஜாதாவைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை )
நாம் அனைவரும் குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்ந்த முறை: தொடக்கக்கல்வி ,இடைநிலைக்கல்வி,மேல்நிலைக்கல்வி  உயர்நிலைக்கல்வி . இதே முறையில்தான் நாம் அனைத்தையும் கற்கிறோம் என்ற பிரமை அனைவருக்கும் உண்டு என்று நம்புகிறேன். அனால் உண்மையில் நாம் அடுத்தடுத்த பேருந்தில் பயணிக்கிறோம் என்பதே எனது கருத்து. அதனால்தான் பலருக்கு சுஜாதாவைப் பிடித்து அடுத்த நிலைக்குச் சென்றதும் ’அவர் என்ன பெரிதாக எழுதிட்டார் உணர்வு இல்லை இலக்கியம் இல்லை’என்று அடுத்த ஆசிரியர் புகழ் பாடுகிறார்கள்.

(ஜெ – சுஜாதாவின் எழுத்து,ஒரு குறிப்பிட்ட வகை. வாசிப்பின்பம் அளிப்பதை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்டது. )
அவரது நோக்கம் தனக்குத் தெரிந்த கற்ற விஷயங்கள்(அறிவியல், கணினி, யதார்த்த நடை, பயண அனுபவம் மற்றும் பல )  அனைத்தும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதாக இருந்திருக்கும். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த முறை ஜனரஞ்சகம்(வாசிப்பின்பம்). ஜனரஞ்சகத்தை ஒரு ஊடகமாக மட்டுமே உபயோகப்படுத்தி உள்ளார் நோக்கமாக அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

(ஜெ –  ஆன்மபரிசோதனையோ,அறிவார்ந்த தேடலோ,உணர்வுகளின் அனுபவமோ என்றால் உங்களுக்கு சுஜாதா பெரிதாகப்படமாட்டார்.)
உங்களது முதல் வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை மன்னிக்கவும். அனால் அடுத்த இரண்டு விஷயங்களையும் நான் பெரிதளவு சுஜாதா அவர்களின் எழுத்துகளில் உணர்ந்து இருக்கிறேன். ஒரே வார்த்தையில் அவர் அப்படி எல்லாம் கிடையாது என்று தாங்கள் கூறுவதை என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

(ஜெ – கடைசியில் வாசகனை நீண்ட நாட்கள் தொடர்ந்து செல்லும் படைப்புகள் மட்டுமே  நிற்கும்.)
அவரது படைப்புகள் வாசகர்களைக் கவர்கிறது. ரசிக்க வைக்கிறது. சிந்திக்க வைக்கிறது. உணர வைக்கிறது. கண்டிப்பாக நிற்கும் என்பதே எனது தாழ்மையான கருத்து.

-கௌரி

அன்புள்ள கௌரிசங்கர்

உங்கள் வாசிப்பைப் பொறுத்தவரை அளவில் உங்கள் கருத்துக்கள் சரி.  அவற்றை நீங்கள் முன்வைப்பதிலும் பிழை இல்லை

என்னுடையவை ஓர் இலக்கிய விமர்சகனாக நான் கூறுபவை. ஒட்டுமொத்தமான ஒரு நோக்கில் இருந்து எழுபவை

முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியத்தை அதன் முழுமையோடும் வரலாற்றுப்பின்னனியோடும் கற்று,   உலக இலக்கியப்பின்னணியுடன் ஒப்பிட்டு, இலக்கிய அழகியல் கொள்கைகளையும் கருத்தில்கொண்டு உருவாக்கி முன்வைப்பவை.

நான் தமிழில் எழுதிய எல்லா முக்கியமான படைப்பாளிகளைப்பற்றியும் முன்வைத்த விரிவான  ரசனை மதிப்பீட்டு விமர்சனங்களின்  ஒரு பகுதியாகக் கூறப்படுபவை இவை. அனைவரைப்பற்றியும் சாதக பாதக அம்சங்கள் கருத்தில்கொண்டு கருத்து சொல்லப்பட்டுள்ளது. அவை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களாகக் கிடைக்கின்றன.

அவை தீர்ப்புகள் அல்ல. விமர்சன முடிவுகள். வாசகனுடன் விவாதிப்பவை. இலக்கிய விமர்சனம் என்பது எப்போதுமே ஒரு விவாதக்களத்தையே உருவாக்குகிறது. அதனூடாகவே ஒரு சமூகத்தின் இலக்கிய அபிப்பிராயங்கள் காலப்போக்கில் திரள்கின்றன. உலகம் முழுக்க இலக்கியம் எங்கே உள்ளதோ அங்கெல்லாம் இலக்கிய விமர்சனமும் உண்டு. இலக்கிய விமர்சனமில்லாத இடத்தில் இலக்கியம் அழியும்.

அந்த வகையில் ஏ.வி.சுப்ரமணிய அய்யர், க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, பிரமிள் எனத் தமிழில் ரசனையை அடிப்படை அளவுகோலாகக் கொண்டு, உலக இலக்கியவாசிப்புப் பின்னணியுடன், கறாரான இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்த ஒரு விமர்சக வரிசை தமிழில் உண்டு. நான் அதன் நீட்சி. அவர்களில் நானே ஒப்பீட்டு நோக்கில் மென்மையாகவும், பக்குவமாகவும் கருத்துச்சொல்பவன்.

வாசகன் இந்தக் கருத்துக்களைக் கருத்தில்கொள்வதும் மேலதிக வாசிப்புக்குச் செல்வதும் தன்னுடைய ரசனையை மேம்படுத்திக்கொள்ள உதவும். இலக்கிய  விமர்சனம் என்ற கலையின் நோக்கமே இதுதான்

ஆக, என் கருத்துக்களையும்  உங்கள் கருத்தில் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெ

தி.ஜா.,வெ.சா.,சுஜாதா

சுஜாதா

சுஜாதா நாடகங்கள்

சுஜாதா பற்றி

மரபை அறிதல் 1

மாபை அறிதல் 2

கேளிக்கை எழுத்தாளர் – சீரிய எழுத்தாளர்

புதுமைப்பித்தனின் வாள்

சுஜாதாவின் அறிவியல்

சுஜாதாவின் அந்தரங்கம்

சுஜாதாவை கைவிட்டது எது”

விளிம்புகளில் ரத்தம் கசிய-சுஜாதாவின் நாடகங்கள்

சுஜாதா இரு வம்புக்ள்

சுஜாதாவுக்காக ஓர் இரவு

முந்தைய கட்டுரைசங்கப்பாடல் நவீனவாசிப்புகள்
அடுத்த கட்டுரைசிந்துசமவெளி எழுத்துக்கள்