ஹூசெய்ன், ஒரு கடிதம்

எம் எஃப்  ஹுசைன் சம்பந்தமான தங்களின் கடிதங்களைப் படித்தேன்.தாங்கள் கூறுவது போல் அவரை எதிர்ப்பவர்கள் தெருச்சண்டைக்காரர்கள் அல்ல.இந்த நாட்டில் ஒரு இஸ்லாமியர் குண்டு வைத்தால் அவர் ஏன் வைத்தார் என்று ஆராய்வார்கள் ஆனால் அதைப் பெருன்பான்மையினர் செய்தால் fascist என்று முத்திரை குத்துவார்கள்.இவ்வாறு இருக்க ஹுசைன் அவர்களை எதிர்த்தவர்கள் ஏன் எதிர்த்தார்கள் என்று பார்ப்பது சற்றுத் தேவை.தாங்கள்  கூறுவது போல் அவர் கலையால் மோன நிலை அடைந்தார்  என்பது எல்லாம் சாதாரண மக்களிடம் எடுபடாது.ஒரு சாமியார்,தான் மோன நிலை அடைந்ததாகக் கூறினால் மக்கள் இன்று அவர்களைச் சந்தேகப் படுவார்கள்.அது போல் இவர் மோன நிலை அடைந்தேன் என்பது எல்லாம் அவரின் தனிப்பட்ட விஷயம்.தாங்கள்  கூறுவது போல் எவ்வாறு மதத்தில் ஒரு நெகிழ்ச்சி இருக்க வேண்டுமோ அது போல் ஹுசைனை எதிர்த்தவர்கள் அவரிடம் ஒரு நெகிழ்ச்சியை எதிர்பார்த்தார்கள்.தான் எடுத்த படத்தின் ஆரம்பத்தில் வரும் குரானை  எதிர்த்தார்கள் என்பதற்காக அதை நீக்கி நெகிழ்ச்சி காட்டியவர் ஏன் இவரை எதிர்த்துப் போராடிய ஹிந்து மக்களிடம் காட்டவில்லை என்பது மிகப் பெரிய கேள்வியே.மேலும் அவர் வரைந்த அந்த ஓவியம் இருபது வருடம் பழமையானது  என்பதால் அதை எதிர்க்கக்கூடாது என்பது சரியான வாதமாயினும் அவரை எதிர்த்தவர்கள் அவரின் ஓவியங்களை எதிர்கவில்லை,ஆனால் அவரின் மனநிலையை எதிர்த்தார்கள்.

மேலும் இன்றும் தமிழகத்தில் தாங்கள்  பார்த்தால் சாதரணமாக ஆங்கில வழிக்கல்வியையும் ,ஹிந்தி மொழியையும் எதிர்க்கும் எழுத்தாளர்கள் தான் அதிகம்.ஏன் அவர்களிடம் மொழி சார்ந்த ஒரு நெகிழ்ச்சி இல்லை? ஆனால் அவர்களோ மதம் சார்ந்த நெகிழ்ச்சி பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுவார்கள் .இதிலிருந்து தெரிவது என்ன வென்றால் நெகிழ்ச்சி என்பது வணிகரீதியாகப் பார்க்கப்படும் ஒரு மனநிலை.ஆங்கில வழிக் கல்வி படித்த மக்களால்  தனது எழுத்தின் வணிகம் குறைந்து விடும் என்பதால் அதை எதிர்க்கும் எழுத்தாளர்கள்தான் அதிகம்.ஆகவே அது போலவே ஹுசைன் அவர்களும் தனது நெகிழ்ச்சியை ஒரு சாராரிடம் காட்டி  வணிகம் பாதிக்கும் இடத்தில் அதைப் பிரயோகிகவில்லை என்பதே உண்மை.இது போக ஒருவர் மீது நம்பிகை வைத்துப் பேசுவது,அவ நம்பிகை வைத்துப் பேசுவது எல்லாம் அவரின் செயல்களினாலே தீர்மானிக்க முடியுமே தவிரப் பிறவற்றால் முடியாது.ஹுசைன் அவர்களின் செயல்கள் ஒரு சாராரிடம் ஒருவகையாகவும்,பிறரிடம் மற்றொன்றாகவும் இருக்கும்போது கண்டிப்பாக நம்பிகை அவநம்பிக்கையாகிவிடும் .

மேலும் இப்போது இவ்வளவு நெகிழ்ச்சி உள்ள மதத்தில் இருந்து கொண்டு ஏன் இவர்கள் இவரை எதிர்க்கிறார்கள் என்பது தங்களுடைய சரியான கேள்வி.அதற்கு முழுக் காரணமும் தங்களை நடு நிலையாளர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு சார்பு நிலை கொண்ட செகுலர்வாதிகளே.ஈரானிலும் இராக்கிலும் ஏதாவது நடந்தால் அதை எதிர்க்கும் செகுலர்வாதிகள் இந்தியாவில் நடந்தால் அதை சரியான பிற்போக்குத்தனம் என்ற வாததுடனே ஆரம்பிப்பார்கள்.இது ஏதோ இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல.கடந்த 50 வருடமாக நடைபெறுகிறது.அதைப் பார்த்து வருத்தமுற்ற ஒரு தலைமுறையினர்,அதைத் தங்களின் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல,அவர்கள் இப்போது இதை எதிர்க்க ஆரம்பித்து உள்ளனர்.மேலும் செகுலர் எழுத்தாளர்கள் என்று கூறிக் கொண்டு ஒரு சார்பு நிலையிலே எழுதும் பல எழுத்தாளர்களின் முகமூடிகள் இப்போதுதான் களையப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

மேலும் ஏதோ இவாறு எதிர்ப்பவர்கள் மக்களுக்கு உதவி செய்யாமல் வெறும் சண்டைக்காக அலைபவர்கள் என்ற வாதம் தவறானது.இன்றும் சுனாமி போன்ற இக்கட்டான தருணங்களில் மிகப் பெரும் உதவிகளைச் செய்தவர்கள் ஹிந்து இயக்கத்தினரே .மேலும் கிறித்துவ மதத்தினர் செய்யும் உதவி போல் இவர்கள் செய்ததில்லை என்ற தங்கள் வாதம் தவறானது.ஏனென்றால் கிறித்துவ மதத்தினர் உதவி என்ற பெயரில் பெரிய அளவில் மதமாற்றமே நிகழ்த்தினார்கள்.அது எவ்வாறு உதவியாகும்?உதவி என்பது  எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்வது.ஆனாலும் என்னே செய்வது?ஹிந்து இயக்கத்தினரின் உதவியை மறக்கடித்து அவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்று கூறும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் தான் அதிகம்.

தங்களின் கோபமான கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை என்பது நியாயமானதே,ஆனால் உண்மையான நடுநிலையாளர்களுக்கு  இந்தச் சமூகத்தில் எப்போதும் இடமுண்டு அவர்களுக்கு என்ற சிம்மாசனம் என்றும் மாறுவதில்லை.இதற்குச் சரியான எடுத்துகாட்டு தாங்களே.ஆனாலும் தாங்கள் எழுதும்போது தங்களை ஒரு சார்பு மன நிலை கொண்ட செகுலர்வாதிகளின்  தரத்திற்கு மாற்றம்  செய்து தங்களின் தளத்தை விடக் கீழே வந்து வாதிடுவது ,தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் மிகப் பெரிய அவமானமாகும்.

நன்றி
நா ஹரி ஷங்கர்

அன்புள்ள ஹரிஷங்கர்

நான் நீங்கள் சொல்லியிருக்கும் இந்த வாதங்களுக்கு மேலதிகமாகவே என் தரப்பைச் சொல்லியிருக்கிறேன்.  கருத்தியல் சார்பு என்பது ஒரு மாய வளையம். அதற்குள் இருப்பவர்களுக்கு எதையும் சொல்லிப் புரியவைக்க முடியுமென நான் நம்பவில்லை

ஜெ

எம்.எஃப்.ஹுசெய்ன்

ஹுசெய்ன் கடிதங்கள்

ஹூசெய்ன் இந்துதாலிபானியம்

முந்தைய கட்டுரைகணிதம்
அடுத்த கட்டுரைஅசடனும் ஞானியும்- கடிதங்கள்