ஹெலென்
இலியட்டின் கவித்துவம்
இலியட் காவியத்தை வீரகதைப்பாடல்களில் இருந்து காவியத்தை நோக்கி நகர்ந்த ஒருவடிவம் என்று சொல்லலாம். ஆகவே உக்கிரமான போர்ச்சித்தரிப்பே அதன் சிறப்பு. இலியட்டில் முக்கியமான கதையோட்டம் ஏதும் இல்லை. அதன் முதல் வரியே சொல்வதுபோல அது அக்கிலிஸ் என்ற மாவீரனின் ஆண்மை, ஆணவம், கட்டுக்கடங்காத சினம் ஆகியவற்றின் விரிவான சித்தரிப்பு மட்டுமே.
டிராய் என்ற நகரில் இருந்த இலியம் என்ற கோட்டையில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளே இந்தக்காவியத்தில் சொல்லப்பட்டுள்ளன. அக்கிலிஸ் தீட்டிஸ் என்ற கடல்தேவதையின் மகன். அவனுடைய தாய்க்கும் தந்தைக்கும் நடக்கும் திருமணத்திற்கு ஹீரா,அதீனி,அஃப்ரோடட்டி ஆகிய மூன்று தேவதைகளும் வந்திருக்கின்றன. அந்தத் திருமணத்துக்கு வரும் வம்புக்கார தெய்வமான எரிஸ் என்பவள் ஒரு தங்க ஆப்பிளை ஒரு மேஜைமேல் வைத்து அது உலகிலேயே அழகான தேவதைக்குப் பரிசு என அறிவிக்கிறாள். மூன்று தேவதைகளும் அதற்காகப் போட்டியிடுகின்றன
அந்தபோட்டிக்கு நடுவராக டிராயின் இளவரசனான பாரீஸ் அழைக்கப்படுகிறான். அவனுக்கு அஃப்ரோடைட்டி,ஒரு ரகசிய வாக்குறுதியை அளிக்கிறாள். அதாவது மானுடர்களில் பேரழகியை அவனுக்கு அவள் பார்த்துக்கொடுப்பதாகச் சொல்கிறாள். அதற்கு மயங்கிய பாரீஸ்,அஃப்ரோடைட்டியைத் தேவதைகளில் அழகியாகத் தேர்வு செய்கிறான். அஃப்ரோடைட்டி கண்டுபிடித்த மானுடப்பேரழகி ஹெலன். இது ஒரு முற்காலக்கதை.
ஹெலன்,லீடா என்ற பெண்ணுக்கும் கிரேக்க தலைமைக்கடவுளான ஸியுஸுக்கும் பிறந்தவள். லீடா,டிரிண்டாரியூஸ் என்ற மன்னனின் மனைவி. ஸியுஸ் ஓர் அன்னப்பறவையாகச் சென்று லீடாவைக் கூடியதனால் உருவான முட்டையில் இருந்து ஹெலென் பிறந்தாள் என்பது கிரேக்க புராணம். அவளை ஸ்பார்ட்டாவின் மன்னன் மெனிலியஸ் என்பவர் மணந்துகொண்டார்.
மெலினியஸின் அண்ணன் அகமெம்னான். அகமெம்னான் கிரேக்கப்படைகளின் ஒட்டுமொத்த தளபதியாக இருக்கிறார். ஒரு கிரேக்கப்பேரரசை அமைக்கும் இலக்கு அவருக்கிருக்கிறது. கிரேக்க வெற்றிக்குத் தடையாக அவர் எண்ணுவது ட்ரோஜன்களின் டிராய்நகரைத்தான். டிராயுடன் பல பூசல்கள். அவை பேசி முடிக்கப்படுகின்றன. சமரசத்துக்கு பாரீஸும் அவனது அண்ணன் ஹெக்டரும் ஸ்பார்ட்டாவுக்கு வருகிறார்கள். அங்கே பாரீஸ் ஹெலெனைப் பார்க்கிறான். பார்த்ததுமே காதல் கொள்கிறான். இந்த சந்திப்பை ஏற்பாடுசெய்ததும் காதல் வரசெய்ததும் அஃப்ரோடைட்டி என்ற தெய்வம்.
பாரீஸுடன் ஹெலென் டிராய் நகருக்குச் சென்றுவிடுகிறாள். தன் 9 வயதான மகள் ஹெர்மியோனையும் விட்டுச்செல்கிறாள். இதைப் பெரிய அவமதிப்பாக மெனிலியஸ் நினைக்கிறார். ஆனால் அகமெம்னானுக்கு ஒட்டுமொத்த கிரேக்க நகரங்களையும் திரட்டி டிராயை அழிப்பதற்கு அது ஒரு நல்வாய்ப்பு. அவருடைய அறைகூவலில் 1186 கப்பல்கள் கொண்ட பெரும் கிரேக்கப்படை டிராயை வெல்வதற்காகச் செல்கிறது. பத்து ஆண்டுக்காலம் டிராய் நகரை கிரேக்கப்படைகள் முற்றுகையிட்டுப் போர் புரிகின்றன. இந்தப்போரின் கடைசி ஐம்பது நாட்களின் நிகழ்வுகளை மட்டுமே இலியட் விவரிக்கிறது.
அதாவது இதை மகாபாரதத்தின் யுத்தபர்வம் அல்லது கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் மட்டும் என்று சொல்லலாம். ஒருவேளை இது முழுமையாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தப்பகுதியையே ஒரு முழுமையான காவியமாகக் கொள்வதே கிரேக்க, ஐரோப்பிய மரபின் வழக்கமாக இருக்கிறது.
அகமெம்னானுடன் எப்போதுமே அக்கிலிஸுக்குக் கருத்து வேறுபாடு இருந்தது. அக்கிலிஸின் தன்னிச்சையான போக்கை அகமெம்னான் விரும்பவில்லை. அக்கிலிஸுக்கு அகமெம்னானின் பேராசை பிடிக்கவில்லை. போரின் கடைசிக்காலகட்டத்தில் அகமெம்னானுக்கும் அக்கிலிஸுக்கும் மோதல் முற்றுகிறது. இந்த இடத்தில் இலியட் ஆரம்பிக்கிறது. அக்கிலிஸ் போரில் கலந்துகொள்ளாமல் விலகுகிறான். அவனை சமாதானம்செய்ய முயல்கிறார்கள். அவன் ஏற்பதில்லை.
இந்நிலையில் அக்கிலிஸின் உயிர்நண்பனான பெட்ரோகுலஸ் அக்கிலிஸுக்குப் பதிலாகப் போருக்குச் செல்கிறான். அங்கே பாரீஸின் அண்ணன் ஹெக்டரால் கொல்லப்படுகிறான். ஹெக்டரை வேறு எவராலும் வெல்ல முடியாது. ஆகவே அக்கிலிஸ் கடும் சினம் கொண்டு எழுகிறான். ஹெக்டரைக் களத்தில் கொல்கிறான். அவன் உடலைத் தேர்த்தட்டில் கட்டிக் களமெங்கும் இழுத்துச் சின்னாபின்னமாக்குகிறான். பத்துநாள் இப்படி அந்தப் பிணத்தை அவமதிக்கிறான்
ஹெக்டரின் அப்பா ப்ரியம் அக்கிலிஸிடம் மன்றாடிக்கேட்டுக்கொண்டதனால் அந்தச்சடலத்தை விட்டுக்கொடுக்கிறான். ஹெக்டரின் இறுதிச்சடங்குடன் இலியட் முடிவடைகிறது. அதன் பின்னர் கிரேக்கர்கள் படைவிலக்கம் செய்வதாக நடித்து ஒரு மாபெரும் மரக்குதிரையை மட்டும் விட்டுச்சென்றார்கள். டிரோஜன்கள் வெற்றிக்களிப்பில் அக்குதிரையைக் கோட்டைக்குள் கொண்டுசென்றார்கள்.. அதனுள் ஒளிந்து இருந்த கிரேக்கர்கள் இரவில் கோட்டை வாசலைத் திறந்தார்கள். இருளில் வந்திறங்கிய கிரேக்கர்கள் கோட்டைக்குள் சென்று டிராய் நகரைப் பிடித்தார்கள்.
ஹெலென் பேரழகான வஞ்சமகளாகவே கிரேக்கத் தொன்மங்களில் காணப்படுகிறாள். ஹெக்டரும் பாரீஸும் இறந்தபின் அவள் பாரீஸின் தம்பியாகிய டெய்ஃபோபஸின் கள்ளக்காதலியாக இருக்கிறாள். கடைசியாக டிராய் கிரேக்கர் கையில் வீழ்ந்தபோது ஹெலென் டெய்ஃபோபஸின் வாளை ஒளித்துவைத்துவிட்டுத் தப்பி ஓடுகிறாள். அவன் மெனிலியஸ்,ஒடிஸஸ் ஆகியோரின் கைகளில் நிராதரவாக சிக்குகிறான். ஹெலெனின் முடிவு பற்றிக் கிரேக்க புராணங்களில் பல கதைகள் உள்ளன.
மெனிலியஸ் அவளைத் தன் கைகளால் கொல்லவேண்டுமென ஆசைப்பட்டதாகவும் ஆனால் கடைசியில் அவள் சிக்கிக்கொண்டபோது அவன் வாளைத் தூக்கியதும் அவள் தன் ஆடைகளைக் கீழே நழுவ விட, அவள் உடலின் அழகைக் கண்டு ’இந்தப்பேரழகை எப்படி வாள் தீண்ட முடியும்!’ என்று சொல்லி அவளை ஏற்றுக்கொண்டு திரும்பவந்ததாகவும் ஒரு கதை உள்ளது. ஹோமரின் ஒடிஸியில் டெலெமேக்கஸ் நீண்ட பயணம் முடிந்து திரும்ப வந்தபோது மெனிலியஸின் மனைவியாக அவள் மீண்டும் ஸ்பார்ட்டாவில் இருந்ததைக் காண்கிறான்.
அக்கிலிஸ் பின்னர் போரில் பாரிஸால் கொல்லப்படுகிறான். அவனுடைய குதிகாலில் அம்பெய்துகொல்லும்படி அப்போல்லோ பாரிஸுக்கு ரகசியமாக வழிகாட்டுகிறது.
இலியட், அக்கிலிஸின் உக்கிரமான வெறியாட்டத்தின் முடிவுடன் ஹெக்டரின் இறுதிச்சடங்குடன் நிறைவடைகிறது.
மூன்று உச்சங்கள்
எந்த ஒரு வீரகதைப்பாடலையும்போல இலியட்டிலும் நான்கு அம்சங்களையே முக்கியமாகக் கருதவேண்டும். ஒன்று, வஞ்சினம், இரண்டு, போர்ச்சித்தரிப்பு. மூன்று, இரங்கல். இம்மூன்று இடங்களிலும்தான் கவித்துவத்துக்கான வாய்ப்புகள் உள்ளன. இலியட்டில் உள்ள வஞ்சினப்பகுதிகள் உக்கிரமான உரைகளாக அல்லாமல் இயல்பான உரையாடல்களாகவே உள்ளன. வஞ்சினத்தை ஓர் அலையின் எழுச்சியாக உருவகிக்கலாம்
காயத்தில் இருந்து குருதி வழிவதைக் கண்டு
அகமெம்னான் அஞ்சினான்.
அச்சமற்ற மெனிலியஸும்தான்.
ஆனால் அம்பின் கொக்கிகளும் அம்புநுனியைக் கட்டிய சரடும்
காயத்துக்குவெளியிலேயே இருக்கக்கண்டு அச்சம் தணிந்தான்
ஆனால் அகமெம்னான் நெடுமூச்செறிந்தான்
அவன் படைகளும் முனகிக்கொண்டன
மெனிலியஸின் கரங்களைப்பற்றிக்கொண்டு
அவன் சொல்லலானான்
’அன்புள்ள சகோதரனே, எங்கள் முன்னணி வீரனாக நீ கிளம்பிச்செல்கையில்
நான் ஒரு வஞ்சினம் எடுத்தேன்
நீ கொல்லப்படுவாயென்றால் நான் பழிவாங்குவேன் என்று.
வாக்குறுதிகளை மீறி டிரோஜன்கள் உன்மேல் அம்புவிட்டிருக்கிறார்கள்
உன்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆட்டுக்குட்டிகளின் குருதியாலும் மதுவாலும்
நட்புள்ள வலக்கைகளாலும்
நமது நம்பிக்கைகளை உறுதியிட்டோம்
அவை பொருளிழந்து போகக்கூடாது
ஒலிம்பஸின் ஆட்சி இங்கே இப்போதே வராமல் போகலாம்
ஆனால் என்றோ ஒருநாள் வந்தே தீரும்
அப்போது அவர்கள் தங்கள் உயிரால்
தங்கள் மனைவிகள் குழந்தைகளின் உயிரால்
அதற்கு விலைகொடுப்பார்கள்
அந்த நாள் வந்தே தீரும்
ஓங்கிய இலியமும் அதனுள் வாழும் பிரியமும் அவன் மக்களும்
வீழ்ச்சியடைவார்கள்
இன்றைய அவர்களின் துரோகத்திற்குத் தண்டனையாகத்
தன் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குரோனஸின் மைந்தனின்
அச்சமூட்டும் தலையணி அவர்கள் மேல் நிழல்பரப்பும்.
ஆம் இது நிகழ்ந்தே தீரும்.
ஆனால் மெனிலியஸ் இங்கே உன் உயிர் பிரிவதே விதியென்றால்
நான் ஆறாக் கடுந்துயர் கொள்வேன்.
அர்கோஸுக்குக் கையறுநிலையுடன் திரும்பிச்செல்வேன்.
கிரேக்கர்களும் உடனே வீடுதிரும்புவார்கள்
பிரியமும் டிரோஜன்களும் கடும்போரிலும்
ஹெலனை விட்டுவிடவில்லை என்ற புகழை அடைவார்கள்.
இந்த டிராய்மண்ணில் கிடந்து உன் எலும்புகள் மட்கும்
உனது இலட்சியமோ நிறைவேறாது எஞ்சும்.
உன்னுடைய கல்லறைமேல் ஏதேனும் ஒரு
முட்டாள் டிரோஜன் ஏறிநின்று சொல்வான்
‘அகம்மெம்னானின் வஞ்சினங்களெல்லாம் இப்படியே ஆகட்டும்
வீணாகத் தன் படைகளைக் கொண்டுவந்தான்
காலியான கப்பல்களுடன் தன் வீட்டுக்கே திரும்பிச்சென்றான்
மெனிலியஸை இங்கே விட்டுச் சென்றான்’
அவர்களில் ஒருவன் அப்படிச் சொன்னால்கூட
இந்த மண்பிளந்து என்னை விழுங்கட்டும்’
இலியட்டின் போர்க்களக்காட்சிகள்,மூலத்தில் ஆவேசமாக வேகமான தாளத்துடன் பாடும் அமைப்பில் உள்ளன. அவற்றின் மொழியாக்கத்தின் உரைநடை வடிவத்தில் அவற்றின் முழுவீச்சையும் நாம் உணர முடியாது. போர் உச்சத்தை அந்த அலையின் சிகர நுனி எனலாம் . இலியட் காவியத்தில் பெரும்பகுதி இதைப்போன்ற உக்கிரமான போர் வர்ணனைகளால் ஆனதாகவே உள்ளது
அறைகூவல் விடுத்து அவன் தேரைவிட்டு இறங்கியபோது
அவனுடைய கவசங்கள் ஒன்றுடன் ஒன்று உரசக்கேட்டு
அச்சமறியாத வீரர்களும் நடுங்கினார்கள்
மேற்கத்தியக்காற்று சினத்துடன் ஓங்கி அறைகையில்
தொலைவிலிருந்து பொங்கி எழுந்து
கடற்கரை நோக்கி வந்து மோதி
முரட்டுப் பாறைகள் மேல் அறைந்து
வில்களும் முடிகளும் மேலே எழுந்து மின்ன
எல்லாப்பக்கமும் உப்புநுரை சிதற
மணல்மேல் ஓலமிட்டுப் பரவும் பேரலைபோல
கிரேக்கப்படைகள் களத்தில்
திடமாக முன்னேறிச்சென்றன.
படைத்தலைவர்கள் ஆணைகளக் கூவினர்
படைகளோ ஒரு சொல் பேசவில்லை
எவருக்கும் நாவே இல்லையென்பதுபோலிருந்தது
அவர்களின் கட்டுப்பாடு.
அவர்கள் முன்னே செல்லும்போது
கவசங்கள் கடலலைபோல் வெயிலில் ஒளிவிட்டன
ஆனால் டிரோஜன் படைகளின் ஓசையோ
பெரும் மந்தைகளின் உரிமையாளனின் தோட்டத்தில்
செம்மறிகளின் கூச்சலென ஒலித்தது
பல்வேறு இடங்களில் இருந்து வந்த
பல்வேறு மொழிகள் பேசும் அவர்களின் படைகள்
குழம்பிச் சுழித்து ஓலமிட்டன
அவர்களை மார்ஸ்எழுச்சியூட்டியது
மறுபக்கத்தை மினர்வா ஊக்கமூட்டியது
அவர்களுடன் வந்தன பேரச்சமும் அழிவும்.
கொலைவெறிகொண்ட மார்ஸின்
களைப்பில்லாத சகோதரியோ
ஆரம்பத்தில் சிறியவளாக இருந்தாள்
பின்னர் தன் தலை விண்ணில் முட்டப் பேருருவம் கொண்டாள்
அவள் கால்களோ மண்ணிலேயே இருந்தன
அனைவருக்கும் சமமாகத் துயரத்தைப் பூசிவிட்டவளாக
அவள் களத்திலே சுற்றிவந்தாள்.
படைகள் மோதிக்கொண்டன
போர்வெறியில்
கேடயங்கள் கேடயங்களுடன் மோதின
ஈட்டிகள் ஈட்டிகளுடன் கோர்த்தன
குமிழ்வைத்த வெண்கலக் கேடயங்கள் மோதி ஒலித்தன
மரண ஓலங்கள் ஒலித்தன
கொல்பவர்களும் கொல்லப்பட்டவர்களும் வீறிட்டனர்
நிலம் குருதியால் நனைந்தது
மலைச்சிகரத்துப் பனி உருகிப் பெருக்கெடுத்த இரு நதிகள்
மலையிடுக்கில் சந்தித்துப் பெருவெள்ளமாக ஆனதைப்போல!
போர்க்களத்தில் இருதரப்பும்
வெறிகொண்டு மோதிக்கொண்ட பேரோலம்
தூரத்து மலையில் நின்ற மேய்ப்பனும்
கேட்கக்கூடியதாக இருந்தது.
அக்கிலிஸும் ஹெக்டரும்
இலியட் போன்ற காவியங்கள் சொல்லும் உயர்மட்ட வன்முறையின் மறுபக்கம் உக்கிரமான துயரம். கொல்லப்பட்டவர்களை எண்ணி இருப்பவர்கள் கொள்ளும் மாளாத்துயரம். இரங்கலை நாம் அந்த அலையின் இறங்கும் நிலை என உருவகிக்கலாம். இலியட்டின் கையறுநிலைக் காட்சிகளில் உச்சமானவை இரண்டு. ஒன்று நண்பன் கொல்லப்பட்டபோது அக்கிலிஸ் கொள்ளும் துயரம். எதற்கும் எந்தப்பொருளும் இல்லை என்ற ஆழமான உணர்ச்சியை அவன் அந்தத் துயரத்தின்போது அடைகிறான்
‘அப்படியென்றால் இப்போதே நான் இறக்கிறேன்
ஏனென்றால் என் தோழனைக் காக்க முடியவில்லை என்னால்
தன் பிறந்த வீட்டிலிருந்து வெகுதொலைவில் அவன் வீழ்ந்தான்
அவனைக்காக்கவேண்டிய என்கரங்களோ அப்போது துணையிருக்கவில்லை
என் நாட்டுக்கு நான் திரும்ப மாட்டேன்
எனக்காக என்ன இருக்கிறது அங்கே?
வல்லமை மிக்க ஹெக்டரால் என்தோழர்கள் கொல்லப்பட்டபோது
என் நண்பன் அவனால் வீழ்த்தப்பட்டபோது
துணையிருக்க என்னால் முடியவில்லை
பூமிக்குச்சுமையாக நங்கூரமிட்ட கப்பல்களில்
வீணாக இருந்தேன் நான்.
சபையில் எனக்கு மதிப்பில்லாமலிருக்கலாம்
கிரேக்கர்களில் நானே நிகரற்ற வீரன்.
பொறாமையே ஒழிந்து போ
மனிதர்களிடமிருந்தும் கடவுள்களிடமிருந்தும்.
கோபமே கூடவே ஒழி
நீதியுள்ள மனிதனின் இதயத்தைக்கூட
அது கடினமாக்கிவிடுகிறது
ஆன்மாவில் புகையென எழுந்து கரிபடியச்செய்கிறது
தேன் துளிகளை விட இனிமையாக ருசிக்கவும் செய்கிறது
அகமெம்னான் என்னுள் உருவாக்கிய கோபமும் அப்படித்தான்!
மாவீரன் ஹெக்டர் கொல்லப்பட்டபோது ட்ரோஜன்கள் கொள்ளும் உக்கிரமான துக்கம்,பல்வேறு கையறுநிலைப் பாடல்களாக இலியட்டில் வருகிறது. ஹெக்டரின் உடலை அக்கிலிஸிடமிருந்து மீட்டுக்கொண்டுவருகிறார் ஹெக்டரின் தந்தையான ப்ரியம். அப்போது ஹெக்டரின் மனைவி அழும் கையறுநிலைப் பாடலும் இக்காவியத்தின் சிறந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
ஹெக்டரின் சடலத்தைக் கழுதைமேல் வைத்துக்கட்டி ப்ரியம் கொண்டுவருகிறான். பெர்காமஸ் மலைமேல் ஏறி நின்று அதை ஹெக்டரின் தங்கை காஸண்ட்ரா பார்க்கிறாள். டிராய் நகரம் முழுக்கக் கேட்கும்படி அவள் அலறுகிறாள்
ட்ரோஜன்களே டிராய் நகரப் பெண்களே
இதுவரை நீங்கள் பார்த்ததெல்லாம்
வென்று மீளும் ஹெக்டரை
அவனை வரவேற்றுப் பாடினீர்கள் கொண்டாடினீர்கள்
அது உண்மையென்றால்
வந்து பாருங்கள் அவனை இப்போது
அவள் அப்படி அலறியதும் டிராய் நகரமே துக்கத்தில் மூழ்கியது. அனைவரும் வாசல்களுக்கு ஓடிவந்து அவன் சடலத்தைப் பார்த்தார்கள். அவன் உடல்மேல் விழுந்து தங்கள் முடியைப்பிய்த்துக்கொண்டு கதறியழுதார்கள். ப்ரியம் அவர்களிடம் கெஞ்சி மன்றாடி அரண்மனைக்குச் சென்று சேர்ந்தார்
ஹெக்டரின் மனைவி ஆண்ட்ரோமக்கி கணவனின் சடலம் மேல் விழுந்து அழுதாள்
என் துணைவனே இளமையிலேயே இறந்தாய்
என்னை இப்போதே விதவையாக்கி
உன் இல்லத்தில் விட்டுச்சென்றாய்
நாம் தீவினைசெய்த பெற்றோர்
நம் மகனோ இன்னும் சிறு குழந்தை
அவன் வாலிபனாக வளர்வானென்றே நான் இப்போது நம்பவில்லை
அதற்கு முன்னாலெ இலியம் தரைமட்டமாகிவிடும்
இந்தக்கோட்டையின் காவலனே நீ தானே?
இந்த மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ரட்சகன் நீயல்லவா?
நமது பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்டுக்
கப்பல்களுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்
நானும் அவர்களுடன் இருப்பேன்
என் அருமை மகனும் குரூரமான உரிமையாளனிடம்
அடிவாங்கி ஊழியம் செய்யும் அடிமையாவான்.
அல்லது தன் மகனுக்கோ சகோதரனுக்கோ நண்பனுக்கோ
பழிவாங்கும் வெறியுடன் இங்கே வரும்
ஏதேனும் கிரேக்கவீரன் இவனைக்
காலைப்பிடித்துச் சுழற்றிக்
கோட்டைக்கு வெளியே எறிவான்.
ஹெக்டர் அவர்களைக் கொன்றிருப்பான்
அவன் கையால் மண்ணில் விழுந்தவர்கள் எத்தனையோ!
ஆகவேதான் இங்கே ஒவ்வொருவரும் கதறுகிறார்கள்
ஓ ஹெக்டர்
உங்கள் பெற்றோருக்கு எத்தகைய பெருந்துயரத்தை அளித்துவிட்டீர்கள்!
ஆனால் என் துயரமோ அனைத்தையும்விடப் பெரிதல்லவா?
ஏனென்றால் மெல்லியபடுக்கையில் கிடந்து
என்னைத் தழுவக் கைநீட்டியபடி நீங்கள் சாகவில்லையே
இன்றும் இனிமேலும் இரவுபகலாக நான் நினைவில் வைத்துக்
கண்ணீருடன் சொல்லிக்கொள்ளும் எந்த வார்த்தையும்
நீங்கள் தந்து செல்லவில்லையே’