பீர்புட்டிகள்-கடிதம்

அன்புள்ள ஜெ,

மென்பொருளாளர் பற்றி நம்  சமூகத்திற்கு எப்போதும் ஓர் காழ்ப்புணர்ச்சி உண்டு.   அது பலவிதமான வடிவங்களில் வெளிவரும்.  உடைத்தவன் மென்பொருளாளனாகவே இருக்கலாம்.  இல்லாமலும் இருக்க்கலாம்.  அவன் செய்தது தவறே.  சந்தேகம் இல்லை.   ஆனால்  பீர் பாட்டில் உடைத்த இளைஞன் ஒரு அக்கறையில்லாத சமூகத்தின் பிம்பமாகவோ இல்லை வழி தவறிய பணக்கார வாரிசாகவோ இல்லை ஒரு பன்னாட்டு வங்கி ஊழியனாகவோ இல்லை விளம்பரத் துறை விற்பன்னனாகவோ அல்லது பொதுவான  இக்கால இளைஞர்களின் ஓர் உருவகமாகவோ பார்த்தவருக்கு தெரியவில்லை.  அவன்  மென்பொருளா -ளனாகத் தான் தெரிகிறான் !  ஞான திருஷ்டி?

எல்லாத் துறைகளிலும் நல்லவரும் கெட்டவரும் உண்டு.  மென்பொருளும் அதற்கு விதி விலக்கல்ல.   ஆனால் தான் பார்த்த ஒருவன் மென்பொருளாளன் என்று கூறி மென்பொருளாளனின் பொதுபடையான கூற்றுக்களை அலசிக் காரணிகளைக் கண்டு பிடித்து எதை நிறுவப் பார்கிறார்கள்?   சமுதாயச் சீர்கேடு என்றால் அது அனைவர்க்கும் பொது.   வேசி மட்டும் எங்களூருக்கு வராவிட்டால் நாங்கள் எல்லாம் உத்தமர்களாகவே இருந்திருப்போம் என்னும் உள்ளப் பாங்கு.   அத்தனை சீர்கேட்டிற்கும் இவர்களே காரணம் என்ற புறம் பேசும் தலைப்பாடு.

பொதுப் படையான வசையாகக் காரணம் என்ன?    நீங்கள் சொன்ன அதே இயலாமை.   மாதச்சம்பளம் என்னும் கண்ணுக்குத் தெரியாத அளவுகோல்.    ஓய்வு பெறும் வயதில் தான் வாங்கும் கடைசி மாத சம்பளத்தை விட இவர்கள் வாங்கும் முதல் மாத சம்பளம் அதிகம் என்ற காழ்ப்பு.  அது தரும் வெறுப்பு.  இந்த வெறுப்பு சமூகத்தின் பல தளங்களில் பல வடிவங்களில் ஒலிக்கிறது.  “நீ மென்பொருளாளன்தானே, கொடு” “உனக்கென்ன உன் அலுவலகம் எல்லாம் கொடுக்கும்”  “டாலரில் நீசம்பாதிக்கிறாய்”  “சிறு வயதில் பெரும் பணம்.  அதனால் நீங்களெல்லாம் பொறுப்பற்றவர்கள்”  “அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது. உன் வேலை காலி”  “பொட்டி தட்டும் வேலை”  இப்படி அவர் தம் பணி பற்றிஅறிந்தோ அறியாமலோ பல விதமான கூற்றுக்கள்.  பிம்பங்கள்.  கட்டமைப்புகள்.சமூக சேவை செய்யும் மென்போருளர்கள், உழைத்து ஒரு குடும்பத்தையே தூக்கி நிறுத்தும் இளைஞர்கள்,  அறுபது மணி நேரம் உழைத்து விட்டு கிடைக்கும் வாரக் கடைசியில் கிராமத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் மென்பொருளாளர்கள்,

மென்மேலும் உயர் கல்வி பயிலும் மென்பொருளாளர்கள்  யாருக்கும் கண்ணுக்குத் தெரிவதில்லை. கெட்டவர்கள் தான் தெரிகிறார்கள்.   படித்தவர்களும் இதுபோன்ற  காமாலைக் கண் கொண்டு பார்ப்பது சமூகத்தின் அவலம்.

மென்பொருளாளரில் துவங்கி இப்போது ஆசிரியர் வரை வந்து விட்டது.   அண்ணா பல்கலை அளவில் படித்தாலும்,  அவ்வுயர்வுக்கு  காரணமாய் எந்த ஆசிரியரும் நினைவு கூரப் படுவதில்லை. அரசுப் பள்ளியிலே நூறு சதவீதம் தேர்ச்சி காட்டும் ஆசிரியரைப் பற்றி யாரும் எழுதுவதில்லை.   குறைகள் தாம் எல்லார்  கண்ணுக்கும் தெரிகின்றன.

என் ஒரே வேண்டுகோள் .. பீர் பாட்டில் உடைத்தது தவறு தான்.   நெஞ்சில் அறம் கொண்ட நேர்மைத் திறம் கொண்ட வல்லவரே! அவ்விடத்தில்   அவனிடம் இதமாகச் சொன்னீரா?    சொன்னீர்கள் என்றால் எனது இக்கூற்றிற்கு மன்னிக்கவும். இல்லை என்றால் அவனைக் குறை சொல்ல உங்களது தகுதி பற்றி இரண்டு நிமிடம் யோசிக்கவும்.    பொதுப்படையாக வசை பாடாமல் தவறைத் தவறாக மட்டும் பார்க்கவும். பேசவும். எழுதவும்.

பிரம்மபுத்ரா

 

அன்புள்ள பிரம்மபுத்ரா

இந்தக் கடிதத்தையே நீங்கள் புனைபெயரில் எழுதியிருக்கிறீர்கள். பிறரது தைரியத்தைக் கேள்வி கேட்கிறீர்கள்.

பொதுவாக ஐடி துறை என்பது படித்த, முதல்தள  இளைஞர்களின் துறை என்ற மனப்பதிவு இருக்கிறது. அவர்கள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பானதே. அப்படி இருக்கிறார்களா, இல்லையென்றால் ஏன் என்பதெல்லாம்தான் கேள்வியே ஒழிய இந்த மாதிரி விவாதங்கள் அல்ல.

ஜெ

முராத்தியின் பீர்புட்டிகள்

பீர்புட்டியும் கம்ப்யூட்டரும்- கடிதம்

முந்தைய கட்டுரைஇலியட்டும் நாமும் 2
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் – சுனில் கிருஷ்ணன் -1