அமலை

அமலை, தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

சோழா சோழா பாட்டு கேட்டேன். இரண்டு சந்தேகங்கள். ஒன்று இந்த சீக்வன்ஸ் எங்கே படத்தில் வருகிறது? இரண்டு, என் அம்மா அப்பா இரண்டுபேருமே பாட்டு பீரியடுக்கு பொருத்தமாக இல்லை என்று சொன்னார்கள். எனக்கு பாட்டு பிடித்திருக்கிறது.

சந்தோஷ் கிருஷ்ணன்

பொன்னி நதி -ஒரு கானல்வரி

அன்புள்ள சந்தோஷ்,

உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா? உங்களுக்காகத்தான் போடப்பட்டிருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள இளைய தலைமுறையினருக்காக. அவர்களுக்கு பிடிக்கும். ஏற்கனவே எல்லா எதிர்வினைகளும் goosbumps என்றுதான் வருகின்றன. (கன்னட வரிகள் ஜெயந்த் காய்கினி எழுத்தில் மூலமளவுக்கே அற்புதமாக உள்ளன என்றார்கள்)

கர்ணன் படத்தின் ’இரவும் நிலவும்’ பாட்டு பற்றி உங்கள் அப்பா அம்மாவிடம் கேட்டுப்பாருங்கள். ’அந்த பீரியட் ஃபீல் வருது’ என்பார்கள். மகாபாரத காலகட்டத்தில் அந்த மெல்லிசை இருந்ததா? அல்லது, மகாபாரதத் தெருக்கூத்திலோ நாடகங்களிலோ அந்த வகை இசை இருந்ததா? அது வெளிவந்த காலகட்டத்தில் கர்ணனுக்கு டூயட் போட்டுவிட்டார்கள் என்று பலர் சொன்னார்கள்.

இருவகை ரசனைகள் உண்டு, தாங்கள் பழகியவற்றையே மீண்டும் சுவைப்பவர்கள், அதை மட்டுமே எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் முந்தைய தலைமுறை. ஓட்டலில் நுழைந்தாலே இட்லிக்குச் சொல்லிவிடுவார்கள். இது புதுச்சுவை தேடும், பர்கர் தலைமுறைக்கான பாடல். ஆகவேதான் இந்தியா முழுக்க இன்று சோழா சோழா என முழங்கிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் சோழர்கால இசை என்பது ஆலயங்களில் பாடப்படும் பண்ணிசையாகவே இருந்திருக்கும். அது இன்றைய இசை அல்ல.   நாம் இன்று, நம் இன்றைய கலையில், சோழர் காலத்தை புனைந்துகொள்கிறோம். வரலாறு என்பதே நேற்றைய காலகட்டத்தை இன்றைய அறிவைக்கொண்டு புனைந்துகொள்வதுதான். வரலாற்றுக் கதை என்பது இன்றைய கலைகளைக் கொண்டு வரலாற்றை புனைந்துகொள்வது.

அப்பாடல் போருக்குப் பிந்தைய அமலையாடல். அது பொன்னியின் செல்வன் நாவலில் நேரடியாக இல்லை. பேச்சாக, நினைவுகூர்தலாகச் சொல்லப்படுகிறது. ராஷ்ட்ரகூடர்களை வென்றபின் ஆதித்த கரிகாலன் ஓய்வெடுத்தபடி பொன்மாளிகை கட்டுவதாக நாவல் சொல்கிறது. ஆனால் சினிமாவில் எந்தக் கதாபாத்திரமும் அக்கதாபாத்திரத்தின் உச்சநிலையில்தான் முதலில் தோன்றமுடியும். அந்த முதல்காட்சியே உள்ளத்தில் பதியும். அது சினிமாவின் இலக்கணம்.

ஆதித்தகரிகாலன் எதையோ மறக்கும்பொருட்டு போர்களில் வெறிகொண்டு ஈடுபடுபவனாகவே பொன்னியின்செல்வன் சித்தரிக்கிறது. அதன் காட்சிக்குரிய இசைவடிவம் அப்பாடல். அமலையாடுதலுக்குரிய வேகமான துள்ளலான இசை கொண்டது.

அது ஒன்றும் ‘அன்னிய இசை’ அல்ல. அமலையாடுதல் என்பது வேகமான தாளம் கொண்ட துடி என்னும் வாத்தியத்துடன் இணையும் வஞ்சிப்பா என்னும் வடிவில் அமைவது. அப்பாடலின் வடிவம் வஞ்சிப்பாவை சொற்துண்டுகளாக ஆக்கியதுபோல் உள்ளது. தமிழ்ச்செவ்வியல் மரபை மிக நன்றாக அறிந்த, அறிஞர் என்றே சொல்லத்தக்க, கவிஞரால் எழுதப்பட்டது. இருபதாண்டுகளுக்கும் மேலாக செவ்விலக்கியம், தமிழ்மரபு என எழுதி பேசிவரும் இளங்கோ கிருஷ்ணனுக்கு நம்மைவிட கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்திருக்கும் என தயவுசெய்து நம்புங்கள்.

 

ஜெ

பர்ட்டன் ஸ்டெயின்
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
குடவாயில் பாலசுப்ரமணியம் 
பொன்னியின் செல்வன் நாவல் 
யவனராணி- சாண்டில்யன்
உடையார் -பாலகுமாரன்
கல்கி எழுத்தாளர்
முந்தைய கட்டுரைதமிழ் விக்கி, தூரன் விருது விழா – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலரிலிருந்து மணத்துக்கு…