உடன்தங்கல், கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு

உடன் தங்கலில் தங்களுடன் இருந்த ஆறு நாட்களும் மகத்தானவை. காதலில் எல்லாம் பேசி முடிந்துவிட்ட பின்பும் ஒருவருக்கு ஒருவர் தங்கள் இருப்பை உணர்த்த அர்த்தமே இல்லாமல் பேசிக்கொண்டும், தொட்டுக்கொண்டும் இருப்போம். அந்த ஆறு நாட்களும் நான் செய்துக் கொண்டிருந்தது அது போல ஒன்றுதான். அபத்தமான கேள்விகள், வேளைக்கு ஆகாத humour மூலம் என்னை உங்கள் முன் நிறுத்த முயன்று கொண்டிருந்தேன். அதன் வழியே உங்களோடு பேசுவதற்கு இருந்த தயக்கம் சற்றே குறைந்துள்ளது.

மேகநதிக்கு மேல் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வான்வெளியின் கீழ் முழு நிலவுக்காக காத்திருந்து, வேதத்தையும் பைபிளில் சாலமோன் மன்னன் கவிதைகளையும் படித்த அந்த இரண்டு நாட்களும் மனதில் சித்திரம் போல் பதிந்து விட்டன.

இலக்கியம், வரலாறு, வேதம், பைபிளில், சினிமா, காவல் மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகள், காட்டை பற்றி அறிதல் என ஒவ்வொன்றுக்கும் எத்தனை எத்தனை கதைகள், நகைச்சுவை துணுக்குகள் உங்களிடமிருந்து எழுந்த வண்ணமே உள்ளன… என் வாழ்விலே கற்றலும் மகிழ்தலும் ஒரு சேர நிகழ்ந்தது என்றால் அது இந்த ஆறு நாட்கள்தான்.

மலை உச்சியில் ரம்யமான சூழலில் இருந்துவிட்டு, வீட்டில் நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க பிடிக்கவில்லை ஜெ.

கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள ஜெ,

நலம்தானே? உங்களுடன் உடன்தங்கலுக்கு வந்த இளைஞர்களை எண்ணி பொறாமைப்படுகிறேன். அந்த வாய்ப்பு இங்கே தொலைவிலிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு அதன் அருமையும் தெரியவில்லை. என் நண்பன் ஒருவனுக்கு போன் செய்து பதிவு செய்யச் சொன்னேன். சினிமாவுக்கு நண்பர்களுடன் முன்பதிவு செய்துவிட்டேன் என்கிறான். இத்தனைக்கும் நிறைய வாசிக்கக்கூடியவன். நம்முடைய இந்த சிதறலையும் தயக்கத்தையும் ஜெயிக்காமல் எங்கும் எதையும் அடையமுடியாது என்ற எண்ணம் வந்தது.

கொண்டாட்டம் கேளிக்கை எல்லாமே நினைவில் நிற்பவைதான். வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் அவைதான் வாழ்ந்த கணங்கள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையான கல்வியும் உண்மையான உரையாடலும் நடந்த நாட்கள்தான் மாபெரும் கொண்டாட்டங்கள். எனக்கு இந்தியாவிலிருந்த நாட்கள் அப்படிப்பட்டவை.

அனந்தராம்

முந்தைய கட்டுரைமோகினியின் ஆசி – விஜயபாரதி
அடுத்த கட்டுரைவியட்நாம் துரைசாமி – நோயல் நடேசன்