“புத்தகம் நம்மைத் தேடி வருமா? அதைத் தேடுவதே பெரிய சுவாரஸ்யமான விஷயம்’ என்பார் க. நா. சு. அவர் சொல்வதைப் பார்த்தால் எந்தப் புத்தகமும் சீக்கிரமாகக் கிடைத்துவிடக்கூடாது; தேடித் தேடி அலைந்து திரிந்த பிறகுதான் கிடைக்கவேண்டும் என்று ஒரு விதி இருப்பதுபோல் தோன்றும். – சுந்தர ராமசாமி (க. நா. சு பற்றி எழுதிய அஞ்சலி குறிப்பில்.)
இந்த நவீன அமேசான், பிளிப்கார்ட் காலத்தில் அச்சில் இருக்கும் ஒரு புத்தகத்தை வாங்குவது மிகவும் எளிது! இதுவே 5 வருடம் முன்பு வரைக்கும் நிலமை வேறு!
நிறைய தீவிர வாசகர்கள் புத்தகங்களை தேடி அலைந்த கதையை பகிர்ந்து இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் ஒரு புத்தகம் வாங்குவதற்காக சென்னையில் இருந்து ஹைதெராபாத் வரைக்கும் சென்றதாக சொன்னார் . ஆச்சர்யமாக இருந்தது ! நீங்கள்இதைபோல் எதும் ஒரு புத்தகத்தை தேடி அலைந்து இருக்கிறீர்களா?
அன்புடன்,
பா.தினேஷ்
அன்புள்ள தினேஷ்,
அது ஒரு சுவாரசியமான கற்பனை, அவ்வளவுதான். சென்ற ஐம்பதாண்டுகளின் அறிவுலகச் செயல்பாட்டுடன் தொடர்பானது. அன்று நூல்கள் கிடைப்பது அரிது. ஒரு நூலை பெறுவதற்காக நான் காசர்கோட்டில் இருந்து நாகர்கோயில் வந்து, சுந்தர ராமசாமியிடம் கேட்டு, கிடைக்காமல் அங்கிருந்து மதுரை சென்றதெல்லாம் நினைவுள்ளது. அப்போது சொல்லப்பட்டது அந்த வரி. (நான் தேடிய நூல் Erich Fromm எழுதிய The Art of Loving)
அப்போது சுந்தர ராமசாமி சொல்லும் ஆப்தவாக்கியம் அது. கவனியுங்கள், புத்தகங்கள் எப்படியானாலும் உங்களை தேடி வரும் என அவர் சொல்லவில்லை. புத்தகங்களை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால் அவையும் உங்களை தேடிவந்துவிடும் என்றுதான் சொன்னார். இது ஒரு பழைய சொற்றொடரின் புதுவடிவம். குருவை நீங்கள் தேடினால் குரு உங்களைத் தேடிவருவார் என்னும் வரியை ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொல்லியிருக்கிறார். ஆனால் தேடவேண்டும். தேடலின் தீவிரம் விளைவை உருவாக்கும் என்னும் உட்குறிப்பு இந்த சொற்றொடரில் உள்ளது.
சென்றகாலத்தில் குரு, புத்தகம் இரண்டுமே தேடித்தேடி அடையவேண்டியவை. பொதுவாகக் கிடைப்பவை எல்லாமே பொதுச்சராசரிக்கு உரியவையாக இருந்தன. நமக்கானது நம்மால் தேடப்படவேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. முதலில் நமக்கானது என்ன என நாம் கண்டடையவேண்டும். அதற்கு நமக்கு அளிக்கப்படுவன அனைத்தையும் பரிசீலிக்கவேண்டும். இது அல்ல, இது அல்ல என்று சென்று நாம் நம்முடைய தேவையை உணர்கிறோம். அதன்பின் தேடல். அத்தேடல் வழியாகவே நாம் நம் தேவையை கூர்மைப்படுத்திக் கொள்கிறோம்.
நான் அன்று பொதுவாக வாசிக்கப்பட்ட ஆன்மிகநூல்களான Zen and the Art of Motorcycle Maintenance போன்றவற்றில் இருந்து தொடங்கினேன். Jonathan Livingston Seagull வழியாகச் சென்றேன். The Dancing Wu Li Masters ஆறுதல் அளித்தது. மாறாக The Divided Self நிலைகுலையச் செய்து என்னையும் மங்களூரில் சிகிழ்ச்சைக்கு செல்லத்தூண்டியது. ஆனால் என் தேடல் கூர்கொண்டபடியே இருந்தது. 1993ல் நடராஜ குருவின் An Integrated Science of The Absolute என்னும் நூலில் வந்து நின்றது. அதை நான் இன்னும் கடந்து செல்லவில்லை.
நடராஜ குருவின் நூல் என்னைத் தேடி வந்தது, ஏனென்றால் நான் அதைத் தேடிச்சென்றுகொண்டிருந்தேன். என்னை தகுதிப்படுத்திக் கொண்டே இருந்தேன். இன்று ஒருவர் இக்கட்டுரையை வாசித்துவிட்டு மற்ற நூல்கள் தேவையில்லை, நடராஜ குருவே போதும் என முடிவெடுக்க முடியுமா? அது பிழை. ஏனென்றால் மற்றநூல்கள் எனக்குப் பாதை ஆயின. என்னை முன்கொண்டுசென்று நடராஜ குருவிடம் சேர்த்தன. நூல்கள் தேடிவரும் என்பது இந்தப் பொருளிலேயே.
இன்று யோசித்துப் பார்த்தால் அன்று நூல்களை தேடிக்கொண்டிருந்தது ஒரு நல்ல அறிவுப்பயிற்சி என்று தோன்றுகிறது. அதில் புறவயமாகப்பார்த்தால் ஒரு வீணடிப்பு உள்ளது. தேவையற்ற பலநூல்களை வாசித்தோம். ஆனால் உள்ளம் அத்தேடலால் கூர்கொண்டபடியே இருந்தது. மேலும் மேலும் தகுதிப்படுத்திக் கொண்டோம். ஒரு நூலை தவிர்ப்பதற்கே அதைப்பற்றி யோசிக்கவேண்டியிருந்தது.
ஆனால் இன்றையசூழல் வேறு. இன்று நூல்கள் உங்கள் மேல் கடல் அலை கரைப்பாறையை அணைவதுபோல வந்து அறைகின்றன. நூல்கள் பற்றிய செய்திகளுடன் காணொலிகளும் வாட்ஸப் செய்திகளும் இணைய அரட்டைகளும் வந்து மோதுகின்றன. அனைத்தையும் கவனிக்க முடியாது. விளைவாக நீங்கள் கவனமற்றவர் ஆகிவிடுகிறீர்கள். எதுவும் நிலையாக உள்ளே ஓடுவதில்லை. பல மாதக்காலம் நீண்டு நிற்கும் தேடலும் அதன் விளைவான கல்வியும் இல்லை. ஏராளமான செய்திகள், ஆனால் அவை தொகுக்கப்படாமல் உதிரித்தகவல்களாக அகத்தே எஞ்சுகின்றன.
இன்று நூல்கள் தேடிவரும் என்னும் அந்தப் பழைய பேச்சுக்கு இடமில்லை. தேடிவருவனவற்றில் எது உங்கள் நூல் என கண்டடைவதே இன்றைய சவால். எவற்றை தவிர்ப்பது என முடிவுசெய்வதற்கே அறிவு கூர்ந்திருக்கவேண்டும். உங்கள் நூலை முழுமையாக, சிதறலின்றி ஆழ்ந்து பயிலவே பயிற்சி எடுக்கவேண்டும்
ஜெ