மொழிவழி அறிதலும் மொழியை அறிதலும்

Ludwig_Klages

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். மதுரையில் நடைபெற்ற அபி 80 நிகழ்வில் தங்களை சந்தித்து உரையாடியதில் பெரும் மகிழ்ச்சி. உண்மையில் ஒரு வாசகனுக்கு இது மாதிரியான தருணங்கள் மீண்டும் மனவெழுச்சியுடன் செயல்புரிய ஆற்றலளிப்பவை. கவிஞரின் கவிதை வாசிப்பனுபவம் பற்றிக் கூறுகையில் அபியின் கவிதைகள் படிமங்களாக விரியும் வெளி. படிமங்களாலான உலகில் அவற்றிற்கிடையே ஒளியாகப் பயணித்து தொட்டு உரையாடும் அனுபவம். ஒரு வாசகனாக அவருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அன்றைக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி தங்களிடம் பேசுகையில் கவனிக்கும் திறன்,  நுண்ணறிவு, கற்பனைத் திறன் பற்றி கேள்விகள் மனதில் எழுந்தன.  மொழி வழியான சிந்தனையே சரியாக கல்வியினைக் கற்க உதவும் எனக் கூறினீர்கள்.என்னைப் போன்ற ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு தங்களை சந்திக்கும் போது பரவசத்துடன் அசட்டுத்தனமும் சேர்ந்துகொள்கிறது. இன்று காலை நீங்கள் கூறியதைப் பற்றி யோசிக்கையில் சில ஐயங்கள் எழுந்தன. முதலாவதாக மொழியினைப் பற்றிய புரிதல் உண்மையில் ஆசிரியர்களுக்கு உண்டா? மொழியின் கட்டமைப்பு, அதன் தன்மைகள், சமூக அறிவியல் ஆய்வுகளில் அதன் பயன்பாடு என்ன? அடிப்படையில் மொழி எவ்வளவு சிக்கலான ஒன்று, மொழி குறித்த தனிமனிதரின் உளவியல், நவீன அறிவியலின் மொழி என மனதில் பல கேள்விகள் எழுந்தன.

மொழியைக் குறித்தான அடிப்படை புரிதல்கள் உண்மையில் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வேண்டும். ஆனால் அதை நோக்கி எப்படி பயணிப்பது. ஒரு பள்ளிக்கு உளவியல் நிபுணரின் பங்களிப்பைப் போலவே மொழியியல் அறிஞரின் பங்களிப்பும் இன்றியமையாதது என நினைக்கிறேன்.

அ.பிரசாத்

***

அன்புள்ள நண்பருக்கு,

மொழிவழி அறிதல் என்பதை நான் மொழியை அறிதல் அதன் கட்டமைப்பையும் இலக்கணத்தையும் கற்றுக்கொள்ளுதல் என்ற பொருளில் பயன்படுத்தவில்லை. அதாவது மொழியை அறிதலைப் பற்றி அல்ல, மொழி வழியாக அறிதலைப் பற்றித்தான் பேசினேன்

உலகப் பண்பாடுகளை ஆய்வு செய்பவர்கள் அப்பண்பாடுகளை உலகை அறியவும் அறிந்தவற்றை தொகுத்துக்கொள்ளவும் தொகுத்தவற்றை பரிமாறிக்கொள்ளவும் கடைப்பிடிக்கும் இரண்டு வழிமுறைகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று மொழி, இன்னொன்று அடையாளங்கள்.

அடையாளங்களை குறிப்பான்கள் (Signs) குறியீடுகள் (Symbols) படிமங்கள் (Images) என பலவகையாகப் பிரிக்கலாம். மானுடப் பண்பாடு முழுக்கவே முடிவில்லாத அடையாளங்களால் ஆனது. நமது ஆசாரங்கள், வாழ்க்கைமுறைகள், தெய்வங்கள் எல்லாமே அடையாளங்கள் தான். நாம் அணியும் ஆடைகள், நாம் பயன்படுத்தும் கருவிகள் எல்லாமே அடையாளங்களும்தான். ஒவ்வொரு நாளும் நாம் பேசும் மொழியிலிருக்கும் குறியீடுகள்தான் நம் அகத்தையும் உருவாக்கியிருக்கின்றன

ஒவ்வொரு கணமும் நம்மைச் சூழ்ந்துள்ள எல்லாப் பொருட்களையுமே நாம் வெவ்வேறு அடையாளங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். அடையாளங்களாக மாற்றப்படாத ஒரு பொருளை மனிதனால் அறியவே முடியாது. பயன்சார்ந்து, குறியீடு சார்ந்து எல்லாப்பொருளும் ஏதேனும் அடையாளத்தை தன்மேல் ஏற்றிக்கொண்டிருக்கிறது. ஆகவே அடையாளங்களின்வெளி என்பது ஒரு பண்பாட்டின் பொருள் வடிவம் தான்.

இன்னொன்று மொழி. மொழி என்பது அவ்வடையாளங்களை தொகுத்துக்கொள்ளும் பொருட்டு, கையாளும் பொருட்டு நாம் உருவாக்கிக்கொண்ட ஒன்று. அதை இரண்டாகப் பிரிக்கிறார்கள். அடையாளங்களுக்கு நாம் அளிக்கும் ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் வைகரி என்றும் ஆங்கிலத்தில் Parole என்றும் குறிப்பிடப்படுகின்றன. அவ்வடையாளங்களுக்கு நாம் நமக்குள் அளித்துக்கொள்ளும் அர்த்தப்பெருக்கு என்பது Langue  என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. அது நம்முள் உள்ள மொழி. இந்திய மொழியியலும் யோகவியலும் அந்த அகமொழியை மத்யமா, பரா, பஸ்யந்தி என்னும் மேலும் மூன்று அடுக்குகளாக உருவகிக்கின்றன. அடையாளங்களும் அவற்றை ஒருங்கு சேர்க்கும் அடித்தளமாக அமையும் மொழியும் இணைந்ததே நமது சிந்தனை.

அண்மையில் காட்சி ஊடகத்தின் மிகைப்பெருக்கம் காரணமாக ஒலி, மொழி வடிவம் தளர்வுறுகிறது. வெறும் காட்சிகள் மட்டுமே நம்மால் அடையப்படும்போது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற அடையாளங்களால் ஆனதாக நம் மனம் மாறிவிடுகிறது. அடையாளங்களைத் தொகுக்கவும் கையாளவும்கூடிய நமது திறன் அழிகிறது. ஆகவே தான் மொழியை நான் அறிதலின் அடிப்படையாக முதன்மைப்படுத்துகிறேன்.

மானுடவியலாளர்கள் சமூகங்களைப்பிரிக்கையில் இந்த பிரிவினைக்கோட்டை வெவ்வேறு வகையில் போடுவதைப் பார்க்கலாம். பழங்குடிச் சமூகங்கள் மற்றும் தேங்கிப்போன சமூகங்கள் அடையாளங்களை முதன்மைப்படுத்துவனவாகவும் மொழித்திறன் குறைவானவையாகவும் இருக்கின்றன. வளர்ந்த சமுதாயங்கள், செயலாற்றலும் அதற்கேற்ற அறிவுத்திறம்னும் மிகுந்த சமூகங்கள் மொழித்திறன் கூடியவையாக உள்ளன.

வரலாற்றைப்பார்க்கையில் மொழியை எழுத்துவடிவாக்கி, நூல்வடிவமாக்கி நிலைப்படுத்திக்கொள்ளும் சமூகங்களே உயர்நாகரீகம் கொண்டவை. மொழிமையத்தன்மை (Logocentrism) என்று பண்பாட்டாய்வாளர் லுட்விக் க்ளேஜ் குறிப்பிடும் கருத்து இன்று மிகப்பரவலாக பயன்படுத்தபடுகிறது.

ஏனெனில் அடையாளங்களின் வெளியாகப் பரந்திருக்கும் பிரபஞ்சத்தை ஒரு மனிதன் தனக்குள் தொகுத்துக்கொள்வது மொழி வழியாகத்தான். ஒரு பொருளுக்கு மனிதன் அளிக்கும் அனைத்து அர்த்தங்களும் சொல் எனும் அடையாளம் வழியாகத்தான்  மனிதனுக்குள் நிலைகொள்கின்றன. நீங்கள் பார்த்த ஒன்றை, அறிந்த ஒன்றை மொழியாக ஆக்கத்தெரியவில்லை என்றால் உங்களுக்குள் அது எவ்வகையிலும் தொகுக்கப்படவில்லை என்றுதான் பொருள். அது எந்த வகையிலும் உங்களுக்குப் பயனற்றது என்பதே உண்மை

மணிக்கணக்காக திரைப்படங்களை இன்று பார்க்கிறார்கள். பல்வேறு காட்சி ஊடகங்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள். ஆனால் ஓர் எளிய சிந்தனையைக்கூட உருவாக்க முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அதே அளவு பொழுதை அவர்கள் புத்தகங்களுக்கு செலவழித்திருந்தார்கள் என்றால் அவர்களுடைய சிந்தனைத்திறன், வெளிப்பாட்டுத்திறன் இரண்டும் மிக வலுவடைந்திருப்பதை பார்க்கலாம்.

ஏனெனில் வெறும் காட்சிப்படிமங்கள் எவ்வகையிலும் அறிவாக ஆவதில்லை. இன்று தாங்கள் காட்சி ஊடகங்கள் வழியாகத் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டிருக்கிறோம் என்னும் மாயை இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளில் மிக வலுவாக உள்ளது. மேலைநாட்டுக் கல்விமுறை அந்த குறைபாடைக் கண்டடைந்து விலக்கி மீண்டும் மொழிவழி அறிதலுக்காக சென்று கொண்டிருக்கிறது.

அதாவது, பழங்காலத்திலிருந்த பிரிவினை மறுபடியும் வருகிறது. வெறும் அடையாளங்களாலான அறிதல்கொண்டவையாக, மொழித்திறன் குறைவானவையாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் மாறிக்கொண்டிருக்கையில் மொழித்திறன் கொண்டவையாகவும் வளர்ந்த அறிவுத்திறன் கொண்டவையாகவும் மேலைநாடுகள் ஆகிக்கொண்டிருக்கின்றன. நாம் நவீனப்பழங்குடிகள். இந்த வேறுபாட்டையே நான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.

பின்நவீனத்துவகாலகட்டத்தில் மொழியியலாளர் சசூர் போன்றவர்கள் எழுத்துமையவாதத்தை கடந்து வாய்மொழி மரபுகளை நோக்கிச் செல்வதை முன்வைத்தனர். எழுத்துமொழி அதிகாரம் சார்ந்தது என்றும் வாய்மொழி அதற்கு எதிரானது என்றும் கூறினர். ஆனால் அந்தக் கொள்கை நடைமுறையில் வாய்மொழி மரபுகளை எழுத்துமொழிக்குள் கொண்டுவருவதாகவே முடிந்தது. இன்று உருவாகியிருப்பது முற்றிலும் வேறொரு சூழல். இன்றும் எழுத்தே அதிகாரம். வாய்மொழி மரபை செவிவழி அறிதல் என்றால் இன்றிருப்பது கண்வழி அறிதல். கண்வழி அறிதலை பரப்பி நிலைநிறுத்துவதன் வழியாக இன்று பெருவாரியான மக்களை அறிவதிகாரத்தில் இருந்து வெளியே தள்ளுகிறார்கள். அவர்களை நவீனப்பழங்குடிகளாக ஆக்கி அவர்கள்மேல் ஆட்சி செய்கிறார்கள்.

மொழி வழிக்கல்வியை நோக்கி நாம் மீண்டும் வலுவாகத் திரும்பியே ஆகவேண்டும். இலக்கியம் அதில் மிக முக்கியமான பங்களிப்பாற்றுகிறது. மொழிவழி அறிதல் ஒருவனின் அறிவை அவன் உள்ளமாக, சிந்தனையாக, அகப்பேச்சாக, வெளிப்பாடாக மாற்றிச் சேர்க்கிறது. அவனிலிருந்து அது திறன்மிக்க வெளிப்பாடாகவும் வெளிவருகிறது. அதற்கான பயிற்சியை அவனுக்கு அளிக்காதவரை அவனுக்கு அளிக்கப்படும் எதுவுமே அவனுள் தங்குவதில்லை.

புத்தக வாசிப்பு என்பதை திரும்ப திரும்ப நான் முதன்மைப்படுத்துவது இதற்காகத்தான். புத்தகங்கள் வாசிக்காத, காட்சியூடகம் வழியாகவே அறிவை அடைந்த ஓர் அறிஞனை நான் இதுவரை அறிந்ததில்லை, கேள்விப்பட்டதுமில்லை. அது இயல்வதுமல்ல. நான் சுட்டிக்காட்ட விரும்புவது அதைத்தான்.

அந்த மொழியை பிழையின்றி பயன்படுத்துவது, தேவைக்கேற்ப உருமாற்றி கையாள்வது ஆகிய இரண்டிற்குமான பயிற்சியே மொழிப்பயிற்சி. மொழி வழி அறிதலின் இரண்டாம் படிநிலையே மொழிப் பயிற்சி. அதாவது மொழிவழி அறிதலுக்கான ஒரு தகுதிப்பயிற்சி அது. ஒருவன் மொழி வழியாக அறிதலை நிகழ்த்தாமல் வெறுமே மொழியை மட்டும் அறிந்துகொண்டிருந்தால் வரட்டு இலக்கணவாதியாகிவிடுவான். இலக்கணத்தைப் பயில்வது  என்பது ஒருவருக்குள் இருக்கும் மொழித்திறனை செம்மைப்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியே ஒழிய, அது எந்த வகையிலும் அறிவுப்பயிற்சி அல்ல.

இலக்கணம் மட்டுமே தெரிந்த ஒருவர் பலசமயம் வெறுமே மொழியில் நின்றுவிடவும் கூடும். மொழியை வெறும் ஒழுங்கு முறையாக மட்டுமே உணர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருக்கவும் கூடும். இலக்கணவாதிகள் பெரும்பாலும் அறிவுத்தேக்கம் அடைந்தவர்கள் என்பதைக்காணலாம். மொழிவழி அறிதல் என்று நான் சொல்லும்போது நூல்களைக் கற்றல், கற்றவற்றை மொழியில் வெளிப்படுத்துதல் ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசேலை சகதேவ முதலியார்
அடுத்த கட்டுரைவெண்முரசு பேட்டிகள், ஒரு மலையாளநூல்