அஞ்சலி, பிரேமானந்த குமார்

பத்மநாபபுரத்தில் இருக்கையில் என்னுடைய நல்ல நண்பராக இருந்த பிரேமானந்த குமார் இன்று மறைந்தார். அவருக்கு நாற்பத்தொன்று வயது. திருமணம் செய்து கொள்ளவில்லை. பல்வேறு சிறு உடல்நலச் சிக்கல்கள் இருந்தன. குடிப்பழக்கம் கடைசிக் காலத்தில் வருத்தியது.

பிரேமானந்த குமார் காலச்சுவடில் சில மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். நவீன தமிழ்ச் சிறுகதைகளின் மலையாள மொழியாக்கத் தொகுப்பு ஒன்றை பிரசுரித்திருக்கிறார். மலையாளத்தில் முக்கியமான பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

பத்மநாபபுரத்தில் இருக்கையில் அனேகமாக தினமும் சந்திப்போம். இருட்டும்வரை பேசிக்கொள்வோம். நான் பத்மநாபபுரம் விட்டு வந்து அவர் திருவனந்தபுரம் சென்ற பின் பார்ப்பது அரிதாகியது. அவரது இரு வரிகள் நினைவிற்கு வருகின்றனஅபாரமான உரையாடல்காரர். வேடிக்கையும், நையாண்டியும் மலையாள மொழிக்கு இயல்பாகப் பொருந்தக் கூடியவை. வெற்றிலை போட்ட வாயைச் சற்றே கோணியபடி அவர் பேசினால் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்.

ஒருமுறை பத்மநாபபுரம் பழைய அரண்மனைக்குள் அந்தியில் சென்றோம். பிரேமானந்த குமார் வேகமாக வெளியே செல்ல விரும்பினார். ‘என்ன பேய் பயமா?’ என்றேன். ‘உண்மையிலேயே பேய் பயம்தான்’ என்றார். நான் சிரித்துக் கொண்டு ‘என்ன ஒரு எழுத்தாளன் இப்படிப் பேயை பயப்படலாமா?’ என்றேன். ‘நவீனத்துவ எழுத்தாளனுக்குத்தான் தர்க்கம் அதிகம். சுந்தர ராமசாமியைக் கண்டால் பேய் ஓடிப் போகும். நான் பின் நவீனத்துவ யுக எழுத்தாளன். எனக்குப் பேய் பயப்படாது’ என்றார்

வெளியேவந்ததும் ‘என்ன பயம் என்றால் ஏதாவது சேர இளவரசி பிக்காஸோவின் கியூபிச பாணியில் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வது?’ என்றார். நான் சிரித்து விட்டேன்.

இன்னொரு முறை இ.எம்.எஸ்ஸைப் பற்றி பேசும் போது சொன்னார். ‘ஓடுகிற நாயை மடையன் எறிவான், படாது. புத்திசாலி ஒருமுழம் தள்ளி எறிவான் படும். அதிபுத்திசாலி இரண்டு முழம் தள்ளி எறிவான், அதுவும் படாது. இ.எம்.எஸ் அதி புத்திசாலி’

அவரிடம் எப்போதுமே ஒரு சோர்வும், நிராகரிப்பும் உண்டு. ஆழமான ஒரு விரக்தியை நோக்கி அது அவரைக் கொண்டு சென்றது. அதற்குப் புறக் காரணங்கள் என ஏதுமில்லை. எல்லாமே நன்றாகத்தான் இருந்தன. திருவனந்தபுரத்தில் கேரள அரசூழியராக இருந்தார். உண்மையான காரணம் அவரது மார்க்ஸிய ஈடுபாடும் அந்தக் கொள்கைமேல் அவருக்கு மெல்ல, மெல்ல வந்த அவநம்பிக்கையும்தான். மார்க்ஸிய நிலைப்பாடுதான் எடுப்பார், மார்க்ஸிஸ்டுகளை வசை பாடுவார்.

கடைசியில் ஒன்றும் எழுதவில்லை, வாசிப்பதும் இல்லை. ஒருமுறை சொன்னார் ‘எனக்கு மிகப் பெரிய தத்துவப் பிரச்சினை இருக்கிறது. அதை ஒரே வார்த்தையில் சொல்லலாம், சலிப்பு’ அந்த சலிப்பு அவரைக் கொன்றது. தத்துவம் மனிதனைக் கொல்வதை  இப்படி, அவ்வப்போது பார்க்க முடிகிறது.

முந்தைய கட்டுரைஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது?
அடுத்த கட்டுரைபத்மநாபனின் நிதியும் பொற்காலமும்