இருளும் அழுக்கும் இலக்கியமும்

கே.ராமானுஜம் தமிழ் விக்கி

அன்புள்ள ஆசிரியருக்கு,

கே. ராமானுஜம் பற்றிய நாவல் எழுதுவதை யோசித்துக் கொண்டிருக்கும் போது பல கேள்விகள் தோன்றின. மற்ற கேள்விகளுக்கு எல்லாம் கிட்டத்தட்ட விடை கிடைத்துவிட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலை நாம் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வியும் இருந்தது. பல கதைகள் மீள மீள பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. ஒரு வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் அணுகிப்பார்க்கும் வெவ்வேறு புனைவுகள் எழுதப்படுவது இயல்பு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விடை கிடைக்காமல் அலைகழிக்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. அதை உங்களிடம் கேட்டு தெளிவுபடுத்தவே இக்கடிதம்.

கே.ராமானுஜம் பற்றிய தமிழ்விக்கி பதிவை எழுதும் போது அவர் 33 வயதில் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரத்தை பதிவு செய்தேன். அக்குறிப்பை எழுதியவுடன் 33 வயது ஆக நமக்கு இன்னும் ஓரிரு வருடங்கள் இருக்கிறது என்ற எண்ணம் மின்னி மறைந்தது. ஒரு கணத்தில் என்னை அக்குறிப்புடன் இணைத்துப் பார்த்தேன். நான் தற்கொலை எண்ணமோ கழிவிரக்கங்களோ கொண்டவனல்ல. நான் உங்கள் வாசகன். அறம், தன்மீட்சி போன்ற நூல்களை வாசித்த எவரும் தன்னளவில் சிறிதளவாவது இலட்சியவாதத்தை கை கொள்ளாமல் இருக்க முடியாது. என் வாழ்க்கையை அதன் போக்கில் கொண்டாட்டங்களாக நிறைத்து வாழ்வதே என் இயல்பு.

ஆனால் தற்கொலை எண்ணத்தை நோக்கி மிக எளிதாக செல்லும் அளவிற்கு உணர்ச்சிகரமான நண்பர் ஒருவர் கே. ராமானுஜத்தின் பதிவை வாசித்து விட்டு எனக்கு 31 வயது ஆகிறது. 33 வயது ஆக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அதற்குள் செய்ய வேண்டியதை செய்து முடித்துவிட்டு போய்சேரவேண்டியது தான் என்று சொல்லி சிரித்த போது தான் அதிர்ச்சியாக இருந்தது. அவர் நகைச்சுவையை அதனுடன் இணைத்து சொன்னாலும் அவருடைய பிரச்சினைகள் பதட்டங்கள் எல்லாம் எனக்கு தெரியும். அவர் சொல்வது போல் நடந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றியது.

சேத்

ஒரு இலட்சிய படைப்பு வாசகனை ஏதோ ஒரு விதத்தில் தன்னை மேம்படுத்த வாய்ப்பளிக்கும் என்றாலும் ஒரு படைப்பு எழுதுவதற்கு முன்பு அது கடைசியில் எப்படி உருமாறி வரும் என்று நம்மால் சொல்ல முடியாது. அப்படைப்பை வாசிக்கும் வாசகனின் எதிர்மறை எண்ணங்களை பரிசீலிக்க வைப்பதாகவும் படைப்பு அமையலாம். அப்படி பரிசீலித்தாலும் ஒரு வேளை அவனை எதிர்மறை எண்ணங்களால் அடித்துக் கொண்டு செல்பவனாகவும் மாற்றலாம். அறம் போன்ற ஒரு படைப்பு வாசக சமூகத்தில் ஏற்படுத்திய நல்லதிர்வு ஒரு எழுத்தாளனாக உங்களுக்கு எப்போதும் பெருமை அளிக்கக் கூடியதாகவே இருக்கும். யானை டாக்டர் போன்ற கதையை வாசித்தவன் பிற உயிர்களுக்காக சிறிது கண்ணீர் சிந்துவான். வணங்கான் கதை படித்தவன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தூண்டுதலை பெறுவான். நீங்கள் எழுத வந்ததற்கான நிகர்பயனை இதுபோன்ற சில படைப்புகளே கொடுத்து விடுகிறது.

மாறாக ஒரு நாவல் எழுதப்பட்டு அது வாசித்த வாசகர்களை எதிர்மறை எண்ணங்களில் மூழ்கடித்தால் சிலரை தற்கொலை நோக்கி தூண்டினால் அந்நாவலின் நிகர்பயன் என்னவாக இருக்கும் என்பதே என் கேள்வி. அந்நாவல் அதை வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக பிறர் வாழாத வாழ்க்கை அனுபவத்தை அளிக்கலாம். ஆனால் அதை வாசித்து விட்டு சில வாசகர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தெரியவந்தால் அதன்மூலம் நாவல் எழுதியவனை குற்ற உணர்ச்சி செய்ய வைக்கும் என்றால் அந்நாவலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையும் ஏன் எழுதப்பட வேண்டும் என்று கேள்வியாக எஞ்சி நிற்கிறது.

எழுத வருபவர்களில் சிலருக்கும் இது போன்ற கேள்வி வரும் வாய்ப்பிருப்பதால் நேரடி சந்திப்பில் கேட்பது வரை தள்ளிப்போடாமல் உங்கள் வழிகாட்டுதல்களுக்காக எழுதி அனுப்புகிறேன்.

அன்புடன்,
ஜெயராம்

அன்புள்ள ஜெயராம்,

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலில் ஒரு வரி. ‘திருப்பி போட்டுக்கொண்ட சட்டை போல’. சட்டைப்பை உள்ளே இருக்கும். உங்கள் கேள்விக்கான பதிலாகவும் அதையே சொல்ல விரும்புகிறேன். ஒரு படைப்பிலிருக்கும் எதிர்மறைத்தன்மை என்பது திருப்பிப்போட்டுக்கொண்ட சட்டை. நம்பிக்கை உள்ளே இருக்கும்.

ஒரு படைப்பு மெய்யாகவே எதிர்மறைத்தன்மையை, அவநம்பிக்கையை செயலின்மையை, முன்வைக்கிறது என்றால் அது ஏன் எழுதப்படவேண்டும்? அது எழுதப்படுகிறது, பிரசுரமாகிறது என்பதிலேயே அந்த ஆசிரியனின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது. அவன் தன் வாசகர்களில் ஒருநல்விளைவை உருவாக்கவே எழுதுகிறான். ஆனால் அதற்கு வாசகனை சீண்டவோ நிலையழியச்செய்யவோ முயல்கிறான். வாழ்க்கையின் அறியப்படாத பக்கங்களைக் காட்டி வாசகனை திகைக்கச் செய்யும் படைப்புகள் உள்ளன. வாசகனிடம் ஆழமான குற்ற உணர்வை உருவாக்கும் படைப்புகள் உள்ளன. வாசகனின் நீதி உணர்ச்சியை சுண்டி அவனை அமைதி இழக்கச்செய்பவையும் உண்டு. வாழ்க்கையின் மொத்த சித்திரத்தை அளித்து வாசகன் தன் சிறுமையை உணரச்செய்து அதனூடாக அவனை ஆழ்ந்த துளியுணர்வுக்கு ஆளாக்கும் படைப்புகள் உண்டு. எதிர்மறைத்தன்மை என்று நாம் பொதுவாகச் சொல்பவை இவைதான்.

காம்யூ

ஆனால் எந்த இலக்கியப்படைப்பும் வாசகனில் உருவாக்கும் தொடர் இயக்கம் வழியாகவே மதிப்பிடப்படவேண்டும். வாசிப்பைக் கொண்டே இலக்கியப்படைப்பின் இயல்பையும் பணியையும் மதிப்பிட முடியுமே ஒழிய அதிலுள்ள உள்ளடக்கம் வழியாக அல்ல. நல்ல இலக்கியப்படைப்பு என சொல்லப்படுவது எதுவும் வாசகனின் பயணம் ஒன்றைத் தொடங்கி வைக்கிறது. அவன் ஆளுமையை மேலும் ஆழம் கொண்டதாக்குகிறது. அது சென்றடையும் இடம் அவனுடைய ஓர் அக நிகழ்வின் நிறைவே. அது ஒரு நேர்நிலைக்கூறு மட்டும் தான். ஆகவே  அது உடனடியாக உருவாக்குவது நிலையழிவை, சீண்டலை, கசப்பை, ஒவ்வாமையை என இருந்தாலும் அது நேர்நிலைப் படைப்பே.

இலக்கியப்படைப்புகளை ஒரு நீண்ட தொடர் உரையாடலின் ஒரு பகுதி என்றே கொள்ள வேண்டும். இலக்கியப்படைப்பு தனித்து நிற்கவில்லை. இலக்கியம் எனும் தொடர் உரையாடல் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு இலக்கியப்படைப்பும் அதற்கு முன்பிருந்த இலக்கிய மரபின் தொடர்ச்சி, வேறு பல இலக்கியப் படைப்புகளுக்கான எதிர்வினை, புது இலக்கியப்படைப்புகளை உருவாக்கும் தொடக்கம். அவ்வாறுதான் ஒரு படைப்பின் உணர்ச்சிநிலை, வடிவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.

லாரன்ஸ்

உதாரணமாக வாழ்க்கைசார்ந்த ஒளிமிக்க சித்திரத்தை மட்டுமே அளிக்கும் படைப்புகள், வாழ்வின் மீது பெருங்கனவை மட்டுமே விரிக்கும் படைப்புகள் நிறைந்த சூழலுக்கு எதிர்வினையாக வாழ்வின் அப்பட்டமான யதார்த்தத்தை முன்வைக்கும் ஒரு படைப்பு எழுதப்படலாம். அப்படைப்பை மட்டும் எடுத்துப்பார்த்தால் ஒருவேளை அது ஒரு சோர்வூட்டும் படைப்பாகத் தோன்றலாம். ஆனால் அது முந்தைய கற்பனாவாதத்தின் ஒருபக்கச் சார்பை சமன் செய்கிறது எனும்போது அது ஆற்றும் பணியும் நேர்நிலையானதே.

பெரும்பாலான யதார்த்தப் படைப்புகளை கவனித்தால் ஒன்று தெரியும். அவை எப்போதும் கற்பனாவாதத்திற்கு எதிரான அழகியலைக் கொண்டுள்ளன. வரலாறு முழுக்கவே உலக இலக்கியத்தில் ஓங்கியிருப்பது கற்பனாவாதம்தான். இயற்கை மற்றும் மனித உறவுகள் சார்ந்து ஒரு பெருங்கனவை அவை முன்வைக்கின்றன. மனிதன் தன் அன்றாடத்தால் அழுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டங்களில், போர்களிலும் பஞ்சங்களிலும் அவை அவனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்திருக்கலாம். ஆனால் கூடவே அவை அவனுடைய நீதியுணர்ச்சியை மங்கச்செய்து, கனவுலகில் வாழச்செய்வனவாக ஆகக்கூடும். அவை அவனுடைய அன்றாட எதார்த்தத்தின் மீதான பார்வையை மழுங்கடிக்கக்கூடும். அப்போது அந்த மிகைத்தன்மையை நிகர்செய்ய யதார்த்தப் படைப்புகள் வருகின்றன.

ஸ்டோ

உலக இலக்கியப் போக்கையே கவனியுங்கள். செவ்வியல் கற்பனாவாதம் என ஒன்று உண்டு. உதாரணம், கம்பராமாயணம். அது அறம்சார்ந்ததாக, பெருங்கேள்விகளை எழுப்புவதாக இருக்கும். வெறும் கற்பனாவாதம் அறவிவாதங்கள் அற்றதாகவும், புனைவுலகு ஒன்றை உருவாக்கி அதில் திளைப்பதாகவும் இருக்கும். அது செவ்வியல் கற்பனாவாதத்தின் நிழல்தொடர்ச்சியாகவும் இருக்கும். உதாரணம், குற்றாலக் குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள். அவற்றில் உள்ள வெற்றுக் கற்பனைக்கு எதிராகவே நேரடியாக யதார்த்தத்தை முன்வைக்கும், சீண்டும், உலுக்கும் படைப்புகள் உருவாகி வந்தன.

மீண்டும் கவனியுங்கள், தன்னளவில் எதிர்மறைப்படைப்புகள் என்று சொல்லக்கூடிய பல படைப்புகள் மனிதனின் நீதியுணர்ச்சியின்மேல் ஆழ்ந்த தாக்கத்தை செலுத்தி மானுட குலமே மேலான நீதியொன்றை நோக்கி செல்ல வழிவகுத்துள்ளன. உதாரணம் Uncle Tom`s Cabin. ஜனநாயகம் உருவாக்கிய பல மதிப்பீடுகளை கட்டி எழுப்பியவை மாபெரும் துன்பியல் படைப்புகள். எந்த நிலையில் நாம் வாழ்கிறோம், என்னென்ன இருள்களை நாம் உள்ளத்தில் சுமந்துகொண்டிருக்கிறோம்,  நமது நீதியுணர்ச்சியின்மீது நாம் எத்தனை மழுப்பல்களை ஒவ்வொரு கணமும் போட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அலகு பிரித்துக்காட்டும் ஒரு படைப்பு மெய்யாகவே எதிர்மறையானதா அல்லது நல்விளைவுகளை உருவாக்கும் எதிர்மறைத்தன்மை கொண்டதா?

ஃப்லாபர்ட்

மனிதனின் உயர்நிலையை மட்டுமே முன்வைக்கும் ஒரு படைப்பு நேர்நிலையானதென்று கொள்ளப்படலாம். மனிதனின் அனைத்துக் கீழ்நிலைகளையும் வெளிப்படுத்தும் ஒருபடைப்பு எதிர்நிலையானதென்று நமக்குத்தோன்றும். ஆனால் அது மனிதனை தன்னைத்தானே பார்க்க வைக்கிறது, தன்னைக்கடந்து செல்ல வைக்கிறது. அது ஒரு நோயறிக்கையைப்போல. நோய் அறிக்கைக்குப் பின்னால் சிகிச்சைக்கான அறைகூவல் இருக்கிறது. சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை அது அளிக்கிறது.

19ம் நூற்றாண்டில் உலகெங்கும் எழுதப்பட்ட யதார்த்தவாத, இயல்பு வாத நாவல்கள் மிகக்கடுமையான எதிர்மறைத்தன்மை கொண்டவை என்று மேலோட்டமாகப் பார்த்தால் தோன்றும். ஆனால் அவைதான் மனித குலத்தின் மீது நூற்றாண்டுகளின் தேக்கத்தால் உருவான செயலற்ற விழுமியங்கள் ஏற்றி வைத்திருந்த எடையை நமக்குக் காட்டியவை. மனித விடுதலைக்கான அறைகூவலை உருவாக்கியவை. உதாரணம், தல்ஸ்தோயின் அன்னா கரீனினா அல்லது ஃப்லாபர்ட்டின் மேடம் பவாரி போன்ற பேரிலக்கியங்களே இங்கு பெண்களின் வாழ்வு எப்படி உள்ளது என்று நமக்குக்காட்டின. இன்று நாம் பெண்களின் வாழ்க்கை பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டதாக இருந்து வந்தது என்று உணர்ந்திருக்கும் நிலைமை இப்பேரிலக்கியங்களின் வழியாக உருவானதே.

ஜனநாயகத்தின் விழுமியங்களை வலியுறுத்தும்பொருட்டு எழுதப்படும் படைப்புகள் நம்மை நோக்கி விரல் சுட்டுகின்றன. நாம் சென்ற காலத்தில் இழைத்த சாதிய கொடுமைகளை சித்தரித்து நம்முன் வைக்கும் ஒரு படைப்பு நம்மை அமைதியிழக்கச்செய்கிறது என்பதனால் அது எதிர்மறைப்பண்பு கொண்டதா என்ன? நாம் நீதியுணர்ச்சியை இரண்டு வகைகளில் மழுப்பிக் கொள்கிறோம். ஒன்று,

ஒரு கலைஞனின் அக சலனங்களை அவலங்களை சொல்லும் ஒரு படைப்பு எதிர்மறையானதா, அன்றி அக்கலைஞர்களை அது போன்ற கலைஞர்களை பார்க்க வேண்டிய பார்வை என்ன என்று சமூகத்திடம் வலியுறுத்துவதா? சென்ற நூறாண்டுகளில்  உலகம் முழுக்க கலைஞர்களின் மீதான அணுகுமுறை எத்தனை மாறியிருக்கிறதென்று பாருங்கள். அந்நியர்களாகவும் கிறுக்கர்களாகவும் பார்க்கப்பட்ட கலைஞர்கள் உண்மையில் பிறிதொரு உலகில் வாழ்பவர்கள் என்ற எண்ணத்தை கலைஞர்களின் அக இருளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட பலநூறு படைப்புகள் தானே உருவாக்கியிருக்கின்றன?

ஒரு சமூகத்தின் விளிம்புகளுக்கு அப்பால் வாழ்பவர்கள்,  சமூகம் உருவாக்கும் பொது  கட்டமைப்பை ஏற்று ஒழுக முடியாத உடற்குறையோ உளச்சிக்கல்களோ கொண்டவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் இன்றைய தனி அக்கறையும் அவர்களுக்காக நாம் உருவாக்கியிருக்கும் பல்வகையான சட்டங்களும் அவர்களின் அவலங்களை சுட்டிக்காட்டும் படைப்புகளால் உருவாக்கப்பட்டவைதானே? ஆகவே எதிர்மறைப்படைப்பு என்று ஒன்று இல்லை. நல்ல படைப்பு -சரியாக வராது போன படைப்பு என்றே உள்ளது. நன்றாக வந்த எந்த படைப்பும் மனித குலத்தின் முன்நகர்வுக்கு வழிவகுப்பதே.

கலைப்படைப்பில் மெய்யாகவே இருண்மை கொண்ட ஒன்றில்லை. ஆனால் வெளிப்பாட்டில் இருண்மை கொண்டவை உண்டு.  உதாரணமாக, மார்க்யூஸ் து சேத் எழுதிய படைப்புகள் வன்முறை மற்றும் கொடுமைகளின் உச்சங்களைக் காட்டுவன. ஒருகாலத்தில் அவை தடை செய்யப்பட்டு அவர் தண்டிக்கப்பட்டார். டி.எச்.லாரன்ஸ் எழுதிய சாட்டர்லி சீமாட்டியின் காதலன் போன்ற மானுட உறவுகளின் அகச்சிக்கல்களை காட்டும் பல படைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் பின்னாளில் அவற்றின் பங்களிப்பென்ன என்று கண்டடையப்பட்டுள்ளது. இன்று நாம் சேடிஸம் (வன்முறைப்பற்று) என்று ஓர் உளநிலையை வரையறை செய்து அதற்கு மருத்துவ முறைகளை, சமூகப்புரிதல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அது சேத் எழுதிய படைப்புகளில் இருந்து உருவான பார்வைதான். எனில் மானுடத்திற்கு மானுடனின் அதீத உளநிலைகளை சுட்டி எழுதப்பட்ட படைப்புகளை பயனற்றவை எதிர்மறையானவை என்று சொல்ல முடியுமா?

நவீனத்துவப் படைப்புகளிலேயே அந்த எதிர்மறை தன்மை வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் நவீனத்துவ படைப்பு பெரும்பாலும் ஒரு தனி அலகு சார்ந்தது. ஒரு தனி மனிதன், ஒரு கதைக்களம், ஒரு வாழ்க்கைத் தருண,ம் ஒரு குறிப்பிட்ட பார்வை ஆகியவற்றைக்கொண்டது ஆகவே கச்சிதமான ஒரு வடிவத்தை அது அடைகிறது. ஆனால் எப்போதுமே ஒற்றைப்படையான ஒன்றைச் சொல்லி நின்றுவிடுகிறது. உதாரணம் காஃப்கா, காம்யூ எழுதிய படைப்புகள் .

அப்படைப்புகள் பெரும்பாலும் எதிர்மறையாக இருப்பதே இயல்பு. ஏனெனில் கலைஞன் தான் உணர்ந்த ஒரு அமைதியின்மையிலிருந்து தான் எழுதத் தொடங்குகிறான். இதைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற துடிப்பே அவனிடமிருந்து அப்படைப்பு எழ காரணமாகிறது. Rupture என்று சொல்லக்கூடிய ஒரு அகக்கிழிசல் அப்படைப்புகளுக்கு பின்னால் உள்ளது. ஆகவே அமைப்பில் ,கூறுமுறையில் அது எதிர்மறைத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆனால் அந்தப்படைப்பின் சாராம்சம் அது அல்ல.

உதாரணமாக, காம்யூவின் அந்நியன் எல்லா வகையிலும் எதிர்மறைத்தன்மை கொண்ட ஒரு படைப்பு. ஆனால் அது அந்நியத்தன்மை என ஒன்று சமூகத்தில் திரண்டிருப்பதை, அதன் தத்துவ- உளவியல் ஆழங்களைச் சுட்டிக்காட்டியது. அத்தகையோரைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சாளரத்தை பொது சமூகம் நோக்கித் திறந்தது. 20-ம் நூற்றாண்டின் அடிப்படை இயல்பான அகவிலக்கம் என்பதை சரியாக வரையறுக்க உதவியது.

தனிப்பட்ட முறையில் எதிர்மறை தன்மை கொண்ட நவீனத்துவ படைப்புகளை நான் கொண்டாடுவதில்லை. தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் பலவும்  அந்த வகையைச் சேர்ந்தவை பதினெட்டாவது அட்சக்கோடு மானுடர்கள் உள்ளிலிருந்து எழும் வன்முறைக்கான விருப்பை தீமையை சுட்டிக்காட்டி அமைகிறது. கிருஷ்ணப்பருந்து அனைத்துக்கும் அப்பால் குடிகொள்ளும் காமவிழைவை நோக்கி ஒரு வெளிச்சம் பாய்ச்சி நின்றுவிடுகிறது.. நான் அவற்றைக்கடந்து வந்து ஒரு சமநிலையை இலக்கியப்படைப்பின் இயல்பாகக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். நான் எழுதும் படைப்புகள் நவீனத்துவத்தைக் கடந்த செவ்வியல் படைப்புகள் என்றே எனக்கே வரையறுத்துக்கொண்டேன்

ஆனால் அது என் இயல்பு சார்ந்தது என் ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டது. என் சொந்த வாழ்க்கையின் அவலங்கள், தேடல்களிலிருந்து நான் கண்டடைந்த வெளிச்சம் ஒன்றுண்டு. அந்த வெளிச்சம் என் படைப்பில் வரும்போதுதான் அவை சமநிலை கொள்கின்றன. செவ்வியல் தன்மை அடைகின்றன. செவ்வியல் தன்மையின் பொருட்டு செயற்கையாக ஒரு நம்பிக்கையை  அல்லது நேர்நிலைத்தன்மையை ஓர் ஆசிரியன் தன் படைப்புகளில் உருவாக்கிக்கொள்ள முடியாது. அவனுள்ளிருந்து எழுவது எதிர்மறையான விசையென்றால் அதை நேர்மையாக முன்வைப்பதே சரியானது. அந்த எதிர்மறை விசையினூடாக அவர் சென்று கண்டடைந்த ஒரு வெளிச்சம் அப்படைப்பில் வந்து அதை தன்னியல்பாக செவ்வியல் தன்மை கொண்டதாக மாற்றும் என்றால் அதுவே இயல்பானது.

ஜெ

முந்தைய கட்டுரைகுலாம் காதிறு நாவலர்
அடுத்த கட்டுரைசு.வேணுகோபால் சந்திப்பு, கடிதம்