2022 ஆண்டின் சுதந்திர தினம் அதிகாலை 12.30 கு ஈரோடு பேருந்து நிலையம் அருகே ஆவின் பால் பூத்தில் சூடான பாலுடன், தாமரைக் கண்ணன் மணவாளன் இருவருடனான இலக்கிய உரையாடலுடன் துவங்கியது. மணவாளன் இப்போதுதான் டால்ஸ்டாய் நாவல்கள் சிலவற்றை மறுவாசிப்பு செய்திருந்தார். அங்கே துவங்கி டால்ஸ்டாய் டாஸ்தாவ்ஸ்கி ஆக்கங்கள் வழியே இரு ஆளுமைகளும் எழுதி எழுதி கண்டு கொண்ட தங்களுக்கான கிறிஸ்து வரை உரையாடிபடி மண்டபம் வந்து சேர்ந்தோம். மண்டபத்தில் இன்னும் உறங்காமல் புகை போக்கிக்கொண்டிருந்த க்விஸ் செந்தில் அண்ணா வசம் நடந்து முடிந்த விழாவின் ப்ளஸ் மைனஸ் குறித்து ஒரு சிறிய உரையாடல் நிகழ்த்தினோம். முடித்து உறங்க 2.30.
மீண்டும் காலை 6.30 கே எழுந்து மேலை நாடுகளில் அங்குள்ள அதுவரையிலான மத, சமூக, அரசியல், தத்துவ அதிகாரத்தின் பின்புலத்தில் பின்நவீன கோட்பாடுகளின் தேவை உருவான விதம், அந்த நோக்கின் தனித்துவம், பலம், அதன் களங்கள் சுருங்கி சுருங்கி அது இலக்கியத்தில் மட்டுமே எஞ்சும் நிலை, அது தமிழ் நிலத்துக்கு வருகையில், நமதேயான கலாச்சார பண்பாட்டு வரலாற்று சிக்கல் குறித்து ஏதும் அறியாத, வாழ்க்கை நிலை சார்ந்த தவிப்புகள் ஏதும் அற்ற மேம்போக்கு எழுத்தாளர்கள் அதைக் கையாண்டு மேம்போக்குப் பிரதிகளை எழுதிக் குவித்த வகைமை குறித்து பேச்சு துவங்கி ஜெயமோகன் அன் கோவின் காலை நடையுடன் தொடர்ந்தது. 8.30 கு பத்ம பாரதி அவர்களை கரசூர் சேர்க்க கிளம்பினேன். அறைக்கு போகும்போது அங்கே சோ.தர்மன் பத்ம பாரதி இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். சோ.தர்மன் அவர்கள் விடை பெற்றதும், காலை உணவு முடித்து கரசூர் நோக்கி கிளம்பினோம்.
வழி நெடுக பத்மா அக்கா வினவ, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இது வரையிலான செயல்பாடுகளை விரிவாக சொன்னேன். வெண்முரசு துவக்க விழா குறித்த உரையாடல் வருகையில், அய்யய்யோ என் ஏற்புரைல கமல் சார் கு நன்றி சொல்ல விட்டு போச்சே என்று நினைவு வந்து பதறினார். பேசிக்கொண்டே வருகையில், வாழப்பாடி கடக்க, மலை அவரது அண்ணன் மகன் பின் சீட்டில் இருந்து அதோ அதோ என்று கூவி குதித்தான். என்ன என்று பார்த்தேன். சாலையின் இடது புறம், புத்தம் புதிதாக 150 அடி உயரத்தில் முருகன் சிலையாக நின்றிருந்தார்.
பயலுக்கு நினைவு தெரிந்த நாள் முதலே முருகன் என்றால் மிகுந்த இஷ்டம் என்று பத்மா சொன்னார்கள். அப்புறம் என்ன வண்டியை கோயிலுக்கு விடுங்க என்று சாரதி வசம் சொன்னேன். நிலம் முழுக்க, மக்கள் புற்கள் போல செறிந்திருந்தனர். நாங்கள் இறங்கி நடக்க, உலகப்போர் கல்லறை வரிசை போல வரிசை கட்டி நிறைந்திருந்த வாகனப் புதிர் வழிகளில் காரை நிறுத்த இடம் தேடி சாரதி காணாமல் போனார்.
ஸ்ரீதர் எனும் சேலம் நகர் தொழில் அதிபர், அவர் தந்தையின் கனவின் பொருட்டு எழுப்பிய சிலை என்கிறார்கள். அப்படியே மலேஷிய முருகன் கோயில் போலவே வடிவமைப்பு செய்யப்பட்ட வளாகம். முருகன் உட்பட அந்த கோயில் மொத்தத்தையும் மலேசிய கோயிலை செய்த குழுவே செய்ததாக அங்குள்ள பதாகை தெரிவித்தது. சிலை மட்டும் அங்குள்ள சிலையை விட உயரம். தலைச்சோறை வேகவைக்கும் வெய்யிலில் எம்பெருமான் முருகனை நெருங்க பக்தகோடிப் பஞ்சாமிர்தத்தில் கலந்து கூழானோம்.
எனது நோக்கில் இனி இத்தகு தனி நபர் முன்னெடுத்து செய்யும் கோயில்கள், எல்லா தெய்வங்களுக்கும் என தமிழ் நாட்டில் பெருக வேண்டும். வணிகம் தொட்டு அறக்கொடை வரை பல்வேறு கூறுகளுக்கான செல்வத்தை இங்கே திரட்ட முடியும். வரலாற்று கலைக் கோயில்கள், ஆகம விதிக்கு உட்பட்ட வழிபாடுகள் கொண்ட கோயில்களின் ஒழுங்குகள் குலைய, அந்த ஆலயம் கொள்ளாத அளவு அங்கே நிறையும் பெரும் ஜனத்தொகையை சற்றேனும் ‘மடை மாற்ற’ இத்தகு திறந்த வெளி பெருஞ்சிலை ஆலயங்கள் உதவும்.
மங்கல இசையோ, பக்தி பாடல்களோ இன்றி பக்தர்கள் கூச்சலில் நிறைந்து நின்றது கோயில் களம். அதிகம் போனால் இன்னும் இரண்டே வருடம், பெருவிழாக்கள் நிகழும் இடமாக இந்த முத்துமலை முருகன் கோயில் மாறிவிடும் எனும் நிலை கண் கூடாகவே தெரிகிறது.
பயல் உண்மையாகவே ஒரு முருகனடிமை போலவே அந்த முருகனை பார்த்து நின்றான். முருகனின் கிரீடம் முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக அத்தை அங்க பாருங்க என்று, (அவ்வப்போது ஆடும் காதணிக் குழைகள், வேலில் வழியும் அபிஷேக பால் என்று) பரவசமாக சுட்டிக்காட்டி ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தான். மலேஷியா முருகனை ஒப்பிட்டால் இந்த முருகன் தேவலாம் ரகம். தெய்வீக முகம் என்பதற்கு பதில் பார்பி பொம்மை முகம். அதை மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் சற்றே பக்திப் பரவசம் அடைய முடியும் என்ற தோன்றியது.
பத்மா அக்கா எங்கள் இருவருக்கும் திருநீறு பூசி விட்டார்கள். (உபரியாக அந்த முருகனை போலவே எனக்கு இரண்டு மனைவிகள் கிடைக்கட்டும் என்றும் சத்தம் போட்டு வேண்டிக் கொண்டார்கள்).
வெளியே வந்து திருவிழா கடைகள் ஊடே சுற்றினோம். அக்கா எனக்கு பிள்ளையார் படம் ஒன்று வாங்கி பரிசு தந்தார்கள். மலை பயல் செவ்வாய் கிழமை தோறும் பூஜை செய்ய ஒரு முருகன் சிலை பொம்மை வாங்கிக் கொண்டான். கண்ணில் பட்ட எல்லா கடைக்குள்ளும் ஏறி இறங்கினோம். கண்ணில் பட்ட எல்லா தின்பண்டத்தையும் சுவைத்தோம். வாகனத்தை கண்டு பிடித்து வெளியேறி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
வழியில் விட்ட இடத்திலிருந்து இலக்கிய உரையாடலை தொடர்ந்தோம். பத்மபாரதி முன்பே எனக்கு அளித்திருந்த அவரது கவிதை நூல்கள் குறித்து கேட்டார். நேற்று என்னைக் குறித்து ஒரு திடீர் கவிதை ஒன்று சொன்னார்.
நேத்து பாத்தா நீங்க தாத்தா
இன்னிக்கி இருக்கீங்க
பாக்க யூத்தா
என்று துவங்கி தொடர்ந்த அந்த கவிதை நினைவில் எழவே, எதுக்கு வம்பு என்று “பிரமாதமான கவிதைகள் கா. படிச்சா இன்னுமே நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி தற்காலிகமாக அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்து உரையாடலை மடைமாற்றினேன். பேசிக்கொண்டே கரசூர் வந்து சேர்ந்தோம். விஷ்ணுவும் கரசூர் வந்திருந்தார். பத்மா அக்காவை அவர் இல்லம் சேர்த்து, காபி பிஸ்கெட் முடித்து விடை பெற்றோம்.
அக்கா கிளம்புறேன் என்று நான் சொன்ன கணம் சட்டென உணர்வு மீற, உதடு இறுக்கி, கண் கலங்கி நின்றார். பேச்சு எழாமல் தலை அசைத்து விடை தந்தார்.
கடந்த நாட்கள் முழுக்க தொடர் விழாக்களின் நண்பர்களின் முகம் வழியாகவே ஒழுகி சென்றன காலம். கடலூர் மீளும் வழி நெடுக இந்த முகமே மீண்டும் மீண்டும் நினைவில் எழுந்தது. என்னென்னனோ நினைவுகள், உணர்ச்சிகள். ஏதோ சிகர முனை ஒன்றில் தனித்து நின்றிருந்தேன். இல்லம் வந்ததும் முதல் தகவலாக கிடைத்து, என் பெரியம்மாவின் பேத்திக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது எனும் சேதி. அதாவது உறவு முறைகளின் மேதமாடிக்ஸ் படி நான் தாத்தா ஆகி விட்டேன். சோலி மூடிஞ்ச். நான் தரைக்கு வந்து விட்டேன்.
கடலூர் சீனு