ஆசிரியர்கள்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஆசிரியரைப்பற்றிய தங்களின் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எனது இஞ்சினியரிங் படிப்பை முடித்துவிட்டு, விடுபட்ட அரியருக்காக ஒருவருடம் வேலைக்குச் செல்லாமல் ஊரில் இருந்தேன். அப்போது எனது ஊரில் உள்ள 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். அதிலும் குறிப்பாகப் பக்கத்து கிராமத்து அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் சராசரிக்கும் குறைவாக இருந்தது. கோபத்தில் ஒருநாள் ஒரு மாணவனிடம், “வாத்தியார் பாடம் நடத்துகிறாறா அல்லது தூங்குகிறாரா” எனக் கேட்டேன்.”வாத்தியார் பள்ளிக்குச் சரியாக வருவதே இல்லை எனக் கூறினான்.”நான் வேண்டுமானால் வந்து இலவசமாகப் பாடம் நடத்துகிறேன். உனது ஆசிரியரிடம் கேட்டு வா” என்றேன் . அதன் பின் கிட்டத்தட்ட ஒரு வருடம் அப்பள்ளியில் பாடம் நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. நான் பயின்ற பள்ளியும் கூடக் கவிமணி பிறந்த ஊருக்கு அருகிலுள்ள கிராமத்தில் உள்ளது.

உங்கள சொல்லாட்சியின் படி சொல்வதானால்” பொறுக்கிகள்” தான் ஆசிரியர்கள். காலை 10 மணியிலிருந்து 1 மணிவரை- பின்னர் 2 மணியிலிருந்து 4 மணிவரையே நடைபெறும் நடுநிலைப்பள்ளி அது.இதில் 15 நிமிடம் ஓய்வு வேறு.மொத்த வேலை நேரம் 4.45 மணிக்கூர் தான்.மாணவர்கள் அவரவர் திறமையினால்தான் படித்துத் தேறினர். ஒருசில விதிவிலக்கான ஆசிரியர்களும் உண்டு. தலைமை ஆசிரியர் முழு நேர புரோக்கர்( மாடு ,வயல் மற்றும் வீடு ஒத்தி) பகுதி நேரமாகப் பள்ளிக்கு வருவார். இதில் 8-ஆம் வகுப்பின் தமிழாசிரியரும் அவரே. பழகுவதற்கு இனியவர். அவர் பள்ளிக்கு வந்ததை விட வராமல் இருந்த நாட்கள் மிக அதிகம். கேட்டால் நாகர்கோவில் கல்வித்துறை அலுவலகம் செல்வதாக ஒரு குறிப்பு மேஜையின் மேல் எப்போதும் இருக்கும். பிற ஆசிரியர்கள் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சும்மா பேசிக்கொண்டும் மாணவர்களை அமைதியாய் இருக்கும் படி அதட்டிக் கொண்டும் இருப்பர்.

ஒரு ஆசிரியை தனது மகளின் ஆங்கிலப் பள்ளி ஆசிரியரைப்பற்றி என்னிடம் குறை சொன்ன போது ,” நாமும் ஆசிரியர் தான் நாம் நம்முடைய பணியை ஒழுங்காகச் செய்கிறோமா? அதைப்போலதான் அவர்களும் “என்றேன் .அன்றிலிருந்து என்னிடம் பேசுவதில்லை. பள்ளிக்குப் பரிசோதனைக்காக வந்த கல்வி அதிகாரி நான் கணிதப் பாடம் எடுப்பதைக் கவனித்துத் தனியாக என்னைப் பாராட்டிச் சென்றார். அன்றிலிருந்து என்னைச் சுற்றி எரிந்த பொறாமைத்தீயின் விளைவால் நானாக விலகிக்கொண்டேன் அப்பள்ளியிலிருந்து.பின்னர் ஓர் தன்னார்வ நிறுவனத்தில் இணைந்து 200 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று சின்னக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் பணியில் என்னையும் ஈடுபடுத்திக்  கொண்டேன்.

தற்போது சிங்கப்பூரில் பணியில். மனதினுள் இன்னமும் ஆசிரியர் பணியினால் சாதிக்கக்கூடிய சாத்தியங்கள் குறித்து வியந்து கொண்டிருக்கிறேன் ஆசிரியர் பயிற்சி மட்டும் முடித்து ஆசிரியர் ஆவதெல்லாம் உண்மையிலேயே “தண்டத்துக்கு மாரடிப்பது” தான். உண்மையான அர்ப்பணிப்பு உணர்வும் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் திறனும் உள்ளவர்களாலேயே சிறந்த ஆசிரியராய் இருக்க முடியும். ஏனெனில் இன்றைய மாணவர்கள் தனது பெற்றோர்களிடம் இருப்பதைவிட ஆசிரியர்களோடுதான் பள்ளியில் அதிக நேரம் இருக்கின்றனர். துரதிஷ்டவசமாக ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த ஆசிரியர்களை விட மோசமான ஆசிரியர்கள் எனும் “பொறுக்கிகள்”தான் அதிகம்.

Regards,
BALA.R
சிங்கப்பூர்.

இன்று சுமார் 35  வயதுக்கு மேல் உள்ளவர்கள் பெரும் பாலும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அன்றைய ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு அளித்த பாட போதனைகளுக்கும், இன்று அளிக்கும் போதைப் பாடங்களுக்கும் காரணம் , ஆசிரியர்களின்  ஒழுக்கக் குறைவு , மதுப் பழக்கம், அறச் சிந்தனை அற்ற மனப்போக்கு , பணம் பண்ணப் பல தொழில் என்று பெருகி விட்டது. நன்கு படிப்பவர்கள்  தனியார் பள்ளிக்குப் போய் விட்டதாகவும் , உதவாக்கரை  , தெருப்பொறுக்கி, தாழ்த்தப்பட்டோர்  மட்டும்  அரசுப் பள்ளிக்கு வந்து எங்கள் உயிரை எடுக்குறாங்க என்றும் ஒரு  தலைமை  ஆசிரியர் கூறக் கேட்டு, விக்கித்துப்போனேன். இதற்குத்தான் சுதந்திரம் பெற்றோமா ?

ஆபிரகாம்  லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்  http://www.eegarai.net/t51318-topic.  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் உள்ளதை ஒவ்வோர் ஆசிரியரும் படித்தால் மட்டும் போதும் .

அன்புடன் பாஸ்கரன்

முந்தைய கட்டுரையானைடாக்டர்-படங்கள்
அடுத்த கட்டுரைஅனந்தபத்மநாபனின் களஞ்சியம்