கடந்த இரண்டு நாட்களாக ஜெயமோகனின் நாவலான “வெள்ளை யானை” வாசித்தேன். மீள் வாசிப்பு. அன்பு பொன்னோவியம் சொன்ன ஒரு தகவலிலிருந்து “வெள்ளை யானை” நாவலை எழுதி இருக்கிறார் என்று அறிந்தேன்.
ஐஸ் ஹவுஸ் போராட்டம். இந்தியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம். நூறு நூறு ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட உறைந்துபோய் கிடந்த சமூகத்தின் முதல் கையசைவு. இனி எப்போதும் இந்தியா நினைவில் வைத்திருக்கும் வைத்திருக்க வேண்டிய தொழிலாளர் போராட்டம். ஆட்சிக்காக அல்ல. அதிகாரத்துக்காக அல்ல. உரிமைக்காக. அடிப்படை மனித உரிமைக்காக. கூலிகளின் உரிமைக்காக. ஜனநாயகம் என்ற சொல்லுக்காக. ஒருவகையில் இந்திய தலித்துகள் வரலாற்றில் முக்கியமான முதல் போராட்டம். ஆனால் இது மையவரலாறு அல்ல. மைய வரலாறாக பாவிக்கப்படவும் அல்ல.
நமக்கு வரலாற்று புனைவென்றாலே அது மன்னர்கால வரலாறு தான். அல்லது அத்தகைய வரலாற்றில் புகுந்து கொண்டு அதைப்பற்றிய நமது எண்ணங்களை வியாக்கியானம் செய்வது தான். ஆனால் மிகவும் அண்மையில் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தை எடுத்துக் கொண்டு அதை புனைவாக்குவது மட்டுமல்லாது தக்காண பஞ்சம் பற்றி மெட்ராஸ் பஞ்சம் பற்றி பிரிட்டிஷ் ஆட்சி முறை, இந்தியா சாதிமுறை, அதன் கட்டுமானங்கள் பற்றி அதுவரையில் இல்லாத புதிய மதிப்பீடுகளை எண்ணங்களை உண்மைகளை முன்வைத்தது இந்நாவலின் பலம்.
நாவலின் ஒரு முக்கியமான கூறு மையம் இல்லாத ஒன்றை பேசுபொருளாக எடுத்துக் கொள்வது. அப்படியான ஒன்றை வைத்து மற்றவற்றை அளவிடுவது. அதிலிருந்து புதிய ஒன்றை நோக்கிச் செல்வது.
பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சி பற்றி தமிழகத்தில் ஒரு உயர்வான எண்ணமே இருந்து வந்தது.
ஏன் இன்றும் கூட “வெள்ளையர்கள் நல்லவர்கள் இன்னும் இருநூறு ஆண்டுகள் அவர்கள் ஆட்சி செய்திருக்கலாம்” என்று ஏதாவது ஒரு டீக்கடையில் அமர்ந்து சிலர் பேசுவதை நாம் கேட்டிருப்போம். நான் கேட்டிருக்கிறேன். அந்த டீக்கடை பேச்சிற்க்கும் சற்றும் குறைவில்லாத அளவிலேயே இங்குள்ள அறிவுத்தள விவாதங்கள் நடந்திருக்கின்றன.
அதை முற்றிலும் மறுத்து விவாதித்திருக்கிறது இந்நாவல். அது இந்நாவலுடைய பேசுபொருளின் பலம். இந்நாவலை கட்டமைப்பதற்கு ஆசிரியன் எடுத்துக்கொண்ட கதாபாத்திரங்கள் என்னை மிக மிக ஈர்த்தவை. A novelist intelligence.
ஏய்டன் பைர்ன் இந்நாவலின் மையப்பாத்திரம். அவன் யார், எங்கிருந்து வருகிறான் என்பதே ஒரு நாவலில் வந்துவிடக்கூடாத ஒருமைத்தன்மையை கலைத்துவிடுகிறது. நாவலுக்கு மிக அவசியமான முரணை வலுவாக்கி விடுகிறது. “நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் உறுப்பினனாகிய நான் இதோ ஒடுக்குமுறையாளன் வேடமிட்டு வந்து அமர்ந்திருக்கிறேன்.” என்கிற ஏய்டனைப்பற்றிய குறிப்பு நாவலை விரிந்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அவன் ஷெல்லியின் வாசகன்.
நீதியுணர்ச்சி கொண்டவன். அதற்காகத் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளத் துணிபவன்.
நானொரு ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவன் என்ற நினைப்பு அகத்தே அவனுக்கு உண்டு. காத்தவராயனுடன் சேரிக்குள் நுழையும் போது அவனுள்ளே இருக்கும் “சேரிக்காரன்” விசிலடித்து கொண்டாடுகிறான். கலைந்து கிடக்கும் அந்த இடம் அவனுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. தந்தை மகிழ்வார் என்று நினைக்கிறான். அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பணிபுரியும் காப்டன் என்ற சிந்தனை அவனுக்கு புறத்தே உண்டு. எல்லாமும் அவனுக்கு சட்டபூர்வமாக நடைபெற வேண்டும் என்கிற கவனம் உண்டு. இந்திய சாதிய கட்டமைப்பும் பிரிட்டிஷ் ஆட்சிமுறையும் ஷெல்லியும் மரிசாவும் செயற்கைப் பஞ்சமும் காத்தவராயனும் தன் சொந்த நீதியுணர்ச்சியும் ஏற்படுத்தும் அகநெருக்கடிகளும் புற நெருக்கடிகளும் தான் நாவல் என்று ஒரு வசதிக்காக வகைப்படுத்திக்கொள்ளலாம் என்றாலும் அந்த வகைப்படுத்தலை இந்நாவல் மீறவே செய்கிறது.
இந்நாவலின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் காத்தவராயன். அயோத்திதாசர். மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் என்று தோன்றுகிறது. அயோத்திதாசரின் மொத்த எழுத்துக்களும் என்னவோ அதைச்சுட்டும் விதமாக. ஏய்டனை அவன் நீதியுணர்சியை சதா சீண்டும் விதமாக. ஒவ்வொரு வசனங்களும் மிகமிக நேர்த்தியாக. அயோத்திதாசரே எழுந்து வந்து பேசியதைப் போல.
“கருணை கேட்க நாங்கள் நரகத்தில் உழலும் பாவிகளும் அல்ல, இங்குள்ள மற்ற மனிதர்கள் கடவுளும் அல்ல. நாங்கள் மனிதர்கள். எங்களுக்குத் தேவை நீதி. சமத்துவம். இன்று நீங்கள் என்னுடன் கைகுலுக்கி சமானமாக அமரச் செய்தீர்களல்லவா.. அந்த மனநிலை. உங்கள் இனத்தவர் நேற்று எப்படி இருந்தாலும் இன்று அதை அடைந்துவிட்டீர்கள். தனிமனிதர்கள் எப்படி இருந்தாலும் உங்கள் மொழியும் சட்டமும் நீதியையும் சமத்துவத்தையும் சொல்கிறது. ஆனால், எங்கள் மொழிமீது மலநாற்றம் அடிக்கிறது. எங்கள் நீதி மீது நிரபராதிகளின் ரத்தம் வழிகிறது”
“அதனால் ஐஸ்ஹவுஸில் நடந்த போராட்டத்தைப் பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம். அதன் அழிவுகளைப் பற்றி அல்ல. அழிவே நிகழவில்லை. நிகழ்ந்தால் அது எப்போதும் நிகழும் அழிவுகளில் ஒரு சிறுதுளி தான். நாங்கள் போராடியிருக்கிறோம். எங்களால் போராட முடிகிறது. இப்போதைக்கு அது தான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இந்த மண்ணில் இன்னும் நூறு ஆண்டுகாலம் நடக்கப் போகும் போராட்டங்களின் முதல் அசைவு நிகழ்ந்திருக்கிறது. அது எங்களுக்குப் போதும்”
காத்தவராயனின் ஒவ்வொரு நகர்வும் அவன் பேசும் வசனங்களும் மிக மிக அறிவார்ந்த தன்மையுடையவை. நாவலிலிருந்து வெளியே வந்து மீண்டும் நாவலை பற்றிச் சிந்தித்தால் எல்லா கதாபாத்திரங்களும் அறிவார்ந்தவை. காத்தவராயன், மாக், முரஹரி அய்யங்கார், பார்மர், மாரிசா, துரைசாமி. அவர்கள் பேசும் எல்லா வசனங்களும் மிகுந்த தர்க்கம் கொண்டவை. நடைமுறை எதார்த்தம் கொண்டவை. உண்மையில் அவர்களுக்கு இடையில் வந்து சிக்கிக்க்கொண்டவன் ஏய்டனே.
“வெள்ளை யானை” என்ற படிமம் நாவலில் ஒவ்வொன்றாக வளர்ந்து வெவ்வேறாக திரிந்து உருக்கொள்கிறது. மிகப்பெரிய பனிக்கட்டியாக, இந்தியாவாக, நீதியுணர்ச்சிமிக்க ஏய்டனாக, ஐராவதமாக இன்னும் பலவாக. அது ஒவ்வொரு முறையும் சில்லிட வைக்கிறது.
ஒருகட்டத்திற்கு மேல் ஏய்டனுக்கு அகமாகவும் புறமாகவும் விழும் நூறு நூறு சம்மட்டி அடிகள்.
செங்கல்பட்டு பஞ்சத்தை நேரில் கண்டமை. அதற்கு நம்மால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று தனது எல்லையை அறிந்து கொண்டமை. போராட்டத்தை செயலிழக்க செய்யும் நூதனமான உத்தியான தனது பணி மாற்றம்.
முரஹரி அய்யங்காரின் வருகை, போராட்டம் வன்முறையில் முடிந்தமை. அதற்கு தானே காரணம் என அறிந்தமை. மாரிசாவின் காதல் மறுப்பு. பஞ்சத்தை அதன் கோரமான ஊர்வலத்தை இடப்பெயர்வை நேரில் கண்டமை. ஒட்டுமொத்தமாக இப்பிரச்னை குறித்து அறிக்கை கூட தயாரிக்கவியலாமை. தற்கொலை முயற்சி. காத்தவராயனின் இறுதி உரையாடல். தென்காசி குடிவிருந்து உரையாடல்.
இது ஜெயமோகனின் மிக முக்கியமான நாவல். இதைப்பற்றி திறந்த உரையாடல் அவசியம் என நினைக்கிறேன். நாவலைப் பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுத வேண்டும்
மனோஜ் பாலசுப்ரமணியன்