நீலம், அனுபவம்

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெ,

நீலம் முதல்வாசிப்பில் அணிபுனைதல் வரை வாசித்தேன். இதற்கு முன் கிருஷ்ணன் பற்றிய முழு அறிமுகம் எனக்கு இருந்திருக்கவில்லை. கிருஷ்ணனை அறியும் தோறும் பரவசம் பெருகியது. மொழிநடை பெருங்கடலென உள்ளிழுத்துக்கொண்டது.  கண்ணன் முதல் நடை வைத்தது, மயிற்பீலி சூடியது, முதற்குழல் இசைத்தது என பொற்கணங்களை அனுபவித்தேன். சுதா ரகுநாதனனின் ‘அசைந்தாடும் மயிலொன்று கண்டேன்’ கேட்டு கிருஷ்ணன் பாடல்களில் ஈர்க்கப்பட்டேன். சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்தின் ‘கண்ணன் வருகின்ற நேரம்’ கேட்டு லயித்திருந்தேன்.

மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து நின்று விட்டேன். இதற்கிடையில் கிருஷ்ணன் ஒரு ராஜதந்திரி, கடவுள் அல்ல.  மூல மகாபாரதத்திலும் அவ்வாறே, வெண்முரசிலும் அப்படியே என்று உங்கள் பேச்சில் கேட்டேன்.

சில மாத இடைவெளியில் மீண்டும் நீலம் தொட்டேன். இரண்டு வாரத்தில் முழுமையாக வாசித்து முடித்தேன். முதல் வாசிப்பிலிருந்த பரவசம் இப்போது இல்லை. கண்ணனை கடவுளாக்கும் வரிகளைத் தேடித்தேடி மூளை அலைந்தது. ஒருவித விலக்கம்  உண்டாயிற்று. சொற்களுக்குள் தத்தளித்து நீந்தினேன். எனது மனம் கிருஷ்ணனை கடவுளாக்க கடுமையாகப் போராடியது. இந்திரனுக்கான பலியை நிறுத்தி கோவர்த்தன மலையைத் தூக்கும்போது உங்கள் பேச்சையும், எனது மூளையையும் வென்று கடவுளான கிருஷ்ணனை என்னில் களிப்படைந்தேன்.

திருமண இசைவிற்குப் பிந்தைய ராதையின் நிலையை எண்ணி வருந்தினேன். காத்திருக்கும் துயர் என்னையும் துளைத்தது. ஒரு கட்டத்தில் ராதை ஒரு மலர் என்றுணர்ந்தேன். மலராகவே என்றும் நீடிக்கும் ராதை. கனியாகாத மலர் உதிர்ந்து சருகாக வேண்டும் என்ற நியதி கொஞ்சம் ஆறுதல் தந்தது. கண்ணன் ஒரு நதி. ஆயிரம் கோடி கைகள் அள்ளிப்பருகும் அதை. அனைத்தையும் தானே அள்ள நினைக்கும் ராதையின் ஏக்கம் நிறைவேறும் வழியில்லை என்றுணர்ந்து பரிதாபப்பட்டேன்.

முடிசூடிய கண்ணனுக்கு வேய்ங்குழல் கொண்டு வந்து கொடுத்த ராதையின் மனம் கண்டு புன்னகைத்து மகிழ்ந்தேன்.

கன்னி அன்னை வாழ்க.

அன்புடன்,
சக்தி பிரகாஷ்,
கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைதேவதேவனின் கவிதையுலகம்
அடுத்த கட்டுரைபிரமோ, ஒரு பதில்