கடந்த மூன்று நாட்கள், விடுதலை நாள் கொண்டாட்டங்களைக் கவனிப்பதும், அவற்றில் மிகக் கவனமாக பழைய தேசத்தந்தையையும் அவரின் பல்லாயிரம் சீடர்களையும் திரை போட்டு மறைத்து விட்டு புதிய தேசத்தந்தைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதும், பிரிவினைப் புண்ணை மேலும் குத்திக்கிளறி 7அதற்கெல்லாம் காரணம் திரு நேரு அவர்கள்தான் என்றெல்லாம் எழும் கர்ஜனைகளை வேதனையோடு கவனிப்பதுமாகக் கழிந்தன. தேசவிரோதி அல்ல என்று நிரூபிப்பதற்காக தேசீயக்கொடியையும் கட்டி விட்டேன்.
கப்பலோட்டிய தமிழன், பாரதி படப்பாடல்களை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டேன்.
சல்லித்தனமான நாத்திகம், பாமரத்தனமான ஆத்திகம் என்று சொல்வீர்கள். தேசபக்தி என்ற அந்தரங்கமான புனிதமும் அதே பாதையில் இழுத்துச் செல்லப் படுவதாக உணர்கிறேன்.
நான் சந்தித்த, படித்த பெரியவர்கள் அனைவருமே நன்றி மறப்பது நன்றன்று என்றுதான் சொன்னார்கள். ஏறி வந்த ஏணிகளை மறக்காதே என்றார்கள். ஆட்சியின் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களின் நீண்ட உரைகளில் ஒரு பத்து மணித்துளிகளாவாது நம் அப்பன் பாட்டன்கள் விடுதலைப் போரில் ஆற்றிய பணிகளைப் பற்றிக் குறிப்பிடவில்லையே.
ஒரு எளிய பள்ளியில் மாணவர்களிடையே கொடியேற்றி விட்டு பேசினேன். நூல்களிலும் இணையத்திலும் படித்த சில தகவல்களைச் சொன்னேன். ஆர்வமாகக் கேட்டார்கள். முதல்வர் சொன்னார் அடிக்கடி வந்து பேசுங்களென்று.
உங்கள் வெள்ளை யானையிலிருந்த பஞ்சம் பற்றிச் சொன்னேன். ராய் மாக்ஸிமின் உப்பு வேலி மற்றும் அவரது இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு நூல்களின் மையக் கருத்தைச் சொன்னேன். பிள்ளைகள் ( பெற்றோரும் ஆசிரியரும் கூட) கண்கள் விரித்துக் கேட்டார்கள். இன்று அவர்களுக்குச் சொல்லப்படுவதெல்லாம் சுல்தான்களும் மொகலாயர்களும் மட்டுமே நம்மைக் கொள்ளையடித்தவர்கள் என்பதுதானே. அவுரங்கசீப்புதானே அடிக்கடி தோண்டி எடுக்கப்பட்டு, இரண்டு அடிபோட்டு மீண்டும் புதைக்கப்படுகிறார்.
1900த்திலிருந்து 1947 வரையிலான விடுதலைப் போர் தலைவர்கள் பற்றிக் குறிப்பிட்டால் தாங்கள் இன்று எழுத நினைக்கும் புதிய இந்திய வரலாறுக்குப் பொருந்தி வராதென்ற எண்ணமோ? ஒரு நாலாந்தர அரசியல் வியூகமோ?
எத்தனை முயன்றாலும், இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்குமாக உண்மையான விடுதலைப் போர் வரலாறு பற்றிய தகவல்கள் நூல்களிலும் வலைதளங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன. தேடிப் படித்தார்களானால் தேசத்திற்கு நல்லது.
விடுதலை பெற்ற ஏழாண்டுகளுக்குள் பிறந்ததால் நம் தியாகத்தலைவர்கள் பற்றி நிறையச் சொல்லப்பட்டிருக்கிறேன். எட்டு வயதிலேயே காந்தியின் சத்தியசோதனை புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள் அம்மா. (அப்பா கதர் நெசவாளி). புதிய தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இல்லையே என்ற ஒரு ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே இந்தப் பதிவு. நாம் உயர்தளத்தில் வைத்துப் போற்றும் சிலரிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆறுதல்.
நெருங்கிய நண்பர்களிடம் பேசினேன். எல்லோருமே இன்றைய சூழலைப் பொதுவெளியில் விவாதிக்க தயக்கமும் சிறிய அச்சமும் கூடக் காட்டினார்கள்.எல்லாம் வல்ல இறைசக்தி இந்த தேசத்தைக் காக்குமென்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.விடுதலைதின நல்வாழ்த்துக்களும் விடுதலைப்போர் வீரர்களுக்கு நெஞ்சு நிறைந்த நன்றியும்
அன்புடன்
ரகுநாதன்.
அன்புள்ள ரகு.
ஆம், இப்போது நிகழ்வதும் அதுவே.
அரசியல் நோக்கு கொண்ட தேசியவெறி. அரசியல் நோக்கு கொண்ட தேசமறுப்பு. நடுவே ஒரு சிறு தீவென நின்றிருக்கிறோம். தேசம் என்பது அதை உருவாக்கிய மறுமலர்ச்சிக்காலச் சிந்தனைகளும், சிந்தனையாளர்களுமே என மீண்டும் நமக்குநாமே சொல்லிக்கொள்வோம்.
ஜெ
***
அன்புள்ள ஜெமோ,
மூன்று நாட்களாக திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் எங்கள் நிறுவனம் campus hiring நடத்துவதால் இங்கே உள்ளேன். இன்று மாலை கிளம்பி ஈரோடு வருகிறேன்.
இன்று காலை கல்லூரியின் கணிப்பொறி துறை கட்டிடத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி கொடியேற்ற அழைத்து ஓரிரு நிமிடம் மாணவர்களிடையே பேச சொன்னார்கள். உங்களின் இன்றைய காந்தியையும, அறம் தொகுதியையும் மாணவர்கள் படிக்கும் படி கேட்டுக் கொண்டேன். கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பற்றி அறிமுகம் செய்தேன்.
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவர் “ஜெயமோகன் என்னும் எழுத்தாளர்” பற்றித் தெரிந்து கொண்டோம். அவசியம் கல்லூரிக்கு அழைக்கிறோம் என்றார்கள். இந்த கல்லூரியின் நிறுவனர் Cletus Babu நாகர்கோயிலை சேர்ந்தவர். முந்நூற்றி ஐம்பது ரூபாய் பணத்துடன் திருநெல்வேலி வந்தவர் இன்று பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
மாணவர்களிடையே உங்களை பற்றி பேசியது மிக சந்தோஷமாக இருந்தது. நாளை சந்திக்கிறேன்.
நன்றி,
வாசு
***
அன்புள்ள வாசு,
இந்தத் தருணத்தில் நாம் சொல்லிக்கொள்ளவேண்டியது ஒன்றே. எல்லா சிறு செயல்பாடுகளுக்கும் ஒரு பங்களிப்பு உள்ளது. நேர்நிலையாக அமையும் என்றால் அவையே நீடிக்கக்கூடிய விளைவை அளிப்பவை.
ஜெ