வெண்முரசு பேட்டிகள், ஒரு மலையாளநூல்

நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருந்த நாட்களில் கே.என்.சிவராமனின் ஆர்வத்தால் குங்குமம் இதழ் மட்டுமே அதைப்பற்றி செய்தி வெளியிட்டது. மற்ற இதழ்களில் அத்தகைய இலக்கிய ஆர்வமோ கவனமோ கொண்ட எவரும் இருக்கவில்லை. ஆனால் மலையாள இதழான மாத்ருபூமி ஏழாண்டுகளில் நான்கு மிக நீண்ட பேட்டிகளை, அட்டைப்படத்துடன் வெளியிட்டது.

அந்தப் பேட்டிகளை தொகுத்து அருண் கோபி நூலாக்கியிருக்கிறார். தலைப்பு ‘அவர்களுக்கு மகாபாரதம் தெரியாது, வரலாறும்- ஜெயமோகனுடனான பேட்டிகள்’. (இங்கே அவர்கள் என்பது மலையாளத்தின் சம்பிரதாயமான அரசியல் விமர்சகர்களை, ஒரு கேள்விக்கு பதிலாக).

நூல்வெளியீடு 15 ஆகஸ்ட் 2022 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்றது. அன்று விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் ‘தமிழ்விக்கி தூரன் விருது’ விழா நடைபெற்றதனால் நான் செல்ல முடியவில்லை. மலையாள எழுத்தாளரும் மாத்ருபூமி ஆசிரியருமான சுபாஷ் சந்திரன் வெளியிட விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். இயக்குநர் மதுபால் பங்குகொண்ட நிகழ்ச்சி.

நூலின் பின்னட்டையில் ’ஜெயமோகன் என்னும் எழுத்தாளனை நோக்கித் திறக்கும் வாசல் இந்தப் பேட்டிகள்’ என சொல்லும் மதுபால் ‘காற்றில் கள்ளியங்காட்டின் ஒரு மறைந்த சரித்திரமுள்ளது. துயரார்ந்த ஒரு காலத்தின் அடுக்குகளில் இருந்து தொடர்ந்து எழுதியும், பேசியும், அசுரத்தனமான இந்த காலத்தின் எல்லா பிரச்சினைகளிலும் மென்மையாக தலையிட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஞானியும் உள்ளார்.அவரை அறிய, அந்நிழலில் அமர அருண் எடுத்த இப்பேட்டிகளால் இயல்கிறது. இந்த பயணம் ஒருபோதும் முடிவடையாமலாகுக என்னும் வேண்டுதலுடன் ஜெயமோகனின் சொற்களைக் கேட்போம்’ என்கிறார்

முந்தைய கட்டுரைமொழிவழி அறிதலும் மொழியை அறிதலும்
அடுத்த கட்டுரைபிரமோ உஷார்!