வசைகளும் வன்முறையும்

அன்புள்ள ஜெ,

ஆசிரியர்களைப் பற்றியும், முராத்தியின் பீர் புட்டிகளைப் பற்றியும்,  வசைகளைப் பற்றியும் நீங்கள் இருநாள் இடைவெளியில் எழுதியிருந்தது எனக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் மூன்றும் மனோதத்துவ அடிப்படையில் ஒன்றிணைந்தவையாகவே எனக்குத் தென்படுகின்றன.

என் பால்யத்தில் கண்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள்தான். ஆனால் வாலிபனாக ஆன பின்பு,கால ஓட்டத்துடன் அது நிச்சயம் மாறிவருவதைப் புரிந்துகொண்டேன். பல ஆசிரியர்களில் ஒரு சிலரை நினைவுகூர வேண்டியிருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்  பொன்னேரி மேனிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்திருந்த போது ‘முத்து’ என்னும் அதீதத் திறமையுள்ள கணித ஆசிரியர் இருந்தார். சாரணர் இயக்கத்துக்கும் அவரே ஆசிரியர். அவர் பாடம் எடுக்கும் நேரமெல்லாம் வசை, கணக்கில் கூட. 60 இதர மாணவர்களிடையே வகுப்பில் இரண்டு ‘அயிரு’ மாணவர்கள் . ஒரு ஞாயிற்றுக் கிழமை, சென்னை தொலைக்காட்சியில் காட்டப்பட்ட  ஒரு பழைய படம். அதில் பிராமண குமாஸ்தாவான  நாகேஷ், முட்டை பரோட்டாவைத் தெரியாமல் தின்றுவிட்டு வாந்தி எடுக்கப் பிரயத்தனம் பண்ணும்  நகைச்சுவைக் காட்சி வரும். அடுத்தநாள் வகுப்பில் முத்து வாத்தியார் இருவரில் ஒருவனைப் பார்த்து “ஒத்தா  அயிரே, துன்னப்ப இனிக்குது.. அப்பறம் முட்டைன்னு தெரிஞ்சவுடனே உன் சூ..க்கு கசக்குதா?” என்று கேட்க, மாணவர்களெல்லாம் விழுந்து, கைதட்டி சிரித்தனர்.

பொதுவாக எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லா வகுப்புக்களிலும் வசைபாடும் அவர், பக்கத்து வகுப்பில் ஒரு சீனியர் பிராமண ஆசிரியை பாடம் நடத்தும் போதெல்லாம் மட்டும்  கப்சிப் ஆகிவிடுவார். மிகவும் மரியாதையுடன்  ‘மேடம், எப்படி மேடம் இந்த பாஸ்ட் பர்டிசிபிளா மாறும்பொழுது…இப்படி வருது மேடம்?’ என்பது மாதிரி ஏதாவது தினசரி பம்முவார். அடுத்த வகுப்பில்  ” அர்ச்சனை தட்டுல காசு போட்டா மட்டும்  ..த்துன்னு போற இல்ல ட்யூஷன் (என்கிட்ட) சேந்தா என்ன?”, இதேபோல் மாட்டிக் கொள்ளும் பல மாணவர்கள், பலவசைகள், பல சிரிப்பொலிகள். சாரணர் வகுப்பில், தலைகீழாக நின்று  கையாலேயே பல கெஜம் நடந்து அசத்துவார். எளிய மாணவர்களை, மற்ற சாரண ஆசிரியர்களைப் பற்றி, மற்ற பள்ளிகளைப் பற்றித் தூற்றுவார். ஒருமுறை  திருவல்லிக்கேணிப் பள்ளிக்கு ஸ்கௌட் கேம்ப் சென்று திரும்பும்போது சென்ட்ரல்   ஸ்டேஷன் அருகிலுள்ள “சென்ட்ரல் ஸ்போர்ட்ஸ்” கடையில் மாணவர்களை விளையாட்டுப் பொருள்களைத் திருடச் செய்து வாங்கிக் கொண்டார். இந்நேரம் இவருக்கு நல்லாசிரியர் பட்டம் கிடைத்திருந்தாலும் இருக்கும்.

இன்னொரு வாத்தியார்..பத்து வருடத்துக்கப்புறம்,  அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளர். என் வகுப்பிலேயே பெரும்

பணக்காரப்  பெண், அடையாறு பங்களாவில் இருந்து ஐந்து நிமிடத்தில் காரில் வருபவள்; அவள் அக்காவுக்கு நிச்சயதார்த்தம் என்று  சொன்னாள் என்பதற்காக,  இரண்டு மணி நேரம் பஸ்ஸில் நசுங்கி வரும் பல மாணவர்களைப் பற்றிக் கவலைப் படாமல், மாணவர்களுக்குத் தகவல் கூட சொல்லாமல்  ஆண்டுத் தேர்வு  நாளை மாற்றி வைத்தார். சிலமாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

இதுபோல சில ஆசிரியர்கள்.  பெரும்பாலும் ஆசிரியர்கள் மிக நல்லவர்களாகவே இருந்தாலும் யாருக்கும் நீங்கள் பெரிய புராணத்துக்கு விளக்கம் அளித்த அளவுக்கு எதையும் ஆசையுடன் சொல்லித்தர யாருக்கும்  தோதுப்படவில்லை.

அடுத்து பீர் புட்டிகளுக்கு வருவோம். பொதுவாக மென்பொருள் நிறுவனங்கள் தட்டையான கட்டமைப்பைக் கொண்டவை. ஆயிரம் பேர் வேலை செய்யும் நிறுவன CEO மதிய உணவுக்கு, அப்போதுதான் கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்த இளைஞனுடன் சேர்ந்து வரிசையில் நிற்பார். மாதத்துக்கு ஒருமுறை ஏதாவது நட்சத்திர ஹோட்டலில் விருந்து, சேர்ந்து குடிக்க வாய்ப்பு. இந்தத் தட்டையான கட்டமைப்பு இவர்களுக்கு தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்,  பொய்சொல்லி அரசியல் செய்தால் போதும் முன்னேறலாம்  என்ற எண்ணத்தையும், அதன் எதிர்விளைவாக  வேலைபோனாலும் பொய் சொல்லி வேறொரு நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை  என்ற சுதந்திரத்தையும் வழங்குகிறது. “bullshitting and politics are parts of our duty” என்றார் ஒரு மேனேஜர்.

இந்தத் திமிரான சூழ்நிலையில் சேர்ந்து கொள்ளும் அடங்காப்பிடாரித்தனத்துக்கு அதிக சம்பளமும் காரணமாகிறது.  அவர்கள் அலுவலகத்தில் யாரேனும் நேர்மை, அறத்துடன் இருந்துவிட்டால் போதும், எல்லோரும் கும்பலாக சேர்ந்து இஷ்டப்படி கிண்டல் கேலி செய்து, வசைபாடி ‘single out ‘ செய்வார்கள். நீங்கள் ‘எழுத்தாளனாக இருப்பது அவமானகரமானது’ என்றதுபோல நேர்மையாக இருந்ததால் அவமானத்துக்குள்ளாக நேரும். நான் இந்த மேன்பொருளாளர்களிடையில், bonfire நடனத்தின்போது போலாரிஸ் நிறுவனத் தலைவர் அருண் ஜெயினின் ஒரு செருப்பையும், வேறொரு பெண்ணின் ஒரு செருப்பையும் நெருப்பில் போட்ட மென்பொருளாளரிலிருந்து,  கொஞ்சம் அறவுணர்வு கொண்ட, ஆஸ்துமா நோய்கொண்ட ஒரு மென்பொருள் பெண்ணின் முகத்தில் சிகரெட் புகை ஊதி மயக்கமடையவைத்து high – five செய்த கொடூர மென்பொருளாளர்கள் வரை பலரைப் பார்த்து இருக்கிறேன். இதனால் உங்கள் பதிவில் இவர்கள் பீர்பாட்டில்களை  உடைத்ததுக் கொண்டாடியதாக  இருந்தது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

“இவர்கள் அனைவருக்கும் எவ்வித தார்மீகக் கோபமோ, கொள்கை சார்ந்த காழ்ப்புணர்ச்சியோ, ஒரு சாராரின் மேல் கோபமோ கிடையாது. சொல்லப்போனால் இவர்களுக்கு எவ்விதக் கொள்கையும் கிடையாது என்பதே இவர்களின் மிகப்பெரிய பலம்”. இவர்களின் இலக்காக்கப்படுபவர்கள்,எளியவர்கள், அவர்களிடம் வெற்றியாளனாவது, நாயகனாவது  எளிது  என்பதே இவர்களைக் கூட்டமாகச் சேரவும், அதற்கான நகைச்சுவை, கேளிக்கை மற்றும் கொள்கை காரணங்களைப் போர்த்திக் கொள்ளவும் தூண்டுகிறது.

வலியவர் எவரேனும் இவர்களின் இழிசெயல்களில் ஈடுபடாமல் விலகி இருந்தாலும்  “ஒரு மாதிரி அவன்,…  பெரிய மயிருன்னு நினைப்பு” என்றும் அவன் “upper managementl”ல  போட்டுக்குடுத்துடுவான் என்றும் cold-war இலக்காக்கப்படுவார்.

இதற்கெல்லாம் காரணமாக நான் மூன்று காரணிகளை நினைக்கிறேன்:

௧) எளியாரைத்  துன்புறுத்துபவன் , வசைபுரிபவன்,  அதன்மூலம் ரசிகர்களையும், அதிகார விரிவையும் அடைதல்.

௨)  பெற்றோர் அறவுணர்வின்றி , தர்மமின்றி, இறை நம்பிக்கையின்றித் தங்களைப்போலவே வளர்த்தல்

௩) கலாச்சார,  இனக்கலப்பும் அதன்மூலம் வழக்கமில்லாததை, அறமற்றதை எளிதாகப் பிற இனத்திடமிருந்து குற்றவுணர்வின்றி கிரகித்துக்கொள்ளல்.

or it may be plain sadism and mob psychology. உங்கள் பார்வை என்ன?

அன்புடன்,
கார்கில் ஜெய்.

 

அன்புள்ள ஜெய்

பொதுவாக வசை என்பது ஒருவகை இயலாமையில் இருந்தே வருகிறதென நினைக்கிறேன்.  உண்மையிலேயே பலமானவர்கள் வசைபாடுவதில்லை.

நம் சமூகம் பல்வேறுவகையான அழுத்திவைக்கப்பட்ட உணர்வுகளால் ஆனது. அவை வசைகளாக வெளிவருகின்றன.

இந்தச் சூழலில் என்னாகிறதென்றால் சமநிலையுள்ள, அர்த்தபூர்வமான விவாதங்கள், மறுப்புக்கள், விமரிசனங்கள்கூட நிகழ முடியாமலாகிறது. அவையும் வசைகளாகவே பார்க்கப்படுகின்றன

ஜெ

வசைகள்

முராத்தியின் பீர்புட்டிகள்

பீர்புட்டியும் கம்ப்யூட்டரும்-கடிதம்

ஒரு தற்கொலை

முந்தைய கட்டுரைகல்வி -இன்னொருகடிதம்
அடுத்த கட்டுரைசுஜாதா-கடிதம்