உணர்வின் ஆழத்திலிருந்து ஒரு மடல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இக்கடிதத்தை கூதல் நுண்மாரி துளி தூங்கும் குற்றாலம் என‌ சம்பந்தர் பாடிய குற்றாலத்திலிருந்து எழுதுகிறேன். நான் மூன்றாம் ஆண்டு இளங்கலை பொருளியல் பயிலும் மாணவன். கடந்த வாரம் நிகழ்ந்த சாரல் திருவிழா புத்தகக் கண்காட்சியில் தங்களது வெள்ளை யானை, கொற்றவை ஆகிய இரு நூல்களையும் வாங்கினேன். வெள்ளை யானை படித்த போது தாதுப் பஞ்சத்தின் கோரத்தைக் கண்ட நடுக்கம் ஏற்பட்டது எனில், கொற்றவை நான் தேடிய பேரெல்லையை எனக்குக் காட்டியது. பல்வேறு வரலாற்று நூல்கள் படிக்கும்போது நான் சிந்தித்துள்ளேன். வரலாற்றின் மூலம் எதுவென்று.  எத்தனை பழமையானதாக இருந்தாலும் கூட,

அதனினும் தொன்மையான யுகங்கள் உண்டு என்று எண்ணி எண்ணி பரவசமடைந்தது உண்டு.

ஆனால், கொற்றவையை வாசித்த போது அது நூலல்ல காலங்களை இணைக்கும் மாயப் பெரும் சரடு என்பது போன்ற வியப்பு ஏற்பட்டது.

புருஷ சுக்தம் சொல்கிறது ஆயிரம் தலைகள் உடையவன் புருஷன் என்று. அவன் அளவிட முடியாதவன் என்று.  அறிய முடியாமையைத் தான் அது அவ்வாறு வர்ணிக்கிறது. அறியமுடியாதப் பெரும்சக்தியயையே நாம் கடவுள் என்கிறோம். அறிய முடியாமையின் நிறம் நீலம் எனத் தொடங்கும் கொற்றவை பின் அறிந்தவற்றின் உதவியுடன் அறிய முடியாத அறிவை விளக்க விழுகிறது. எத்தனை ஆழம் இந்நூலில். தெரிந்தே மூழ்கினேன். முத்தெடுக்க.

இரிங்ஙோள் காவு

நான் இந்நூலில் படித்துக் கரைந்த மற்றொரு தத்துவம் அன்னை. நான்மறையும், உபநிஷதமும்,  சுத்ரங்களும் அன்னையின் பெருவிளையாட்டைத் தான் மாயா என்கின்றன.  மாயை நிகழ்த்துவதால் தான் அவள் மஹாமாயா எனப் போற்றப் படுகிறாள். மஹாமாயா என்று அன்னையைப் போற்றிப் புகழாத சமயநூலலே இல்லை எனலாம்.

மஹாமாயா மஹாஸத்வா என்கிறது லலிதா ஸஹஸ்ரநாம சுலோகம் ஒன்று. ஆதிசிவனையே அன்னை தான் படைத்தாள் என்பது புராணம். அன்னை அருந்தவம் ஆற்றும் குமரி முனையிலிருந்து கொற்றவை தொடங்குவது காலம் அன்னையின் பாத கமலங்களிலிருந்து தான் துவங்குகிறது என்பதன் குறியீடாகக் கருதலாம். அன்னை தான் மும்மூர்த்திகளையும் படைத்தாள் என்கிறது தேவி மஹாத்மியம். அப்படிப் பார்த்தால், கொற்றவையை ஓர் சாக்த நூல் என்று கூடக் கூறலாம். ஏனென்றால், கதையின் அனைத்து நிகழ்வுகளும் அன்னை எனும் மையப் புள்ளியோடு தொடர்புடையதாக உள்ளன. நான் பாடபுத்தகங்களளிலும், பின் ஆர்வத்தின் பேரில் இணையத்திலலும் வாசித்த சிலப்பதிகாரம் கண்ணகி மதுரையை எரித்த  கதை எனில் கொற்றவை எரிக்கப்பட்ட மதுரையின் கதை எரித்த நெருப்பின் கதை. கண்ணகியின் பெருவாழ்வு ஓர் காப்பியம் எனில், அவள் தெய்வமான சேர நாட்டில் அவள் இன்றும் பகவதியாக அருள்கிறாள் என்பது அன்னையின் அழியாப் பெரும் புகழைக் குறிக்கிறது.

நான் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவன் என்பதால் பகவதி வழிபாடு பற்றிச் சற்று தெரியும்.  ஆற்றுக்கால் அம்மை கண்ணகியின் வடிவம் எனக் கேட்டுள்ளேன். கண்ணகியம்மன் தான் பகவதி எனப் பெயர் கொண்டு அருள் அளிக்கிறாள் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழில் படித்த ஞாபகம். கேரளத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் கண்ணகியின் கதை பொது மக்கள் காப்பியம். பெரும்பாலான மக்கள் அவள் மதுரையயை எரித்த கதையை நன்கு அறிவர். ஆனால்,

இங்கு அவள் இளங்கோ அடிகளின் கதை நாயகி. அங்கே,  அவள் அன்னை பகவதி. கேரளா முழுவதும் பரவலாக வணங்கப்படுபவள் அவள். அதிலும், வட கேரளத்திலும்,  மத்திய கேரளத்திலும் அவள் காவு எனப்படும் காட்டின் நடுவே வீற்றிருக்கிறாள். சமீபத்தில் இரிங்கோள்காவு பகவதி அம்மன் கோயில் செல்லும் பேறு கிடைத்தது. பெரும்பாவூர் நகரிலிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ளது இக்காவு. ஆனால், உள்ளே நுழைந்ததும் பெருவனத்தின் கருப்பைக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. வட்ட வடிவமான நாலம்பலம். சுற்றி பிரகாரம். நான்கு புறமும் வானளாவிய மரங்கள். பெரும் புதர்கள். காலை வெயில் கூடப் புக முடியாத அளவிற்கு செழித்த வனம். அட்டைகளின் தாய் நிலம். ஒவ்வொரு அட்டையும் தேர் வடத்தின் பாதி தடித்திருந்தது. நான் வட கிழக்கில் வசித்த போது கூட இத்தனை பெரிய அட்டைகளளைப் பார்த்ததில்லை. பகவதி சிறிய மூர்த்தியாக அருள் பாலித்தாள். கருவறையயைப் பார்த்ததும் என் நா முணுமுணுக்கக் கேட்டேன் மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா கதம்ப வனவாஸினீ என்று. ஆம். அவள் அறிய முடியாத அரியவள். அவள் பெருவடிவு கொண்ட கொற்றவை. எனவே தான் அளவிட முடியாத அமைதி உறையும் அடவியில் உறைகிறாள். தன் நிலத்தில் வாழும் சிறு அட்டைக்குக் கூடப் பாலூட்டுகிறாள் என்று.

இரிங்ஙோள் காவு

அன்று எழுந்த கேள்விகளுக்கு விடை கொற்றவையை வாசித்ததும் கிடைத்தது. சாந்த சொரூபிணியாக ஆற்றுக்கால் அம்மையும், உக்ர ரூபிணியான கொடுங்கல்லூர் அம்மையும் நம்மைக் காக்கிறார்கள். நம்மை ஆள்கிறார்கள். இன்னும் எழுத வேண்டும் என்று எண்ணம். ஆனால், அகத்தில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் மாலையாகக் கோர்க்கும் சக்தி என் எழுத்துக்கு இன்னும் வரவில்லை. எனவே இத்துடன் முடிக்கிறேன்.

இம்மடலை எழுத முடிந்ததில் பெருமகிழ்ச்சி. வியாசரோடு அமர்ந்து பாரதத்தைப் பற்றி ஆய்வது போல ஜெயமோகனனிடமே கொற்றவை பற்றி எழுத முடிந்தது பெரும் பேறு. திருப்பதிசாரத்தில் உள்ள எங்களது பண்ணைக்கு வரும் போது தங்களை தங்களது இல்லத்தில் வந்து காணும் பேறு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பணிவுடன்

அருண் நாராயணன்

குற்றாலம்.

***

அன்புள்ள அருண் நாராயணன்,

நலம்தானே?

கொற்றவை மீதான உங்கள் வாசிப்பு மகிழ்வளிக்கிறது. அந்நாவலின் வடிவ அனுபவம், மொழியனுபவம் ஆகியவற்றை கடந்து அது அளிக்கும் அக அனுபவம் ஒன்றுண்டு. அது ஓர் ஆன்மிகநிலை. இங்கிருந்துகொண்டு நினைப்புக்கெட்டாத நம் தொன்மைநோக்கி, நம் தெய்வங்கள் தோன்றிய கணம் நோக்கி, நம் கற்பனையை எய்வதுதான் அது. அதை நிகழ்த்தியிருக்கிறீர்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரைவிருதுகளும் எதிர்ப்புகளும் -சந்திரா
அடுத்த கட்டுரைதிருவாக்கு புராணம்