களிற்றியானை நிரை- வருகை

களிற்றியானைநிரை வாங்க

அன்புள்ள ஜெ,

களிற்றியானை நிரை செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். நன்றி!

இந்நாவல் வெண்முரசு வாசகர் கூட்டங்களை நடத்தும், வெண்முரசைப் பரவலாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயரை நாவலில் உங்கள் முன்னுரையில் காண மகிழ்ச்சியாக இருந்தது.

அட்டையில், எழும் யுகத்திற்கான அறிவிப்பைப்போல கவசஉடை அணிந்த சம்வகையின் வண்ணப்படம். சம்வகை ஒருவகையில் தற்போதைய இந்தியப் பெண்களையும் பிரதிபலிக்கிறாள்.வலிமை கொண்டு எழுந்து வரும் பெண்கள் ராணுவத்திலும் அரசிலும் தங்களுக்கான இடத்தை எடுத்துக்கொள்ளும் வலுவான குறியீடு.

அழிவிற்குப்பின் அஸ்தினாபுரியும் பாரதவர்ஷமும் மீண்டெழும் சித்திரத்தை அளிக்கும் நாவல், அரசுகளும், குலங்களும், வணிகமும், நகரங்களும், ஊர்களும், தொல்கதைகளும் என எல்லாம் எப்படித் தங்களுக்கான தொடர்ச்சியைப் பேணிக்கொள்கின்றன என விவரிக்கிறது. இறுதியில் அந்தணர்களால் நெய்யூற்றிக் கொளுத்தப்பட்ட சார்வாகரின் கோலும் தீக்ஷணனை அடைந்து தொடர்கிறது.

பாண்டவ சகோதரர்கள் பாரதத்தின் நான்கு திசைகளிலும் இருந்து கொண்டுவரும் பரிசுகளும் அவற்றைப்பற்றிய கதைகளும் ஒவ்வொரு வகையில் யுதிஷ்டிரரை அலைக்கழிக்கின்றன. அர்ஜுனன் கொண்டுவரும் புற்குழல் பீஷ்மருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தக்குழலைக் கொடுத்த பூசகனின் சொற்கள்:

“எங்கள் நிலத்தை ஆள்பவர் தன் சாவைப்பற்றி அறிந்திருக்கவேண்டும். தன் வாழ்வின் மெய்மையை அறிந்தவரே தன் சாவை அறிந்தவர். அவருக்கு அச்சொல் தெரிந்திருக்கும். எவர் ஒரு சொல்லை உரைத்து அச்சொல்லை அந்த வானம்பாடி மீளச் சொல்லவில்லையோ அவரே மேருநிலத்தை ஆளும் தகைமைகொண்டவர். தெய்வங்களுக்கு உகந்தவர். அவரை வணங்குக! அவருக்கு அடிபணிந்து கோல் அளித்து அழைத்துவருக! என்று தெய்வம் கூறியது. ஆகவேதான் வந்தேன்.”

பீஷ்மர் தன் இறுதிச் சொல்லை உரைத்து உயிர்நீப்பதன்மூலம் மேருநிலத்தை ஆளும் தன் தகைமையை நிறுவிச்செல்கிறார்.

துரியோதனனின் பெரும் ஆளுமை வெண்முரசில் பல இடங்களில் அழுத்தமாகக்  காட்டப்பட்டுள்ளது. இதிலும், சத்யபாமைக்கும்  சாரிக்கருக்கும் இடையிலான பின்வரும் உரையாடலில் ஒரேவரியில் அது மிகவும் உணர்ச்சிகரமாக வெளிப்படுகிறது:

சாரிகர் “அரசி…” என்று தயங்கியபடி அழைத்தார். “அங்கே மறைந்த பேரரசர் துரியோதனனின் மகள் லக்ஷ்மணை ஆட்சி செய்கிறார் என்றீர்கள். அவர் தன் தந்தையரைக் கொன்று அஸ்தினபுரியை வென்று ஆளும் யுதிஷ்டிரன் மீதும் இளைய யாதவர் மீதும் கடுஞ்சினம் கொண்டிருப்பதாகவும் சொன்னீர்கள்” என்றார். “இக்குழவி பாண்டவர்களின் எஞ்சும் துளி. இது அழிந்தால் பாண்டவர்களின் கொடிவழி அறுந்து போய்விடும்.” சத்யபாமை “நீர் எண்ணுவதென்ன என்று தெரிகிறது. இக்குழவிக்கு கிருஷ்ணையால் தீங்குவரக்கூடும் என்றா?” என்றாள். “அவர் நேரடியாக தீங்கிழைக்க வேண்டியதில்லை. இப்போது உரியவை அனைத்தையும் செய்யாமலிருந்தால், செய்வனவற்றை சற்றே பிந்தினால், நேரடியாக ஈடுபடாமல் தவிர்த்துவிட்டால்கூட இம்மைந்தன் வாழமாட்டான்” என்றார் சாரிகர்.

பெருமூச்சுடன் “உங்கள் ஐயமும் அச்சமும் புரிந்துகொள்ளற்குரியதே” என்று சத்யபாமை சொன்னாள். “அவளுடைய வஞ்சம் இயல்பானது, ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்.” அவள் முகம் ஒளிகொண்டது. புன்னகை இன்றி ஒரு முகத்தில் ஒளியெழுவதை அப்போதுதான் சாரிகர் கண்டார். “ஆனால் இப்புவியில் எந்தக் குழந்தையையும் ஈன்ற அன்னையிடம் என நம்பி ஒப்படைப்பதென்றால் அது கிருஷ்ணையிடமே. முற்றெதிரியின் குழந்தையே ஆயினும். ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்” என்றாள் சத்யபாமை. அவர் மெய்ப்புகொண்டு அறியாமல் கைகூப்பினார். 

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

முந்தைய கட்டுரைசுவாமி பிரம்மானந்தருடன் தங்க அழைப்பு…
அடுத்த கட்டுரைகவிதைகள் இணைய இதழ், ஆகஸ்ட்