தூரன் விருது விழா, 2022 – தொகுப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இன்னொரு மனநிறைவான விழாவாக அமைந்தது தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது விழா. விஷ்ணுபுரம் விருது விழாவைப் போன்றே வாசகர் எண்ணிக்கையும் அமர்வுகளும் அமைந்து விட்டது. அடுத்த ஆண்டு முழுமையாக இரண்டு நாட்கள் தேவைப்படும் போல் தெரிந்தது.
முதல் நாள் பிரம்மானந்த சுவாமி அவர்களின் முதல் அமர்வு விழாவிற்கு துறவி ஒருவரின் ஆசிகளைப் போல் அமைந்தது. ஞானம் குறித்த கேள்விக்கு knowledge அனைத்தும் புறவயமானது என்றார். அஹம் பிரம்மாஸ்மி என்பது குறித்த பெளத்த தரப்பின் விமர்சனத்தையும் அது உண்மையில் எவ்வாறு ‘நான்’ அற்று இயல்பை மட்டுமே சுட்டுகிறது எனக் கூறியது இதுவரை நான் அறியாத கோணம். மலேசியராகத் தன்னை உணர்ந்து இந்திய-தமிழ்நாடு சார்ந்த ஆன்மிகத் தன்மைகளின் வேரை விட்டுவிடாதவராகவே தெரிந்தார் சுவாமி பிரம்மானந்தர்.
மறுநாள் காலை நடையின் போது சித்தோடு பறவைகள் சரணாலயம் சென்ற போது அங்கு ticket counterல் இருந்தவர் நாம் எதற்காக வந்திருக்கிறோம் அந்த நிகழ்ச்சி என்ன என்பது குறித்தெல்லாம் ஆர்வமாகக் கேட்டறிந்தார். ரைட்டர்ஸ் மட்டும் தான் வருவாங்களா என்றார் இல்லை யார் வேண்டுமானாலும் வரலாம் மாலை நிகழ்ச்சிக்கு அவசியம் வாங்க என்றேன். வார இறுதி நாட்கள் தொடர் விடுமுறை போன்ற காரணங்களால் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பலர் பயணம் சார்ந்த சிரமங்களையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.
இரண்டாம் நாளின் முதல் அமர்வு அ.கா. பெருமாள் அவர்களுடையது. இவரது நூலான சுசீந்திரம் கோவில் வரலாறு மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். நாட்டாரியல் கோயில் மற்றும் மரபுகளை இந்தியர்கள் ஆராயும் போது முதன்மையாக அதன் மீது கொண்ட பற்றின் காரணமாகவே அதைச் செய்கிறார்கள் என்றார். ஆய்வுகளின் அடிச்சுவட்டைக் கூட அறிந்திராத எனக்கு அவரின் பதில்கள் திகைப்பையும் இந்தத் துறை சார்ந்து கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
அடுத்த அமர்வு பேராசிரியர் லோகமாதேவி அவர்களுடையது. மிகவும் charged ஆக இருந்த அமர்வு இது தான். புறவயமான தாவரவியல் ஆய்வு மற்றும் அதன் பெயர்களை நினைவில் இருத்தி வைப்பது எந்த வகையிலும் ரசனை சார்ந்த அதன் அகவயமான தொடர்பை பாதிப்பதில்லை என்றார். ஒரு மாத காலம் வெளியூர் சென்று திரும்பிய பின் பிறரால் பாதுகாக்கப்பட்டும் தன் கவனம் இன்றி வாடிய செடியைக் குறித்து கூறியது உணர்வுப்பூர்வமாக தாவரங்களுடன் நமக்கு உள்ள உறவை சுட்டியது.
நான் பொதுவாக செடி கொடிகளைப் பார்த்தால் என்னையும் அறியாமல் சிறிது நேரம் அவற்றை தடவிக் கொடுப்பேன். ஆனால் ஒரு நாயின் தலையை தடவுவதில் எனக்கு பெரிய ஆர்வம் ஏற்பட்டதில்லை. பல்வேறு வகையான உயிர்களுடன் நமக்குள்ள தொடர்பு மிகவும் பிரமிப்பானது. தாவரங்கள் நமக்கு உணவாகவும் ஊட்டமாகவும் கூட மாறுவதால் அதனுடனான நமது அன்றாட அணுக்கத்தின் அடிப்படையிலேயே பல கேள்விகள் அமைந்தன.
இந்த அமர்வுகள் அனைத்தும் இலக்கியம் எவ்வாறு அவர்கள் சார்ந்த துறையை செழுமையுறச் செய்கிறது என்பதற்கான அத்தாட்சி. லோகமாதேவியின் தர்ப்பை ஆன்மிகம் தொன்மம் நவீன அறிவியல் உள்ளிட்ட பல தளங்களை ஊடுருவிச் செல்லும் சிறப்பான கட்டுரை. Hallucinogens குறித்த ஒரு ‘ஹை என்ட்(‘high end) குறிப்புடன் 15 நிமிடங்கள் கூடுதலாக நீடித்த அந்த பெரும் அமர்வு முடிவுக்கு வந்தது.
உணவு இடைவேளைக்குப் பின் மகுடீசுரன் அவர்களின் அமர்வு அந்தப் பகுதியின் தனித் தன்மைகளை தொட்டுச் சென்றது. பிறகு சிறப்பு விருந்தினர் கரசூர் பத்மபாரதி அவர்களின் அமர்வு. அமர்ந்து பேசுவதில் தனக்குள்ள தயக்கத்தைக் கூறி நின்றவாறே பேசினார். நாம் அன்றாடம் பார்ப்பவர்கள் ஆனால் அழுக்கானவர்கள் என விலகிப் போகும் ஒரு சமூகம் குறித்து அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்தும் கூறினார். அது ஒரு பெரும் ஆய்வாக மலர்ந்து நரிக் குறவர்கள் பற்றிய தரமான ஒரே நூலாக தமிழில் நமக்கு கிடைத்திருக்கும் நூல் அவரின் கள ஆய்வு.
மாலை நேர நிகழ்ச்சியில் திரு விஜயபாரதி, திருமலை, சந்தோஷ் மற்றும் மதுசூதன் ஆகியோர் தமிழ் விக்கி பணிக்காக கெளரவிக்கப்பட்டது நெகிழ்வூட்டக் கூடியதாக இருந்தது. ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் உரையில் இலக்கியலாளர்கள், நரிக்குறவர் போன்ற ஒரு சமூகத்தினரைக் குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் அந்த வேலையை முதலில் செய்தது ஆய்வாளர் பத்மபாரதி தான் என்றார்.
தமிழ் விக்கியின் இன்றைய தேவை அது உருவான விதம் குறித்து விளக்கிய போது இன்று குறை கூறுவோருக்குக் கூட கலை இலக்கியம் சார்ந்த பயன்பாட்டில் விக்கி தவிர்க்க முடியாத இடம் பிடிக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
கரசூர் பத்மபாரதியின் உரை மிக நேரடியானதாக நீண்ட காலம் பழகிய ஒரு தோழரின் உரை போல் அமைந்திருந்தது. கணமான விருது உலோகத்தை கையில் தூக்கிய போது சற்று கெதக் என்று தோன்றியது. தன் விருது பணத்தை இனிமேலான ஆய்வுக்கே செலவிடப் போவதாகக் கூறியது நெகிழ்வுறச் செய்வதாக இருந்தது. விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை சோடை போனதில்லை. பெரியசாமி தூரன் பெயரில் வழங்கப்படும் இந்த விருதும் மிகச் சரியான நபர் ஒருவரின் கைகளுக்கே சென்று சேர்ந்திருப்பது மிகவும் நிறைவை அளித்தது.
நாளை மற்றொரு நாளே என்பது இருத்தலியல் சார்ந்த சலிப்பு ஒவ்வொரு நாளும் கணமும் புதியது என்பது பின்நவீனத்துவ இருத்தலியல் முடிபு. ஆனால் செயலாக வெளிப்படாத எதுவும் மதிப்பற்றது தான் அத்தகைய செயலூக்கம் கொண்ட நண்பர்கள் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் சென்னை செந்தில் அவர்கள் மற்றும் இன்முகம் மாறா முகத்துடன் வந்தோரை கவனித்துக் கொண்ட அழகிய மணவாளன் ஆகியோருக்கு நன்றிகள்.
அரசுகள் சில கோடி ரூபாய் செலவழித்தாலும் இத்தகைய உளப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்துவது சாத்தியமல்ல. சாத்தியமற்றதை சாத்தியமாக்குவது ஜெவை ஊக்கமாகக் கொண்டு ஒருமுனைப்பட்ட நோக்குடன் மிக எதிர்மறையான நம் சூழலிலும் நிகழ்த்தப்படும் இத்தகைய நிகழ்வுகள்.
மனதில் இருந்து அகலா விழா நினைவுகளுடன்
சிவக்குமார் ஹரி
சென்னை