ஈரோடு, தமிழ் விக்கி தூரன் விருது விழா
என்னைப் பொறுத்தவரை தமிழ் விக்கி – பெரியசாமித்தூரன் விருது விழா 13 ஆகஸ்ட் 2022 காலையிலேயே தொடங்கிவிட்டது. நண்பர்களுடன் மலைத்தங்குமிடத்தில் இருந்தேன். அங்கிருந்து காலையில் கிளம்பி ஈரோடு வந்தேன். அரங்கு அணிகொண்டிருந்தது. நகர் முழுக்க விளம்பரத்தட்டிகள். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் விருதுவிழா அளவுக்கே எல்லா வகையிலும் விழா பெரிதாகிவிட்டது.
ராஜ்மகால் அரங்கிலேயே அறைகள் இருந்தன. அங்கே வந்து சேர்ந்தபோது நண்பர்கள் கூடியிருந்தனர். மிகவிரைவாக அரங்கு நிறைந்தது. நூறுபேர் இரவு தங்குவதற்காக வந்துவிட்டிருந்தனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகள் கொஞ்சம் குறைவுதான். ஆனால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இலக்கியத்தை ஒரு கொண்டாட்டமாகவே எடுத்துக்கொள்ளும் ஒரு வட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். ஈரோட்டில் வசதியான அறை போடப்பட்டிருந்தது என்றாலும் சுவாமி பிரம்மானந்தர் உட்பட அனைவருமே கல்யாணமண்டபத்தில் தங்குவதையே விரும்பினர். இங்கிருந்த கொண்டாட்ட மனநிலை அத்தகையது.
மாலை சுவாமி பிரம்மானந்தரின் நேர்ச்சந்திப்பு அரங்கு. தாமரைக்கண்ணன் ஒருங்கிணைத்தார். நூற்றைம்பதுபேர் கொண்ட அரங்காக அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஐம்பதுபேரையே எண்ணியிருந்தோம். ஆகவே அதற்காக தனி ஏற்பாடுகளை கடைசிநேரத்தில் செய்யவேண்டியிருந்தது. கேள்விபதில்கள் மலேசிய இலக்கியம், சுவாமியின் ஆன்மிகத்திற்கும் சமூகச்செயல்பாட்டுக்களத்துக்குமான உறவு என பல தளங்களில் நீண்டன.
அதன்பின் கௌதம சித்தார்த்தனின் ‘அங்கே இப்போது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?’ என்னும் அறிபுனைவு நூல் வெளியிடப்பட்டது. கௌதம சித்தார்த்தனின் ஆசைப்படி அஜிதன் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். ஆரூரன் கௌதம சித்தார்த்தனை கௌரவித்தார்.
அதன்பின் நான் தமிழ் விக்கி பற்றிய கேள்விபதில் அரங்கொன்றில் பேசினேன். கேள்விகளில் நான் சொன்ன கடுமையான பதில் ஒன்றே. தமிழ்விக்கி கலைக்களஞ்சியப் பணி தொடங்கியபின் வெளியே இருந்து வந்த ஆலோசனைகளில் கருத்தில் கொள்ளத்தக்க எவையேனும் இருந்தனவா என்பது கேள்வி. நூறு சதவீத முட்டாள்தனம் தவிர எதையும் எவரும் வெளிப்படுத்தவில்லை, தொண்ணூற்றொன்பது சதவீத முட்டாள்தனமான ஆலோசனை ஒன்று வருமென்றுகூட நான் எதிர்பார்க்கவுமில்லை என பதில்சொன்னேன்.
ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு கலைக்களஞ்சியம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு கலைக்களஞ்சியத்தை பார்த்தவர்களே அரிதினும் அரிதானவர்கள். சிறந்த ஆலோசனைகள் வந்தது முழுக்க உள்வட்டத்தில் இருந்தே. ஏனென்றால் அவர்கள் உள்ளே வந்து வாசித்து, கவனித்து, தங்கள் அவதானிப்பில் இருந்து ஆலோசனைகளை வழங்கினர். வெளியே இருந்து வந்தவை எல்லாம் ‘நானும் ஒரு ஆளுதான்’ என்ற ஒற்றை வரியை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தும் அசட்டுத்தனங்கள். அவர்கள் எவரும் ‘ஆள்’களும் அல்ல.
கூடுமானவரை சிறு விழாவாக நடத்தவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். செலவு குறைவாக நிகழும் விழா. நண்பர் வழக்கறிஞர் செந்தில்குமாரின் கல்யாணமண்டபம் இலவசமாக அளிக்கப்பட்டது. ஆனால் நூறுபேர் இரண்டுநாள் தங்கி, பேசி கொண்டாடும் விழாவாக, கோவை விஷ்ணுபுரம் விழாவுக்கு நிகரானதாக ஆகிவிட்டது.
அரங்க ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தன. மண்டபமும் பெரியது. வசதியானது. உணவுச்செலவுகள், மற்றசெலவுகள் என கண்ணெதிரில் ஒரு கல்யாணப்பரபரப்பு. செலவுதான். ஆனால் நண்பர்கள் இருக்க பயமில்லை.
இதுவும் விஷ்ணுபுரம் விழாவுக்குரிய முழுமையான திருவிழாத் தன்மையுடன் உள்ளது. நூற்பு துணிகளுக்கான கடை. தன்னறம், தமிழினி, விஷ்ணுபுரம் பதிப்பகங்களுக்கான புத்தகக் கடைகள். இரவுமுழுக்க அரட்டை. இலக்கியப்பகடிகள்…
https://www.facebook.com/vishnupuram.vattam