கரசூர் பத்மபாரதி, ஒரு கடிதம்

(பழைய மின்னஞ்சல்களில் இதைக் கண்டேன். 10 செப்டெம்பர், 2015ல் இக்கடித உரையாடல் எனக்கும் மறைந்த கவிஞர் குமரகுருபரனுக்கும் இடையே நடந்துள்ளது. குமரகுருபரன் இன்று இல்லை. அவர் பெயரில் ஒரு விருது வழங்குகிறோம். கரசூர் பத்மபாரதி இப்போது எங்கள் விருதைப் பெறுகிறார். ஏழாண்டுகளில் வாழ்க்கை என்னென்ன ஆகிவிட்டிருக்கிறது)

அன்புள்ள ஜெமோ,

நலம். அடுத்த வெண்முரசு நாவலுக்கான இடைவெளியில் இருக்கிறீர்கள். நலம் பேண விழைகிறேன்.

காலம் இதழுக்கு தாங்கள் குறிப்பிட்டதாகச் சொல்லி என்னிடம் கவிதைகள் கேட்டிருக்கிறார்கள். அனுப்பி வைப்பதாக சொல்லி இருக்கிறேன்.

எனினும், இந்த கடிதம் அதைக் குறித்து அல்ல.

உங்களுடைய அபுனைவுகள்,கருத்துக்கள் எப்படி சில சமயங்களில் மிக விநோதமாக அமைந்து விடுகின்றன  என்பதைப் பற்றி நான் நிறைய எழுதியும், பேசியும் இருக்கிறேன், சமூக ஊடகங்களில்.

இன்றைய உங்களுடைய அப்படிப்பட்ட பதிவு அந்திமழை பற்றியதும், உயிரெழுத்து பற்றியதும், சில தனி மனிதர்கள் குறித்தும்.

உங்களுடைய அக்கட்டுரை அல்லது ரத்த அழுத்தம் ஏறியதன் எதிர்விளைவு தவறு என விவாதிக்க இங்கே நான் முற்படவில்லை.

அவர்கள் சார்பாகவும் இதை முன்னிறுத்தவில்லை.

விமர்சனங்கள் இயல்பானவை. அதை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், அவர்கள் எதிர்கொள்வார்கள்.

நான் உங்களிடம் மட்டுமே இக் கேள்விகளை உரிமையின் பொருட்டு வைக்க விரும்புகிறேன்.

  1. உயிரெழுத்து கதைகள் குறித்தும், அந்திமழை பட்டியல் குறித்தும் நீங்கள்  எழுப்பி இருக்கிற வினாக்கள் விவாதிக்கப் படவேண்டியவை. ஆனால்,உங்களுடைய இக்கட்டுரை ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் தொனியில் அமைந்திருக்கிறதா?
  2. அந்திமழை மாதிரி ஒரு கேனத்தனமான பத்திரிகை இல்லை, என்கிறீர்கள், அதற்கு இந்த இதழில் அவர்கள் வெளியிட்டு இருக்கும் பட்டியல் காரணமா? இல்லை, அதன் தொடர்ந்த செயல்பாடுகளா?
  3. உயிரெழுத்து, அதன் கதைகள், பிற படைப்புகள் உட்பட வாசிக்கமுடியாததாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள். வாசிக்கமுடிந்த தங்களுக்கு மிகவும் உகந்த பத்திரிகை ஒன்றை உதாரணம் காட்டி இதை தெளிவாக்க இயலுமா?
  4. அந்திமழையின் பட்டியல் என்பது அந்திமழையின் பட்டியல். அவர்களது தேர்வு. அதன் தேர்வில் இடம் பெற்ற இரு தனிநபர்கள் குறித்த உங்களுடைய அக்கறை விவாதத்துக் குரியது. அது தனிப்பட்ட விமர்சனம் ஆக அவர்களை குறி வைத்திருக்கிறது. பட்டியலில் பார்த்து விட்டு, அவர்களைத் தேடி நீங்கள் படித்து விமர்சனம் வைக்கிற அளவுக்கு, அவர்கள் இன்னமும் தமிழ் கலை, ஊடக, சமூக ஊடகச் சூழல்களை பாதிக்க ஆரம்பிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். இன்றைய விகடன் இதழில் இசை என்கிற கொண்டாடப் படுகிற, உங்களாலும் மதிக்கப்படுகிறவர் எழுதி இருக்கும் பூர்ணிமா பாக்யராஜ் கவிதையைக் காட்டிலும் மோசமான கவிதை ஒன்றை இதுவரை கடங்க நேரியான் எழுதவில்லை. தவிர,அவர் தன்னை, தமிழின் ஆகச்சிறந்த கவிஞன் என்றும் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. அவரை, அந்திமழை தேர்ந்தெடுத்ததும் அவருடைய கவிதைகளுக்காக இல்லை. இலக்கியத்திற்கான அவரது களப் பணிக்காகவே அவரை அந்திமழை தேர்ந்தெடுத்து இருக்கிறது என்று அறிகிறேன். அதில்,குறை ஒன்றுமில்லை. அடுத்து, அந்த ட்வீட்டர் பெண்.
  5. அந்த ட்வீட்டர் பெண் செய்கிற விஷயம் சமூக ஊடகத்தில்தனது கருத்து என்று ஒன்றை வைக்காமல், சிறந்த கருத்துகளை ரீ ட்வீட் செய்வது மட்டுமேஉண்மையில் கருத்து சொல்பவர்களும் ட்வீட்டரில் அதைத் தான் செய்கிறார்கள். முகநூலுக்கும், ட்விட்டருக்கும் ஆன வேறுபாடே அது தான். உலகின் அத்தனை கருத்து சொல்லும் இடத்தில் இருப்பவர்களும் புழங்கும் இடம் அது தான். அதை மறுமுறை பிரதிபலிப்பது அத்தனை குற்றம் இல்லை. ஆயிரம் டைம் பத்திரிகை மாதிரி ட்விட்டர். அந்தப் பெண்ணுக்கு பாலோயர்கள் இருப்பது அதிசயமில்லை. அவர்கள் உண்மையில் அப்பெண்ணிற்கு பாலோயர்கள் இல்லை, மற்ற சிறந்த கருத்து சொல்பவர்களுக்கு. அதையெல்லாம், விடுங்கள், கருத்து சொல்லாமல் கக்காவே போகாதோ என்கிற அளவுக்கு, கருத்துக் குமுறிகள் நிறைந்த இந்த சமூக ஊடகத்தில் கருத்து சொல்லாக் குமரி ஒருவரை அந்திமழை தேர்ந்து எடுத்ததில் என்ன பிழை? :)
  6. உங்களுடைய விமர்சன பாணி, அதன் கட்டுரை நீளம், அகலம், ஆழம் என்று ஒன்றிருக்கிறது. இப்பதிவு இப்படி அரைகுறை மூதி போல் நீங்களே சொன்ன மாதிரி பிபி வந்தவரின் ஆத்திரத்தைப் போல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

முழுமையாக சொல்லவந்ததை நிறுவி, விமர்சனம் செய்ய மட்டுமே நீங்கள் தேவை. அரைகுறையாக ஆட எப்போதும் நாங்கள் இருக்கவே இருக்கிறோம், எல்லா இடங்களிலும், சமூக ஊடகங்களிலும்.

அன்பும், நன்றியும்.

குமரகுருபரன்

jkumaragurubaran

***

அன்புள்ள குமரகுருபரன்

நீங்கள் சொல்வது உண்மை. அக்குறிப்பு சமநிலையில்லாததாகப்போய்விட்டது.

அதை எழுதும் மனநிலை அத்தருணத்தையதுகரசூர் பத்பாரதியின் ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதிக்கொண்டிருந்தேன். எத்தனை மகத்தான உழைப்பு. ஆனால் ஒரு நாலுவரி எந்த இதழும் எழுதுவதில்லை என எண்ணியபடி பத்திரிகையைப்பார்த்தால் டிவிட்டர் கிளுகிளுப்பு எழுதும் பெண் நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார்கள். இந்த வேறுபாடு, இதிலுள்ள பொறுப்பில்லாமல் ஒரு பெரிய கசப்பை உருவாக்கியது. அவ்வளவுதான்.

இனிமேல் கவனமாக எழுதுகிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைசொல்லப்படாதவற்றின் கவி
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது – வலைதளம்