வாக்ரி- கடலூர் சீனு

இனிய ஜெயம்,

ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த கால கட்ட சூழல் குறித்து வாசிக்கையில் பல சித்திரங்கள் துனுக்குற வைக்கின்றன. அவர்களுக்குள் நிலம் பிடிப்பதில் அடிதடி. பல ஆசாமிகள் அவர்களிடையே ஊர்களையே வாங்கி விற்று பெரும் பணத்தை கப்பலில் சுமந்து சொந்த ஊர் சென்றிருக்கிறார்கள். உதாரணமாக புதுவை த்யுப்ளெக்ஸ் போலவே பிரான்சில் இருந்து ஒரு பெர்னாண்டஸ் கிளம்பி வந்து மொத்த மதராச பட்டனத்தையும் வெற்றி கொள்கிறான். த்யுப்ளெக்ஸ் உடன் நிகழும் பெரும் முட்டல் மோதலில் மீண்டும் சென்னையை அங்கிலேயருக்கே இரு மடங்கு தொகைக்கு விற்று விட்டு சொந்த நிலம் போகிறான். இப்படி அவர்களுக்குள் அவர்கள் வந்து இறங்கி கட்டிக்கொண்ட கோட்டைகள் வாங்கி விற்கப்பட்டிருக்கின்றன.

பொதுவாக அந்தக்காலத்தில் நெல்லை பக்க பாட்டையாக்கள் பேராண்டிகளுக்கு வெள்ளைக்காரன் இந்த நாட்டை எப்படி எடுத்துக்கொண்டான் என்பதற்கு ஒரு கதை சொல்வார்கள். அது  “வெள்ளைக்காரன் போய் இறங்குற ராஜாகிட்ட எல்லாம் அவன் அந்த ராஜா பாக்காத பென்சிலு பேனா புத்தகம் இதையெல்லாம் பரிசா குடுப்பான். ராஜா சந்தோஷப்பட்டு உனக்கு என்ன வேணும்னு கேப்பார். அவன் ராசா ராசா ஒரு ஆட்டு தோல் அளவு துணி என்கிட்ட இருக்கு, அதை விரிக்கிற அளவு நிலம் வேணும்னு கேப்பான். ராசாவும் ஆட்டு தோல் அளவுதானே, சரின்னு சம்மதிப்பார். வெள்ளைக்காரன் ஆட்டு தோல் அளவுதான் துணியை கொண்டு வருவான். ஆனா அதை விரிச்சா ஊரே அந்த கூடாரத்துக்குள்ள வந்துடும். ராசாவும் குடுத்த வாக்க மீற முடியாம ஊரை குடுத்துருவார்.” இப்படியாக போகும்.

உண்மையும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கிறதுவெள்ளையர், ராஜா வசம் ஒருவன் துப்பாக்கி வைத்து  சுட்டால், அவனை மையமாக கொண்டு, துப்பாக்கி குண்டு சென்று விழும் புள்ளியை வெளி வட்டமாக வரைந்தால் வரும் பரப்பு நிலத்தை உரிமை கொண்டு வாங்கி இருக்கிறார்கள். அதில் வேலி கட்டி கோட்டை கட்டி அந்த எல்லைக்குள் தங்கள் நிலத்தின் சட்ட திட்டம் எதுவோ அதை நிறுவிக் கொள்கிறார்கள். கடலூர் கோட்டை முதல் தரங்கம்பாடி கோட்டை வரை இவ்விதம்தான் உரிமை பெறப்பட்டிருக்கிரது. 1857 இல் மொத்த இந்தியாவையும் மாட்சிமை தாங்கிய மகாராணியார்எடுத்துக்கொள்ளும்போது, நிறைய சிக்கல்கள் முளைக்கிறது. முதல் சிக்கல்  நான்கில் ஒரு பகுதி சமஸ்தானங்கள் வசம் இருக்க இதில் எது வரை அவரது நிலம்?.  யார் யார் அவரது ஆட்சிக்கு கீழ் வரும் குடிகள்? என்பது.

தொடர் பஞ்சங்கள்,சாவுகள், தக்கிகள் செய்த கொலைகள், செத்து போன தக்கிகள் எல்லா பலிகளுக்கும் என்ன எண்ணிக்கை? எதற்குமே கணக்கோ முறையோ அற்ற நிலையில்தான் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் கொள்ளை நடந்திருக்கிறது. அதை எவ்விதம் சீரமைப்பது? அன்று முதல் சுதந்திர நாள் வரை ஆங்கிலேய அரசு, நில அளவை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, கலாச்சார மானுடவியல் பட்டியல் இவற்றை உருவாக்கிய பெரும்பணியை காண்கிறோம். இதில் மானுடவியலில் காலின் மக்கன்சி முதல் எட்கர் தர்ஸ்டண் வரை பங்களித்த முன்னோடிகள் பலர்இதில் விளைந்த நன்மை என்றால் ஒட்டு மொத்தம் என்று இயங்கிய இந்திய சமூகமும் முழுமையும் குடிமை கணக்கு துவங்கிதனித்தனியே  அடையாளம் கண்டு, வகைப் படுத்தப்பட்டு, படிநிலை காணப்பட்டு, உட்பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டு அட்டவணை செய்யப்பட்டமை. தீமை என்ன என்றால், இந்திய சமூகம் தன்னை மதம் சாதி அதன் உட்பிரிவு எண்ணிக்கை பலம் அளிக்கும் அதிகாரம் சார்ந்து சாதி சார்ந்துநான்எனும் புதிய அடையாளத்தை கண்டு கொண்டமை. ஆரிய திராவிட இனம், இந்தியா பாகிஸ்தான், இந்து பிறர் பிரிவினை போன்ற மீள இயலா நிரந்தர நச்சு சூழலில் இந்திய சமூகம் சிக்கிக்கொண்டமை.

இதில் தக்கிகள் முதல் தமிழக நரிக்குறவர் வரை யிலான நாடோடி சமூகத்தின் தோற்றம் என்பது எட்டாம் நூற்றாண்டு தொடங்கி தொடர்வது. படை வீரர்களாக இருந்து, அவர்களின் அரசன் தோற்க, எதிரி மன்னன் வசம்  அடிமைகளாக ஆக விரும்பாமல் தப்பி காட்டுக்குள் ஓடி, அவ்விதமே நாடோடி வாழ்வில் தகவமைந்தோர் இவர்கள் என்பதே இந்த சமூகத்தின் பொதுவான துவக்கம். அராஜக சூழலில் மராட்டிய குதிரை படையினர் பரங்கிப்பேட்டையில் வந்து கொள்ளையடிக்கும் சித்திரத்தை அனந்தரகம்பிள்ளை நூலில் காண்கிறோம். இதன் நீட்சியே தக்கிகள்இதே போல குஜராத் மராட்டியம் ( வீர சிவாஜியின் படை வீரர்கள்இவற்றில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே தமிழ் நிலத்து நரிக்குறவர்கள்.  

இத்தனை சிடுக்குகள் கொண்ட சமுக இயக்கத்தைத்தான் ஆங்கிலேயர்கள் வகைப்படுனார்கள். குற்றப் பரம்பரை முதல் பட்டியல் இன sc st வரை திட்டவட்டம் செய்தார்கள். ஆட்சி செய்ய கிடைக்கும் வசதியின் பொருட்டு, அதுவரை அவர்கள் அறியாஇயக்கநிலையில் இருந்த இந்திய சமூக நதியை, தேங்கி உறைய வைத்தார்கள்இதை அவ்விதமே ஏற்று அதற்குள் தேவையான மாற்றங்கள் எனும்படி நடைமுறைக்கு வந்ததே சுதந்திர இந்தியக் குடியரசு.

இந்த அடிப்படை சித்திரத்தின் பின்புலத்தில் வைத்து கரசூர் பத்மபாரதி எழுதிய நரிக்குறவர் இன வரைவியல் நூலை வாசிக்கப் புகுந்தால் அந்நூல் வாசகர் அகத்தில் கொள்ளும் விரிவு அலாதியானது. குஜராத்தி, ஜோகன், மேமாடோ,டாபி, சேனியோ எனும் ஐந்து பிரிவுகளில் மொத்த இந்திய குறவர்களும் அடங்கி விடுவர். இந்த ஐந்தினுள் எருமை பலி கேட்கும் காளி தெய்வத்தை குல தெய்வமாக கொள்வோர், மற்றும் ஆடு பலி கேட்கும் துர்கா தெய்வத்தை குல தெய்வமாக கொள்வோர் எனும் அடிப்படையான இரண்டு பிரிவு. இதற்குள் பல்வேறு உட்பிரிவுகள் என்று அமைந்த நரிக்குறவர் சமூகத்தில், தமிழகம் வந்து அமைந்தோர் தங்களை வீர சிவாஜி படை வீரர்கள் என்று சொல்கிறார்கள்

ஐந்து பிரிவு இரண்டு வழிபாட்டு வகை எனினும் இவர்கள் அனைவரும் பூர்வ கதையால் ஒரே சகோதரர்களின் வம்சாவழி என்றே தங்களை அடையாளம் காண்கிறார்கள். இவை போக லம்பாடி, குடுகுடுப்பைகாரன், குறவர் , இந்த மூன்று பிரிவும் ஒரே சகோதரர்களின் வம்சாவளி என்றொரு கதையும் இவர்கள் வசம் உண்டு. சீதா தேவி அளித்த சாபம் கொண்டே இவர்கள் இவ்விதம் வாழ நேர்ந்தது.

வாக்ரி என்பது இவர்கள் தங்களை குறிப்பிடும் பெயர். வாக்ரி எனில் கொச்சை மராட்டியில் புலி என்றும், குஜராத்தில் குருவி என்றும் பொருளாம். இவர்களுக்குள் மட்டுமே புழங்கும் தனி மொழிக்கு வாக்ரி போலி என்று பெயர். பெரிதும் மராட்டி, உருது, குஜராத்தி கலந்து இந்தியாவின் பிற பத்து மொழிகளும் இணைந்து உருவான உருமாறிக்கொண்டே உயிர்த்திருக்கும் மொழி. ஸ்ரீனிவாசவர்மா போன்றோர் இந்த பேச்சு மொழியை எழுத்துக்கு கொண்டு வந்து இந்த சமூகம் அல்லாத பிறரும் அதை புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் செய்திருக்கிறார்.

நூலாசிரியர் பத்மபாரதி இவர்களுடன் தங்கி, பழகி இவர்களின் பிறப்பு முதல் திருமணம் உள்ளிட்டு இறப்பு வரை அத்தனை சடங்குகளையும் இவர்களின் வாக்ரி போலி மொழியில் அவற்றின் அடையாளத்துடன் பதிவு செய்திருக்கிறார். இந்த சமூகத்தின் ஆண்கள் ஏன் குடுமி எடுக்க கூடாது? பெண்கள் ஏன் இடைக்கரவு முடி அகற்ற கூடாது? இப்படி அவர்களின் ஒவ்வொரு செய் செய்யாதே வுக்கும் பின்னால் உள்ள அவர்களின் நம்பிக்கைகள், தெய்வங்கள் பேய்களின் கதைகள் அனைத்தும் இந்நூலில் ஆவணம் கண்டிருக்கிறது. அவர்களின் கூட்டு குடும்ப முறை, மணம், விவாகரத்து, பஞ்சாயத்து, குடும்பத்தில் ஆண் பெண் நிலை, வேலை பகிர்மானம், இவர்களின் வாழிடம் அவர்களின் பொருளாதார நிலை, அவர்கள் செய்யும் நரி பல், பந்தய புறா, சண்டை சேவல், ஆராய்ச்சிக்கு வெள்ளெலி, உணவுக்கு கொக்கு காடை போன்ற  வணிகம், இவர்களின் வைத்தியம், வேட்டை முறை என அனைத்தையும் பேசும் இந்த நூலில் எனக்கு பிடித்த அம்சங்கள் இரண்டு. ஒன்று இவர்கள் சுயமாகவே துப்பாக்கிகள் தோட்டாக்கள் வெடிமருந்து செய்யும் வகைமை. இரண்டு இவர்களின் வழிபாட்டு முறை

சிவன், பெருமாள் இவர்களின் பெருந்தெய்வம், காளி, மகேஸ்வரி இவர்களின் குல தெய்வம் அதன் பின்னர் சிறு தெய்வங்கள். இந்த வரிசையில் வணங்கும் இவர்களின் குடியில் ஒவ்வொரு குடும்பமும் வைத்திருக்கும் சாமி மூட்டை தான் இவர்களின் ஒரே சொத்து. புனித சொத்து. ரத்த பலி வழிபாடு செய்யும் இவர்களில், பெண் யாரும், சாமி மூட்டையை தொட கூடாது அது தீட்டு. (இந்த புனிதம் தீட்டு எனும் நிலைகள் நமது பத்தாம் க்ளாஸ் அறிவு ஜீவிகள் ஒப்பிக்கும் ப்ராமணீய சதி எனும் நிலையை கடந்த வேறு ஆழம் கொண்டவை என்று நிரூபிக்கும் சான்றுகளில் மற்றொன்று.) இவர்கள் பிரிவுகள் இடையே சண்டை வந்தால் இந்த சாமி மூட்டையை எதிரி எரித்து விடுவதே இவர்களுக்கு இழைக்கும் பெரும் அநீதியாக கருதப்படுகிறது. அதே போல தனி மனித தகராறில் ஒரு நரிக்குறவர் குடுமி பறி போனால், அல்லது தொட்டு இழுக்கப்பட்டால் அந்த குறவர் கிட்டத்தட்ட தற்கொலை எல்லைக்கு போய் விடுவார். சாமியாடுவது துவங்கி இவர்களின் அத்தனை வழிபாட்டு முறையும் பேசும் இந்த நூல், அந்த வழிபாட்டின் பின்னிற்கும் அத்தனை வழக்காறுகளையும் தெய்வக் கதைகளையும் பேசுகிறது. தெய்வம் என்றால் சொர்க்கம் நரகமும் உண்டு தானே. இவர்களின் நரகத்தில் இவர்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய தண்டனை என்பது இவர்களுக்கு உணவாக கிடைக்கும் கீரை சோறு. எண்ணி சிரிக்கும் பல தருணங்களும் இந்த நூலில் உண்டு. இரா முருகன் தனது 1975 நாவலில் குறவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் தருணம் ஒன்றை சிரிக்க சிரிக்க எழுதி இருப்பார். அது அத்தனையும் உண்மையாகவே இங்கே ஆவணம் கண்டிருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு குறவர் குழந்தைக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் மணிப்பர்ஸ்.

புறப்பாடு கதையில் ஒரு தருணம் உண்டு. எப்படி மிரட்டினாலும் பொய் சொல்ல மறுக்கும் குறவர் ஒருவர் வருவார். அதுவும் உண்மை. இவர்கள் தங்கள் குல தெய்வம் மேல் பொய் சொல்லமாட்டேன் என சத்தியம் எடுத்துக்கொண்டால், அவர்கள் குல தெய்வம் அவர்களை கைவிட்டு விடும் எனும் பயத்தில் அதை செத்தாலும் மீற மாட்டார்கள். இவர்கள் பஞ்சாயத்து முறைகள் மிக கடுமை கொண்டவை. இவர்கள் இனத்தை விட்டு வேறு சாதி ஆணுடன் இவர்கள் பெண்ணோ, வேறு பெண்ணுடன் ஆணோ போய்விட்டால் இவர்கள் கிட்டத்தட்ட சாதி விலக்கம் செய்ய படுகிறார்கள். இவர்களின் தெய்வம் இனி இவர்கள் உடன் வராது.

மார்வாரிகள் இவர்களின் சகோதரர் என்றொரு கதை இவர்கள் வசம் உண்டு. இவர்களில் சாதி படி நிலை கறாராக கடைபிடிக்க படுகிறது. இன்றைய தேதியில் mbc இல் வரும் இவர்கள், கிட்டத்தட்ட இன்றைய sc பிரிவில் வரும் அனைத்து சமூகத்தையும் தங்களுக்கு கீழானவர்கள் என்றே கருதுகிறார்கள். அதே சமயம் இன்றைய நிலையில் அரசு தரும் வசதிகள் வேண்டி தங்களை st வரிசையில் சேர்க்க அரசுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

தொண்ணூறுகளுக்கு பிறகு தீவிர தமிழ் இலக்கிய களத்தில் போர்ஹே பேதியுடன் பின்நவீனத்துவ கோட்பாடுகளும் பீறிட்டு அடித்தது. விளிம்பு நிலையில் தள்ளாடிக்கொண்டிருப்பவற்றையெல்லாம் மையதில் கொண்டு வந்து கம்பாக நிறுத்தி விட திருவுளம் கொண்டனர் பின்நவீன எழுத்தாளர்கள். என்னென்னவோ நடந்தது. இன்று அவற்றை மக்கா குப்பைகள் கிடக்கும் பச்சை டப்பாவில்தான் சென்று தேட வேண்டும். அந்த ஓடையில் வந்த கலக எழுத்தாளர் ஒருவர் தன்னை குறவர் குடித் தோன்றல் என்றே விளித்துக் கொண்டார். சரிதான் குறவர் வாழ்வியல் சார்ந்து அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று பார்த்தால் அவரது பின்நவீன இலக்கியம் போலவே பூஜ்யம்.  (மாறாக  மேலை மரபை எடுத்துக்கொண்டால் ஓரான் பாமுக் ஒரு எழுத்தாளராக தான் முளைத்து வந்த இஸ்தான்புல்லின் வரலாறு சமூக அரசியல் கலை கலாச்சாரம் முழுமையையும் அதன் ஒரு பகுதியாக தன்னை நிறுத்தி இஸ்தான்புல் எனும் நூலே எழுதி இருக்கிறார்). தமிழ் பின் நவீன சூழலுக்கே உள்ள திராணி இன்மை, அதை மீண்டும் இந்த நரிக்குறவர் இன வரைவியல் நூல் வழியே ஒரு வாசகர் அடையாளம் காண இயலும். இதுதான்நமது கதை‘. இதை எழுத திராணி பின்நவீனதுவதுக்கு கிடையாது. இந்தநமது கதையை‘  எழுதிக்கட்ட அர்ப்பணிப்புடன் அதை வெளிக்கொணர ஒரு பத்ம பாரதிதான் வர வேண்டி இருக்கிறது.

2022 தமிழ் விக்கி தூரன் விருது பெரும் முனைவர் பத்ம பாரதி அவர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது : கமல்ஹாசன் வாழ்த்து
அடுத்த கட்டுரைடி.கே.சி.ஒரு மையம்