இனிய ஜெயம்
கெளதம் கோஷ் இயக்கிய 1974 வங்கப் பஞ்சம் மீதான ஆவணப்படம் ஒன்று கண்டேன். நேரு சாஸ்திரி என்று தலைவர்கள் தொடர்ந்து பஞ்ச நிலைக்கு எதிராக போராடி வந்த சூழலில், சுதந்திர இந்தியா கண்ட பெரும் அழிவுகளில் மேலும் ஒன்று. ஒரு வருடம் மட்டுமே நீடித்தாலும் அந்த பஞ்சம் பல் நூறு பேர் உயிரை பறித்திருக்கிறது. முதன்மை காரணங்கள் இரண்டு. ஒன்று வங்கப் பிரிவினை. (அதன் பின்னர் அந்த நிலம் எழ பல ஆண்டுகள் பிடித்தது). அகதிகள் பெருக்கம். இந்த அரசியல் நில பிரிவினை எல்லாம் இயற்கைக்கு புரியாது. ப்ரமபுத்ரா வெள்ள சேதம், தொடர்ந்து உயர்ந்த உணவு பதுக்கல். வங்க நிலம் முழுதும் பரவிய பஞ்சம் கல்கட்டா வரை வந்து தீண்டி இருக்கிறது.
அகதிகள் பெருக்கம், பஞ்சம் பிழைக்க வந்தோர் பெருக்கம், உணவு பதுக்கல். துல்லியமான வர்க்க பேதத்தில் அடித்தள மக்களை சூறையாடி சென்றிருக்கிறது பஞ்சம். இங்குள்ள அன்றைய காங்கிரஸ் முதல்வர் சித்தார்த்த ரே நிலைமையை சமாளிக்க முடியாமல், பிரதமர் இந்திரா காந்தியை ஏமர்ஜன்சி கொண்டு வரும் அளவுவரை தள்ளி இருக்கிறார்.
இந்த குழப்பமான, அரசாங்கம் லீவில் போய்விட்ட 1974 பஞ்சத்தை காட்சிப்படுத்துகிறது இவ்வாவணம். கஞ்சிக்கு அலைமோதும் பராரிகள் முதல் தெருவோரம் செத்து கிடக்கும் குழந்தை வரை வித விதமான தொந்திரவு தரும் காட்சி வெட்டுகள் வழியே நகரும் இப்படம் இறுதியில், அறுவடையில் கதிர் அருவாள் ஏந்திய கையில் உறையும் போது ஒரு கணம் கண்கள் கலங்கி தொண்டை கரகரத்து விட்டது. எத்தனை அடி வயிற்று ஆவேசங்கள் கூடி நிகழ்ந்த அரசியல் மாற்றம். காங்கிரஸ் போனது. எமர்ஜன்சி போனது. இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்தது. மேலே இந்த ஆவணம் பேசிய எதுவுமே பின்னரும் மாற வில்லை என்பதே வரலாறு.
கடலூர் சீனு