கிறிஸ்து, நான், காட்சன் – கடிதம்

ஜெமோ

சியமந்தகம் இதழில் இந்தக் கடிதத்தை கண்டேன். ஒரு போதகர் எழுதியிருந்தார். நீங்கள் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் செய்வதுண்டு என்றும், அவரே செய்ததாகவும் எழுதியிருந்தார். இது உண்மையான செய்தியா? நீங்கள் இந்துவா கிறிஸ்தவரா?

ஶ்ரீராம்

கிறிஸ்துவுக்கு அணுக்கமான அண்ணன் – காட்சன் சாமுவேல்

அன்புள்ள ஶ்ரீராம்

என்ன சந்தேகம்? நான் எங்கே ஒளித்து வைத்திருக்கிறேன்? எந்த மேடையில் சொல்லாமல் இருந்திருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆன்மிகமாக ஏற்றுக்கொண்டவன். என் ஞானகுரு, என் தெய்வம், நான் அடிபணியும் கால்கள், நான் வேண்டிக்கொள்ள கேட்கும் காதுகள்.

கிறிஸ்து இல்லாமல் எனக்கு ஆன்மிகம் இல்லை. அத்வைதியான எனக்கும் என் ஆசிரியர்களுக்கும் கிறிஸ்து இன்றி மெய்மை இல்லை. அவர்கள் கிறிஸ்துவும் கிருஷ்ணனும் நிகர்செய்யும் ஒரு தளத்தை முன்வைத்தவர்கள். நான் பிரார்த்தனை செய்யாத ஒரு வாரம்கூட இல்லை. பைபிள் படிக்காமல் ஒரு வாரம் கூட கடந்து செல்வதில்லை.

என் ஆன்மிகம் உங்கள் அரசியலுடன் பேசமுன்வராது. நான் இந்து. ஆகவேதான் கிறிஸ்துவை வணங்குகிறேன். உங்கள் அரசியலே இந்துமதம் என என்றேனும் ஆகுமென்றால் இந்து அல்ல என்று சொல்ல தயங்க மாட்டேன். இது ஞானிகளின் பூமி. உங்கள் அரசியலை எதிர்க்கும் ஆற்றல் அந்த மெய்யுணர்வாளர்களின் சொற்களுக்கு உண்டு என நம்புகிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது விழா அறிவிப்பு
அடுத்த கட்டுரைகுடவாயில், கடிதம்